Last Updated : 22 Sep, 2017 09:10 AM

 

Published : 22 Sep 2017 09:10 AM
Last Updated : 22 Sep 2017 09:10 AM

உலகத்தைப் பற்றிக் கவலைப்படாத ஜெர்மனி!

பி

ரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய மக்கள் தொகை மிகுந்த மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கும் இது தேர்தல் ஆண்டு. இந்தத் தேர்தல்கள் அந்த நாடுகளுக்கு மட்டுமில்லாமல் ஐரோப்பாவுக்கும் உலக அரசியல் போக்குகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைத்தது, அல்லது எவ்வளவு சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர் என்பதைவிட, இந்தத் தேர்தல் பிரச்சாரங்களில் என்ன பேசப்பட்டது என்பதுதான் முக்கியம்.

பிரெஞ்சுக் குடிமகளான நான் இப்போது லண்டனில் வசிக்கிறேன். பிரிட்டனில் ஜூன் மாதம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘பிரெக்சிட்’ குறித்து ஏன் அதிகம் பேசவில்லை என்று புரியாமல் தவித்தேன். வரலாற்று முக்கியத்துவமும், வரலாற்று ரீதியாக விளைவுகளை ஏற்படுத்தவல்லவையுமான ஒரு விஷயம் குறித்து எப்படி தேர்தலில் விவாதிக்காமல் ஒதுக்க முடிகிறது? இது குறித்து ‘கார்டியன்’ பத்திரிகைத் தோழர்களிடம் வினவினேன். அவர்கள் சொன்ன பதில் வியப்பை ஏற்படுத்தியது. “2016-ல் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பின்போதே ‘பிரெக்சிட்’ குறித்துத் தீவிரமாக விவாதித்து அனைவருக்கும் மனம் புண்ணாகிவிட்டது; வாக்கெடுப்பு முடிவு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மனப்புண் ஆற, நாடு தன்னுடைய எல்லைக்குட்பட்ட விவகாரங்களைப் பற்றி மட்டும் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்றனர்.

ஜெர்மனியிலும் உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி மட்டும் பார்க்கும் போக்கைக் கண்டு வியந்தேன். ஜெர்மனி தேர்தல் பிரச்சாரத்தில் ஐரோப்பாவைப் பற்றிய பேச்சே இடம்பெறவில்லை. பிறகு, உலகம் பற்றி எங்கேயிருந்து பேசுவது? ஜெர்மன் தேர்தல் முடிவுகள், அலக அளவில் விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளைவிட ஜெர்மனியில்தான் அதிகம் பேர் தங்களை ‘மையவாத கருத்துள்ளவர்கள்’ என்று கூறிக்கொள்கின்றனர். பிற நாடுகளில் வலது அல்லது இடது சித்தாந்தங்களை ஆதரிப்பதைப்போலத் தாங்களும் செய்ய ஜெர்மானியர்கள் விரும்பவில்லை.

செப்டம்பர் 24 தேர்தல்

ஜெர்மனியில் செப்டம்பர் 24-ல் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்து யார் பிரதமராவார் என்பதில் சந்தேகமே கிடையாது. நான்காவது முறையாக பிரதமர் பதவியை ஏற்கவிருக்கிறார் ஏஞ்செலா மெர்க்கெல். ட்ரம்ப், புதின், எர்டோகன், வட கொரிய அதிபர் போன்ற விவகாரமான அரசியல் தலைவர்களுடன் ஒப்பிட்டால் ஏஞ்செலா மெர்க்கெல் நல்லவர், உலக வம்புக்குப் போவதில்லை, உள்நாட்டு விவகாரங்களில் அதிகக் கவனம் செலுத்துகிறார் என்பதே ஜெர்மானிய வாக்காளர்களின் பரவலான கருத்தாக இருக்கிறது. உலகப் பிரச்சினைகளைக் கேட்பதிலோ அவற்றைத் தீர்ப்பதிலோ ஜெர்மானியர்களுக்கு ஆர்வம் இல்லை. மெர்க்கெல்லின் ‘கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன்’ (சி.டி.யு.) கட்சி, தங்களுக்கு வாக்களித்தால் அனைவருக்கும் நல்வாழ்வு என்று உறுதியளித்திருக்கிறது. அதுபோதும் அவர்களுக்கு!

