Published : 02 Jul 2014 09:10 AM
Last Updated : 02 Jul 2014 09:10 AM

நியாயமான சர்வாதிகாரி வேண்டுமா?

ஒரு சர்வாதிகாரி நியாயவானாக இருந்தாலும் முரடனாக இருந்தாலும் சர்வாதிகாரம் என்பது சர்வாதிகாரம்தான்.

“எங்களுக்கு நியாயமான ஒரு சர்வாதிகாரி தேவை” என்று 2013 ஜனவரியில் லிபியாவுக்குச் சென்றபோது நண்பர் என்னிடம் கூறினார். லிபிய மக்களிடையே எதிர்காலம்குறித்து ஏற்பட்ட அவநம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதால் தங்களைக் காப்பதற்கு வலுவான ஒருவர் தேவை என்ற லிபியர்களின் உள்ளக்கிடக்கையைத்தான் அவர் எதிரொலித்தார்.

இத்தகைய இருண்ட சூழலில்தான் லிபிய ராணுவத்தைச் சேர்ந்த ஜெனரல் காலிஃபா இஃப்தர், பிரிந்து கிடந்த லிபிய மக்களைக் காக்கவந்த ரட்சக னாகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். என் நண்பருக்கும், அவரைப் போலவே சிந்திக்கும் பிற லிபியக் குடிமக்களுக்கும் மகிழ்ச்சி தரும் விதத்திலேதான் அவர் தலைமைப் பொறுப்புக்கு வர தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டுவருகிறார்; அதே வேளையில், திடீர் ராணுவப் புரட்சி மூலம் 1969-ல் நாட்டின் சர்வாதிகாரியாகிவிட்ட கர்னல் கடாஃபியையும் அவர் நினைவுபடுத்தினார். கடாஃபியின் காட்டாட்சியை மக்களில் பலர் இன்னும் மறக்கவேயில்லை. எனவே, காலிஃபா இஃப்தர் தங்களைக் காக்கவந்த தெய்வமா, இல்லை கடாஃபியைப் போன்ற சர்வாதிகாரியா என்று தங்களுக்குள் கேட்டுக்கொள்கின்றனர்.

வாஷிங்டனுக்கு எச்சரிக்கை

எது எப்படியாக இருந்தாலும் வாஷிங்டன் எச்சரிக்கை யாகவே இருக்க வேண்டும். நீண்ட காலம் தங்களை அடக்கியாண்ட ஒரு சர்வாதிகாரியை லிபியர்கள் தூக்கி எறிந்த உடனேயே இன்னொரு சர்வாதிகாரியை வெளிப்படையாக அரவணைத்துக்கொண்டாலும் அல்லது மறைமுகமாக ஆதரித்தாலும், சர்வாதிகாரத் திலிருந்து ஜனநாயகத்துக்குத் திரும்ப முனையும் அந்த நாட்டவரின் முயற்சியை அது முறியடிப்பதாக அமையும்; அது மட்டுமல்ல, மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மீதான நம்பகத்தன்மை மேலும் குறையும்.

இஃப்தர் என்றொரு ராணுவ அதிகாரி இருந்திருக்காவிட்டாலும் லிபிய மக்கள் அவரை உருவாக்கியிருப்பார்கள். எனவே, அவர் போன்றவர் தலைமைப் பதவிக்கு வர முயல்வதுகுறித்து வியப்படைய ஏதுமில்லை. லிபியா இன்றிருக்கும் சூழலில் யாராவது ஒரு சர்வாதிகாரிதான் பதவிக்கு வர முடியும். அவரைப் போன்றவர்கள் ஏன் கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பிறகு உடனடியாக வரவில்லை, இவ்வளவு காலம்தாழ்ந்து வர முயல்கின்றனர் என்பதுதான் வியப்பளிக்கிறது.

இரட்டை ஆட்சி

2011 அக்டோபரில் கடாஃபியின் ஆட்சி போனதி லிருந்து, தங்களுடைய நாட்டின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் பாதுகாப்பில்லையே என்ற கவலையும் லிபியர்களை ஆட்டிப்படைக்கிறது. கடாஃபியின் விலகலுக்குப் பிறகு லிபியாவில் இரண்டு வெவ்வேறு ஆட்சிகள் ஒரே சமயத்தில் நடந்து வந்தன. ‘அதிகாரபூர்வமான' லிபிய அரசு ‘அதிகாரம் ஏதுமில்லாமல்' ஆண்டுகொண்டிருந்தது; தீவிரவாதி களின் அரசோ ஆட்சி செலுத்திவந்தது. அரசின் கட்டுப் பாட்டில் எதுவும் இல்லை என்ற அன்றைய அரசின் அவலநிலைக்கு நல்ல உதாரணம், நாட்டின் பிரதம மந்திரி அலி ஜெய்தான் 2013-ல் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதும் பிறகு அவர்களாகவே விடுதலை செய்ததும்! லிபியா தோல்வியுற்ற அரசு மட்டும் அல்ல, உள்நாட்டுப் போரைச் சந்திக்கும் நிலையிலும் இருக்கிறது.

