Last Updated : 09 Feb, 2023 06:48 AM

 

Published : 09 Feb 2023 06:48 AM
Last Updated : 09 Feb 2023 06:48 AM

இடைத்தேர்தல், இரட்டையர்கள்: அதிமுகவில் அடுத்து என்ன?

சில தேர்தல்களைத் தவிர்த்துவிட்டு அதிமுகவின் வரலாற்றை எழுதவே முடியாது. 1972இல் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், அதிமுகவைத் தொடங்கி திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் தன் வேட்பாளரை வெற்றிபெறச் செய்து, அதிமுகவின் அபார வளர்ச்சிக்கு அச்சாரமிட்டார்.

அவரது மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக உடைந்து, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அதிமுக ஜானகி, ஜெயலலிதா அணிகள் சந்தித்தன. ஒரு தோல்வி தந்த பாடம், இரு அணிகளையும் இணைய வைத்தது.

மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைத்தது. அப்போது ஒத்திவைக்கப்பட்டு மருங்காபுரி, மதுரை கிழக்கில் நடந்த தேர்தலில் - எதிர்க்கட்சியாக இருந்தபோதும் - கிடைத்த வெற்றி, அதிமுகவுக்குப் புதிய ஊக்கத்தையும், ஜெயலலிதாவின் தலைமைக்கு அங்கீகாரத்தையும் வழங்கியது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017இல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும்கூட அதிமுக வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தது. ஆளுங்கட்சியாகவும் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தும் இரட்டை இலையைப் பெற்று அதிமுக சந்தித்த தேர்தல் அது.

எனினும், சுயேச்சையாகக் களமிறங்கிய டிடிவி தினகரனிடம் அதிமுக தோல்வியடைந்தது. அந்தத் தேர்தலில் தொடங்கிய அக்கட்சியின் சறுக்கல், முடிவுறாமல் இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. இதோ, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அக்கட்சிக்குள் நிலவும் பிணக்கு என்ன முடிவைத் தரும் எனும் எதிர்பார்ப்பு தற்போது உருவாகியிருக்கிறது.

விசித்திர முன்னுதாரணம்: ஓர் இடைத்தேர்தலுக்காகப் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதும், தேர்தலில் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்தின் ‘பி’ விண்ணப்பப் படிவத்தில் கட்சியின் தலைவர் கையொப்பமின்றி, பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரித்த கட்சியின் அவைத் தலைவர் கையொப்பத்தைப் பெற்றிருப்பதும் அதிமுகவில் இதற்கு முன்பு நடந்திராத காட்சிகள்.

இனி, இந்தியாவில் அரசியல் கட்சிகள் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு இவையெல்லாம் முன்னுதாரணமாக இருக்கக்கூடும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இது நடைபெற்றிருந்தாலும், அது போன்ற ஒரு தீர்ப்புக்கு அதிமுகவை நகர்த்தி சென்றது ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும்தான்.

பொதுவாகத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்றம் குறுக்கிடுவதில்லை. அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாகத் தொடரப்பட்ட மூல வழக்கு இன்னும் தீர்ப்பு வராமல் நிலுவையில் இருப்பதால்தான், இபிஎஸ்ஸின் இடையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

அதனால்தான், இந்த வழக்கை ‘விசித்திரமான வழக்கு’ என்றது நீதிமன்றம். ஒரு வகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று இரட்டை இலைச் சின்னத்தில் அதிமுக வேட்பாளர் போட்டியிடும் சூழல் ஏற்பட்டிருப்பதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பும் வழி செய்திருக்கிறது.

ஓபிஎஸ்ஸுக்குப் பின்னடைவு: இந்த இடைத்தேர்தல் முடிவால் தமிழ்நாட்டில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆனால், அதிமுகவில் நீடித்துவரும் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகத் தொடரப்பட்ட வழக்கின் மூலம், இபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 பேரின் ஆதரவு கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது இபிஎஸ் பக்கம் பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான சமிக்ஞை.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மூல வழக்கின் தீர்ப்புக்கு அப்பால் இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் தன்னளவில் பல உத்திகளை மேற்கொண்டு பார்த்தார். பாஜகவின் ஆதரவைப் பெறுவது, அது முடியாதபட்சத்தில் பாஜக தேர்தலில் போட்டியிட்டால் ஆதரவளிப்பது, அதன்மூலம் இபிஎஸ் தரப்புக்கு நெருக்கடி தருவது எனச் சகல முயற்சிகளையும் செய்தார். எதிலுமே அவரால் வெற்றிபெற முடியவில்லை என்பதையே இறுதி முடிவுகள் உணர்த்துகின்றன.