பட்டவர்த்தனமாகச் சொல்வதானால் பிரிட்டிஷ் காரர்கள் தங்களுடைய தேவையிலேயே குறியாக இருப்பார்கள். ஜெர்மானியர்களும் அப்படியே – காரணம், அவர்கள் இப்போது சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலேயே அவர்களுடையதுதான் பெரிய, பணக்கார, மிகுந்த வலிமைவாய்ந்த நாடு. ஐரோப்பிய நாடுகளிலேயே அரசியல் ஸ்திரத்தன்மை அதிகம் உள்ள நாடும் அதுவே. எனவே பிரிட்டிஷ்காரர்களைப் போலவே - ஆனால் வேறு காரணத்துக்காக – உலக விவகாரங்களிலிருந்து விலகி விடுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ‘பிரெக்சிட்’ குறித்து ஜெர்மானிய வாக்காளர்களும் அக்கறை காட்டவில்லை. ஜெர்மானிய அரசியல்வாதிகளும் முழுதாகப் புறக்கணித்துவிட்டனர்.

பிரான்ஸ் குறித்து இங்கே ஒரு வார்த்தை: பிரிட்டன், ஜெர்மனி நாடுகளைப் போல அல்லாமல் பிரான்ஸ் ஒரு விதிவிலக்கு. ஐரோப்பிய விவகாரம் முக்கியத்துவம் தந்து விவாதிக்கப்பட்டது. ஐரோப்பாவைக் கொண்டாடினார் எம்மானுவேல் மெக்ரான். முழு ஐரோப்பாவையும் ஒரு கட்டமைப்பாகக் காணும் பிரெஞ்சுக்காரர்களின் உணர்வுகளுக்கு அவர் மதிப்பளித்ததுதான் அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஐரோப்பாவில் பிரான்ஸுக்கு மிகப் பெரிய இடம் ஒன்று இருப்பதை அவர் நினைவூட்டினார். பிரெஞ்சுக்காரர்களுக்குப் புதிதாக ஏற்பட்டிருக்கும் நாட்டுப்பற்றுக்கு இணையாக ஐரோப்பாவை அவர் உயர்த்தினார்.

வரலாற்றுப் பாடம்

ஜெர்மனியில் நிலைமை பிரிட்டனைப் போலவே இருந்தது. பெர்லின், லீப்சிக், மியூனிக் ஆகிய நகரங்களில் அதிகாரிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களை, உள்ளாட்சிமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினேன். ‘ராபர்ட் பாஷ்’ அகாடமி இந்தத் தேர்தல் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காலத்தில் ஜெர்மானி வகிக்கக்கூடிய தலைமைப் பதவி குறித்துப் பேசப்பட்டது. “பிற நாடுகள் ஜெர்மனியிடம் எதிர்பார்ப்பதாகக் கூறப்படும் கருத்துகள் மிகையாக உள்ளன; நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம், ஆனால் உலக விவகாரங்களில் தலையிட்டுத் தீர்க்கும் ஆர்வம் இல்லை. வரலாறு நமக்கு உணர்த்திய பாடம் நினைவிலிருக்கிறது”.

