Published : 28 Nov 2016 09:31 AM
Last Updated : 28 Nov 2016 09:31 AM

பொருளாதாரப் பின்னணியில் பெருமழையை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!

வட கிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. ஆனால், வறட்சி நிவாரணப் பணியில் தீவிரம் காட்ட வேண்டிய சூழல் மட்டுமில்லை தமிழக அரசுக்கு. கூடவே, வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டிய விநோதமான சூழலும் இருக்கிறது. காரணம், பருவமழை இன்னமும் தொடங்காவிட்டாலும்கூட, இந்த ஆண்டும் சென்னையில் வட கிழக்குப் பருவமழை அதிகமாக இருக்கும் என்ற கணிப்புகள் தொடர்கின்றன.

சென்ற ஆண்டின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை எதிர்கொண்ட வரலாறு காணாத மழையையும் பெருவெள்ளத்தையும் மக்கள் இன்னமும் மறந்துவிடவில்லை. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளோடு, உரிய முன்னேற்பாடுகள் இன்றி அரசு இயந்திரம் ஸ்தம்பித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளும் சேர்ந்து, வாழ்க்கையை எவ்வளவு துயரத்தில் தள்ளின! நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, உரிய பராமரிப்பின்மை, மழை வெள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளின்மை, ஒரு பேரிடரை எதிர்கொள்ளும் திட்டமின்மை என்று எல்லா அவலங்களையும் ஒருசேர எதிர்கொண்டனர் சென்னை மக்கள். வெள்ளம் சாலைகளையும் பாலங்களையும் மூழ்கடித்த நிலையில், அரசால் ஆரம்ப நாட்களில் பாதிக்கப்பட்ட மக்களை நெருங்கவே முடியவில்லை.

மக்கள் தமக்குள்ளாக ஒருவருக்கொருவர் அளித்துக் கொண்ட அரவணைப்பும் பரஸ்பர உதவியுமே இந்த அவலத்திலிருந்து அவர்களை வெளிவரச் செய்தது. தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்த உதவிகளே உடனடியாக அவர்களைத் தூக்கி நிறுத்தின. அன்றைக்கு சர்வதேச அளவில் அது பேசப்பட்டது, இன்றைய நினைவில் ஒரு ஆறுதல் என்றாலும், ஒரு கேள்வி உண்டாக்கும் அச்சத்தைத் தவிர்க்க முடியவில்லை. இன்றைய சூழலில் மீண்டும் ஒரு பெருமழை வந்தால், அதை எதிர்கொள்ள எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்?

தமிழக அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனச் சிலவற்றைச் செய்திருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியதும் நிறைய இருக்கிறது. சாதாரணமாக, மழைக் காலத்தில் எடுக்க வேண்டிய வழமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு கூடுதலாக நாட்டின் இன்றைய சூழலையும் கருத்தில்கொண்டு சிந்திப்பது அவசியம் எனத் தோன்றுகிறது.

ரூ.1,000, ரூ.500 பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின், நாடு முழுவதும் மக்களிடத்தில் பணப் புழக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், “ஆந்திரத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு, ரூ.10,000 கோடி தர வேண்டும். அதுவும் ரூ.100, ரூ.50 என்று சிறுமதிப்பு கொண்ட சில்லறை நோட்டுகளாக வழங்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுத்திருக்கும் கோரிக்கை யோசிக்கத் தூண்டுகிறது. தமிழக அரசு இது தொடர்பில் முன்கூட்டித் திட்டமிட்டு மத்திய அரசுடன் பேச வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x