Last Updated : 24 Feb, 2023 06:50 AM

 

Published : 24 Feb 2023 06:50 AM
Last Updated : 24 Feb 2023 06:50 AM

இடைத்தேர்தல்கள் உணர்த்துவது என்ன?

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தல்களுக்குத் தனி இடம் உண்டு. இடைத்தேர்தல் வழியாக மாநில அரசியலில் கவனத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தியவர்கள் உண்டு. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் ஆட்சியை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல்களாக இடைத்தேர்தல்கள் கருதப்பட்டன.

ஆனால், இன்றோ இடைத்தேர்தல் என்பது திருவிழா போலவும் மற்ற தொகுதி மக்கள் பொறாமைப்படும் அளவுக்கும் மாறிவிட்டது. தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைத்து, வெற்றியைப் பெற முனையும் போட்டிகளாக இடைத்தேர்தல்கள் சுருங்கிவிட்டன. ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்கு ஆளுங்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இவ்வளவு முக்கியத்துவம் தருவது தேவையா என்கிற கேள்வியை இது அழுத்தமாகவே எழுப்புகிறது.

தலைகீழ் மாற்றம்: இடைத்தேர்தலை அணுகும் போக்கு, மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் தலைகீழாக மாறியிருப்பதைக் கடந்த கால் நூற்றாண்டு கால இடைத்தேர்தல்கள் உணர்த்துகின்றன. திமுகவும் அதிமுகவும் ஆளுங்கட்சிகளாக இருக்கும் காலகட்டத்தில், இந்த இரண்டு கட்சிகளுமே இடைத்தேர்தல் வெற்றியை கௌரவப் பிரச்சினையாக அணுகுவதையும் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக விதவிதமான வியூகங்களைப் பின்பற்றுவதையும் தமிழ்நாடு கண்டுவருகிறது.

திமுகவுக்கு ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்றால், அதிமுகவுக்கு ‘கும்மிடிப்பூண்டி - காஞ்சிபுரம் ஃபார்முலா’ என்று இரண்டு கட்சிகளுக்குமே ‘பெயர் சொல்லும்’ இடைத்தேர்தல்கள் உண்டு. ஆளுங்கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை, ஆட்சிக்கான அங்கீகாரத்தை மக்கள் மீண்டும் வழங்கிவிட்டார்கள் என்று ஆளுங்கட்சி மார்தட்டிக்கொள்ளவும், ஆளுங்கட்சியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கவும் மட்டுமே இடைத்தேர்தல் உதவுகிறது.

அதற்காகப் பின்பற்றப்படும் ‘ஃபார்முலா’க்கள் கட்சிகள் சார்ந்து மாயத் தோற்றத்தை உருவாக்க மட்டுமே பயன்படுகின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு சந்தித்த முதல் பொதுத் தேர்தலும் அதுதான். அதன் பிறகான காலத்தில் பல்வேறு இடைத்தேர்தல்களைத் தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. இதில் 58% வெற்றியை ஆளுங்கட்சிகள் பெற்றுள்ளன; எதிர்க்கட்சிகள் 42% வெற்றியைப் பெற்றுள்ளன.

குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளுங்கட்சிகள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற அளவுக்குத் தேர்தல் களத்தை அரசியல் கட்சிகள் மாற்றிவிட்டிருக்கின்றன. கருணாநிதி - ஜெயலலிதா இரு துருவங்களாக இருந்த காலம் தொடங்கி, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்று வாக்காளர்களே நினைக்கும் அளவுக்கு மாறிவிட்டதுதான் சோகம்.

ஆளும்கட்சியின் ஆதிக்கம்: தமிழ்நாடு இடைத்தேர்தல்கள் தொடர்பான சில புள்ளிவிவரங்களும் அதையே உணர்த்துகின்றன. 1999 - 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 34 இடைத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 32 இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. 1999ஆம் ஆண்டில் நத்தம் தொகுதியிலும், 2004இல் மக்களவையோடு சேர்ந்து நடைபெற்ற மங்களூர் இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

2019இல் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுகவும் 9 தொகுதிகளில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவும் வெற்றி பெற்றன. மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து நடைபெற்றதால், மக்களவைத் தேர்தலின் தாக்கமும் அந்த இடைத்தேர்தலில் எதிரொலித்தது.

