Published : 19 Nov 2016 08:54 AM
Last Updated : 19 Nov 2016 08:54 AM

இந்திரா நூற்றாண்டு தொடக்கம்

இன்று (19.11.1917) பிறந்த நாள்

இன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள். இந்தியாவின் முதல் பெண் பிரதமர். பெண்களாலும் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியும் என சாதித்துக் காட்டியவர். நல்ல பல குறிக்கோள்களை, பல்வேறு சோதனைகளுக்கு இடையே நிறைவேற்றிக் காட்டிய சாதனைப் பெண்மணி. அவரது பிறந்த நாள் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது.

மகாபாரதத்தில் பகாசுரன் என்று ஒரு கதாபாத்திரம். எவ்வளவு சாப்பிட்டாலும் தீராத அகோரப் பசி கொண்டவன். ‘இவனுக்கு தீனி போட்டு மாளாது' என்று பேர் வாங்கியவன். அப்படியொரு 'பகாசுரன்', இந்தியப் பொருளாதாரத்திலும் உண்டு - மக்கள் தொகைப் பெருக்கம்.

என்னதான் நிதி உதவி, மானியம், இலவசம் என்று வகைவகையாய் திட்டங்கள் வகுத்தாலும், அத்தனையும் போன இடம் தெரியாமல் மறைந்து போயின. வறுமை ஒழிந்த பாடில்லை; ஏழ்மை சற்றும் குறைவதாய் இல்லை. ஏன்..? என்ன காரணம்...? மக்கள் தொகைப் பெருக்கம்!

"ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆஸ்திரேலி யாவை, நம்முடன் இணைத்துக் கொள்கிறோம்".

அந்த அளவுக்கு பெருகிப் பெருகி வந்த மக்கள் தொகையின் முன்னால், எந்தப் பொருளாதாரத் திட்டமும் பெரிதாக எதையும் சாதிக்க முடியாமல் பொசுங்கிப் போனது.

கோபால கிருஷ்ண கோகலே, விஸ்வேஸ்வரய்யா, கார்வே போன்றவர்கள், சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே இது குறித்துப் பேசினர். ஆனால், 'நோய் நாடி அதன் முதல் நாடி' சரி செய்கிற பணியில் ஈடுபட்டவர் இந்திரா காந்தி..

'நமது திட்டங்கள் குறித்த இலக்கை எட்ட வேண்டும் எனில்... நமது நாட்டின் பொருளாதாரம்வளர்ச்சி அடைய வேண்டும் எனில்... நம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் எனில்... மக்கள் தொகையை நாம் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்' என்பது தில்லி செங்கோட்டையில் பிரதமர் இந்திரா - 1974-ல் ஆற்றிய சுதந்திர தின உரை.

இது விஷயத்தில் இந்திரா தனிப்பட்ட முறையில் தீவிர கவனம் செலுத்தினார். சர்வதேச மாநாடுகள் தொடங்கி, அவருடைய கட்டுரைகள், பேட்டிகள், உரைகள் வரை எல்லாவற்றிலும் குடும்ப நலத் திட்டம் தவறாமல் இடம் பெற்றது. 1973 ஜனவரி 20 அன்று, தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் இந்திரா, இது குறித்து சற்றே மன வேதனையுடன் இவ்வாறு கூறினார்:

"யாருமே இதனை 'சீரியஸாக' எடுத்துக் கொள்வதாகவே தெரியவில்லை. இதைப் பற்றிப் பேசினாலே பெரிதாக சிரித்து விட்டுப் போய் விடுகின்றனர்".

ஆனால், இந்திரா விடுவதாக இல்லை.

உலகிலேயே முதன் முறையாக, மக்கள் தொகைக் கட்டுப்பாடு, அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற திட்டமாக, தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்துக்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மக்கள் நலத் திட்டம் ஒன்றுக்கு இந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இன்றளவும் நம் நாட்டுப் பொருளாதாரத்தில், மிகப் பெரிய நிகழ்வு.