பாஜகவின் நிழலில் அதிமுகவை வழிநடத்தி வருவதாக ஓபிஎஸ் - இபிஎஸ் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இந்த இடைத்தேர்தலுக்காக பாஜக ஆதரவைப் பெற ஓபிஎஸ் முயற்சித்த விதம், கட்சியில் தார்மிக நம்பிக்கையை அவர் இழந்துவிட்டதையே எடுத்துக்காட்டியது.

‘வேட்பாளரை விலக்கிக்கொள்ளுங்கள்’ என்று பாஜக சொன்னதை இப்போதும் அவர் கேட்க நேர்ந்திருக்கிறது. இப்போது இரட்டை இலைச் சின்னம் முடங்கக் கூடாது என்பதற்காகத் தங்களுடைய வேட்பாளரை விலக்கிக்கொள்வதாகவும், தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்கு கேட்கப்போவதாகவும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

புரியாத புதிர்: ஓபிஎஸ்ஸின் இந்தச் செயல்பாடுகள் பல கேள்விகளையும் எழுப்புகின்றன. முதலில் எந்தப் பொதுக்குழு, கட்சியைவிட்டு அவரை நீக்கியதோ, அதே பொதுக்குழு மூலம் வேட்பாளர் தேர்வை ஏற்க நேர்ந்ததே, அவருடைய பின்னடைவுக்கான முதல் படியானது.

ஓபிஎஸ் தரப்பை ஆதரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருவரும் இபிஎஸ் அறிவித்த வேட்பாளரான தென்னரசை ஏன் எதிர்க்கவில்லை அல்லது வேறு யார் பெயரையும் ஏன் பரிந்துரைக்கவில்லை என்பது புரியாத புதிர். ‘இரட்டை இலைச் சின்னத்தை முடக்கக் காரணமாக இருக்க மாட்டோம்’ என்று இப்போது சொல்லும் ஓபிஎஸ், 2017இல் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது அதே இரட்டை இலைச் சின்னம் முடங்கக் காரணமாக இருந்ததை யாரும் மறந்துவிடவில்லை.

பரதன்... பன்னீர்செல்வம்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக கூட்டணி களத்துக்கு வந்து 10 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதிமுக முகாமிலோ ஒரு சின்னத்தைப் பெறுவதற்கே முழு சக்தியையும் செலவழிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது சின்னம் இபிஎஸ் விரும்பியபடி கிடைத்துவிட்ட நிலையில், ஓபிஎஸ்ஸுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. நிலுவையில் உள்ள உச்ச நீதிமன்ற வழக்கு ஒருபுறம் இருக்கட்டும்... இபிஎஸ் நிறுத்திய வேட்பாளரே ஈரோடு கிழக்கில் நிற்கும் நிலையில், இனி ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார்? இபிஎஸ்ஸின் கை ஓங்கியுள்ள நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

அண்ணா மறைவுக்குப் பிறகு, ‘மு.கருணாநிதியைத் தலைவராக ஏற்க மாட்டேன்’ என்று சூளுரைத்த நெடுஞ்செழியன், பின்னர் அவரையும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரையும் தலைவர்களாக ஏற்றார். வாழ்நாள் முழுவதும் ‘நம்பர் 2’ ஆக இருந்தார். தன்னை ‘பரதன்’ என்று கூறிக்கொள்ளும் ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இன்று இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழலில், ஒற்றைத் தலைமையாக விரும்பிய இபிஎஸ்ஸை முன்பு அவர் எதிர்த்தது ஏன்? இப்போதும் இணக்கமாகி ‘பரதன்’ இடத்துக்கு ஓபிஎஸ் வரலாம். ஆனால், அந்த இடத்தைக்கூட வழங்க ‘ராமர்’ (இபிஎஸ்) முன்வருவாரா என்பதுதான் கேள்வி!

- டி.கார்த்திக்; தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x