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றியையும் அதிமுக கூட்டணி படுதோல்வியையும் சந்தித்திருந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் ஒத்திவைக்கப்பட்டு நடந்த வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது.

அந்தத் தேர்தல் பொதுத்தேர்தலோடு சேர்த்து நடைபெறாமல் தனித்து நடைபெற்றதால் வாக்கு வித்தியாசம் தலைகீழாக மாறியிருந்தது. இதேபோல விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களும் வழக்கமான முடிவுகளையே எதிரொலித்தன. இவையெல்லாமே கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திய அடையாளங்கள்.

தொடரும் புகார்கள்: இப்போது திமுக ஆட்சிக்குவந்த பிறகு முதல் இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கில் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் அத்தனை அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் தொகுதியில் முகாமிடுவது, பணத்தை வாரியிறைப்பது, தேர்தல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிடுவது, வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்களை வழங்குவது, வாக்காளர்களை ஓரிடத்தில் ஒன்றுதிரட்டித் தனியாகக் கவனிப்பது, இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுப் பணப் பட்டுவாடா செய்யப்படுவது, வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுப்பது எனக் கடந்த கால இடைத்தேர்தல்களின்போது என்னென்ன புகார்கள் கூறப்பட்டனவோ அவையெல்லாம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் சொல்லப்படுகின்றன.

இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை என்றபோதும், அந்தக் குறை தெரியாத அளவுக்குக் காங்கிரஸைவிட திமுகவே பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதையும் களத்தில் துடிப்பாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. இடைத்தேர்தலை ஓர் ஆளுங்கட்சி எந்த வகையில் அணுகுகிறது என்பதற்கும் இது ஒரு சிறு உதாரணம்தான்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சியாக திமுக என்னென்ன புகார்களைக் கூறியதோ, அதே புகார்களை திமுக ஆட்சியில் இருக்கும்போது இன்று அதிமுகவும் கூறுகிறது; நீதிமன்றம் செல்கிறது. ஆளுங்கட்சி மாறினாலும் இடைத்தேர்தல் என்றால், திமுக - அதிமுகவின் புகார்கள் மட்டும் மாறுவதில்லை என்பது நகைமுரண்.

ஆட்சி, அதிகாரப் பலத்தோடு ஆளுங்கட்சி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கும் எதிர்க்கட்சியாகத் தேர்தலை எதிர்கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை திமுகவும் அதிமுகவும் தெளிவாக உணர்ந்தே இருக்கின்றன. என்றாலும், ஆளுங்கட்சிக்குப் போட்டியாகப் பிரதான எதிர்க்கட்சியும் இன்று முட்டி மோதுவதைக் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் இடைத்தேர்தல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

தேவையற்ற ஆர்ப்பாட்டம்: பொதுவாக, இடைத்தேர்தல் முடிவால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஒரு மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஒரு கட்சி, இடையில் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு அதில் தோல்வியடைந்தால், மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாகப் பதவி விலகிவிடப்போவதில்லை. பதவி விலகியே தீர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க முடியாது. அப்படியிருக்க, ஓர் இடைத்தேர்தலுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படுமா என்கிற கேள்வி எழும் அளவுக்குத் தேர்தல் புகார்கள் ஏன் அணிவகுக்க வேண்டும்?

இடைத்தேர்தல் பாணியைப் பொதுத் தேர்தலிலும் புகுத்தியதன் விளைவால், 2016இல் அரவக்குறிச்சி, தஞ்சாவூர்; 2017இல் ஆர்.கே. நகர்; 2019இல் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலே நிறுத்தப்பட்ட அவமானம் தமிழ்நாட்டில் நடந்தேறியது. அந்த அளவுக்குத் தேர்தலை மாற்றிவிட்டதற்குச் சக்திவாய்ந்த அரசியல் கட்சிகளே காரணம்.

எந்த வகையில் தேர்தல் புகார்கள் வந்தாலும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கே உண்டு என்றாலும், அதைவிட அதிகப் பொறுப்பு தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் உண்டு. அனைத்துத் தரப்பினரும் அதைக் கடைப்பிடித்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும்.

- டி.கார்த்திக் | தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x