சமூக நலத் துறையின் கீழ் அல்லாமல், சுகாதாரத் துறையின் கீழ் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அது மட்டுமல்ல; விரிவான கிராம குடும்ப நலத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.'பாரா' மருத்துவர்கள், ஊழியர்கள் ஏராளமாக இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

"கிராமத் தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அத்தனை பேரும் இது குறித்துஎடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் ஒட்டு மொத்த மக்களின் போக்கையும் மாற்றுகிற மிகக் கடினமான பணி நடந்தேறும். ஆனால் ஒன்று. எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்துத் தாய்க்கு, குடும்பம் சிறியதாக இருந்தால், தனது குழந்தைகளை இன்னும் அதிக அக்கறையுடன் நன்கு வளர்க்க முடியும் என்பது தெரியும். ஆண்கள்தான் முன் வரத் தயங்குகிறார்கள். அவர்களுக்குத்தான் அதிகம் சொல்லிப் புரிய வைக்க வேண்டி இருக்கிறது." இது செப்டம்பர்1974-ல்பிரிட்டானிகா இதழுக்கு இந்திரா காந்தி எழுதிய கட்டுரையில் இடம் பெற்ற பகுதி.

22 ஜனவரி 1976 அன்று இந்திய மருத்துவர்கள் கூட்டத்தில் இந்திரா பேசியது அவரது விருப்பத்தை நன்கு பிரதிபலித்தது."நீங்கள் இதய மருத்துவ நிபுணராக இருக்கலாம்; சிறுநீரக நிபுணராக இருக்கலாம். அரசு மருத்துவமனையில் பணி புரியலாம்; அல்லது சொந்தமாக 'கிளினிக்' வைத்து இருக்கலாம். ஆனாலும், நீங்கள் ஒவ்வொருவரும் குடும்ப நல பிரசாரகராக இருக்க வேண்டும். மற்றவர்கள் சொன்னால் காதில் போட்டுக் கொள்ளாத நோயாளிகளும் பொது மக்களும், டாக்டர்கள் சொன்னால் கேட்பார்கள்" என்றார்.

‘நாம் இருவர்; நமக்கு இருவர்’, ‘சிறிய குடும்பம் - சீரான வளர்ச்சி’, ‘ஒன்று - வீட்டுக்கு; ஒன்று - நாட்டுக்கு’ போன்ற வாசகங்கள், பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தன.

“குடும்ப நலத் திட்டம் - மிகவும் முக்கியமானது; அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கு உரியதும் கூட.இது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். ஆழமான அந்தரங்க விஷயத்தில் மக்களை சரிக்கட்டுவது மிகவும் கடினமான பணி. ஆனாலும் இது குறித்து நாம் தீர ஆராய்ந்து, இது அவசியம்தான் என்று மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு வழியைக் கண்டுபிடித்தாகவேண்டும்.அதற்கு, எல்லா கல்வியிலும் பாடத் திட்டத்தில் ஒரு அங்கமாக இது இருக்க வேண்டும்” என்றார்.

நாட்டின் தனி நபர் வருமானம் அல்லது உலகின் உணவு இருப்பு இதையெல்லாம் மனதில் கொண்டு யாரும் குடும்ப நலம் குறித்து திட்டம் இடுவதில்லை. தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைதான் அவர்களின் மனதில் இருக்கும்.

அதுதான் தீர்மானிக்கும். ஆகவே ஒவ்வொரு குடும்பத்து ஆண், பெண்ணையும் சந்தித்து அலோசனைகள், அறிவுரைகள்,வழிமுறைகள் வழங்குகிற விதத்தில் மிகவும் விரிவான திட்டம் - உடனடியாக, தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

எதிர்ப்புகள் வலுவாக எழுந்தன.1977 பொதுத் தேர்தலில் இந்திரா அடைந்த தோல்விக்கு, குடும்ப நலத் திட்டத்தில் அவர் காட்டிய தீவிரம், முக்கிய காரணியானது. ஆனாலும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் இந்திரா கொண்டிருந்த முனைப்பு முழுப் பயனை அளித்தது. திட்டத்தின் முதல் 10 ஆண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம், தமிழகம், கேரளா, பஞ்சாபில் கணிசமாகக் குறைந்தது.

இந்தக் கால கட்டத்தில், கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு காரணமாக, 29 மில்லியன், அதாவது 2 கோடியே 90 லட்சம் குழந்தைப் பிறப்புகள் தடுக்கப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளுக்கு இது தொடர்ந்து இருந்தால், இன்று நாம் காணும் பொருளாதார வளர்ச்சி வேறுவிதமாக அமைந்து இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x