“ட்ரம்ப் தொல்லைப்படுத்துகிறார்தான், அதற்காக உலக நாடுகளுக்குத் தலைமையேற்பது நம்முடைய தகுதிக்கு மீறியது” என்கிறார்கள். பலரும் எதிர்பார்த்ததற்கு மாறாக 2015-ல் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடி, ஜெர்மனியின் தேசிய அரசியலை மாற்றிவிடவில்லை. பிரிட்டனில் அது பிரெக்சிட்டுக்கு வழிவகுத்தது. பிரான்சில் லீ பென் 1 கோடி வாக்குகளைப் பெற முடிந்தது. 2015-ல் ஏராளமான அகதிகள் ஜெர்மனிக்குள் வந்தனர். 2 ஆண்டுகள் ஆன பிறகும் ஜெர்மனி அதுகுறித்து ஏதும் அலட்டிக்கொள்ளவில்லை, அதை விரும்பவோ, விவாதிக்கவோ கூட ஜெர்மானியர்கள் விரும்பவில்லை. “அகதிகள் விஷயத்தில் நாங்கள் செய்தது பெருமைக்குரியது. அகதிகளை எங்கள் நாட்டு பண்புப்படி வரவேற்று உபசரித்தோம், ஆனால் மீண்டும் அகதிகள் வருவதை விரும்பவில்லை” என்றும் கருத்து தெரிவித்தனர்.

இனி நடைபெறவுள்ள தேர்தலில் வலதுசாரி கட்சியொன்று வலுவாகப் போகிறது. ஜனநாயகத்துக்கு மாற்று என்ற பெயருள்ள வலதுசாரிக் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. கிழக்கு ஜெர்மனியில் அதற்கு ஆதரவு கிடைக்கலாம். 1990-ல் இரண்டு ஜெர்மனிகளும் இணைந்த பிறகு பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டுவிடவில்லை. அகதிகளைக் கொண்டுவந்து மறுவாழ்வு அளிப்பதைவிட, முன்பு கிழக்கு ஜெர்மனி என்றும் மேற்கு ஜெர்மனி என்றும் பிரிந்திருந்த எங்களிடம் முதலில் ஒற்றுமையை ஏற்படுத்துங்கள் என்று மக்கள் கேட்கின்றனர்.

ஒற்றுமையின் அவசியம்

2015-ல் ஜெர்மனி தன்னுடைய மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. அதே சமயம் ஜெர்மானியர்கள் அனைவரும் அப்படியே தொடர்ந்து தங்கள் நாடு அகதிகளை ஏற்க வேண்டும் என்று விரும்பிவிடவில்லை. ஐரோப்பாவுக்கோ உலகுக்கோ ஜெர்மனி தலைமையேற்பதை அவர்கள் விரும்பவில்லை.

தன்னுடைய அரசியல் கொள்கைகளையும் உருவத்தையும் காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளும் ஏஞ்செலா மெர்க்கெல், மக்களுடைய உணர்வுகளுக்கு ஏற்ப கருத்துகளையும் கொள்கையையும் மாற்றிக்கொண்டுவிட்டார்.

தன் விவகாரத்தில் மட்டும் ஜெர்மனி அக்கறை செலுத்தினால் அது ஐரோப்பாவுக்கே ஆபத்தாக முடியும். பிரெக்சிட், ட்ரம்ப், ரஷியா, துருக்கி, பால்கன் நாடுகள், ஆப்பிரிக்கா, சீனா, பருவநிலை மாறுதல், அகதிகள் இடப்பெயர்வு ஆகிய பிரச்சினைகளை ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக இருந்து எதிர்கொள்ள வேண்டும்.

எல்லா நாடுகளிலும் அரசியல் என்பது உள்நாட்டு விவகாரங்களுக்குத்தான். வெளிநாட்டுத் தொல்லைகளிலிருந்து மெர்க்கெல் காப்பாற்றுவார் என்று நம்புவதால் ஜெர்மானியர்கள் அவருக்கு மீண்டும் ஆதரவு தருவர். ஐரோப்பாவையோ உலகத்தையோ மாற்றுவது அவர்கள் நோக்கமல்ல. விதிகளை மதிக்கத் தெரிந்த ஜெர்மானியர்கள் தங்கள் நாட்டு எல்லை தாண்டி ஆற்ற வேண்டிய முக்கிய கடமை எதுவுமில்லை என்றே நினைக்கிறார்கள்.

தமிழில்: சாரி, ©: தி கார்டியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x