குழப்ப வரலாறு

அரசியல் குழப்பம், அராஜகம், உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழ்நிலை போன்ற சந்தர்ப்பங்களில், சக்திவாய்ந்த ராணுவத் தளபதி அதிகாரத்தைத் தன்னுடைய கையில் எடுத்துக்கொள்வது லிபியாவில் மட்டும் நடப்பதல்ல; 1978-ல் யேமன் நாட்டில் உள் நாட்டுப் போர் மூண்டபோது அலி அப்துல்லா சாலே சர்வாதிகாரியானார். 1988-ல் லெபனானில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரை அடுத்து ஜெனரல் மைக்கேல் அவுன் ஆட்சிப் பொறுப்பை தன்வசம் எடுத்துக்கொண்டார். சமீபத்தில், எகிப்து நாட்டிலும் இதேபோலக் குழப்பம் ஏற்பட்டதால் தரைப்படை முன்னாள் தளபதி அப்துல் ஃபட்டா அல்-சிசி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார். லிபியாவின் சிசியாக ஜெனரல் இஃப்தர் இருப்பார் என்றே கணிசமான லிபிய மக்கள் நம்புகின்றனர். ராணுவத்தைச் சேர்ந்த சக்திவாய்ந்த அதிகாரி ஆட்சிப் பொறுப்பை முதலில் கையில் எடுப்பதும் பிறகு நாட்டை மேலும் குழப்பத்திலும் அராஜகத்திலும் தள்ளுவதும் வரலாறாகவே இருப்பதால், அமெரிக்க அரசு எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.

ஜெனரல் இஃப்தர் குறித்து ஏற்கெனவே பல சர்ச்சைகள் அந்த நாட்டில் ஏற்பட்டுள்ளன. அவர் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாகவே இருப்பது அவசியம். 1969-ல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி யிலேயே அவருக்குப் பங்கு உண்டு; சாட் நாட்டுக்கு எதிராகத் தேவையற்ற போரை அவர் 1978 முதல் 1987 வரையில் நடத்தினார். அந்தப் போரில் லிபியாவுக்குத் தோல்வி ஏற்பட்டதும் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார். அங்கு அமெரிக்கக் குடிமகனாகி கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்க்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவந்தார். 2011-ல் கிளர்ச்சி ஆரம்பமானபோது இஃப்தர் லிபியா திரும்பி, இஸ்லாமிய அமைப்பினருடன் இணைந்து சண்டையிட்டார்; இப்போது அவர்களை அவரே கடுமையாகக் கண்டிக்கிறார். லிபியாவின் ஒற்றுமைக்குப் பாடுபடுவதாக அவர் கூறிக்கொண்டாலும், கர்னல் கடாஃபியின் ஆட்சிக்காலத்தில் உயர் பதவி வகித்த எவரும் அரசின் உயர் பதவிகளுக்கு வரக் கூடாது என்று முன்னர் விதித்த தடையை உடைக்கத்தான் அவர் மக்களுடைய கிளர்ச்சியில் சேர்ந்துகொண்டார் என்று கருதுவோரும் உண்டு.

சுமுக உடன்பாடு

இஃப்தருடைய உள்நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், லிபியாவுக்குத் தேவை நாட்டை ஒற்றுமை யாக வைத்திருக்கக்கூடிய சமரசப் பேச்சுவார்த்தை அதன் மூலமான சுமுகமானதொரு உடன்பாடுதானே தவிர, இன்னொரு ராணுவப் புரட்சியோ, கூடுதலாக இன்னொரு பயங்கரவாதக் குழுவோ அல்ல.

பயங்கரவாதக் குழுவுடன் இஃப்தர் சேர்ந்து கொண்டிருப்பதால் அவரைப் பிடிக்காதவர்கள் எதிர்த் தரப்பில் மற்றவர்களைத் திரட்டி அணி சேர்வது நிச்சயம். லிபியாவில் இப்போது சுமார் 2.5 லட்சம் பேர் தீவிரவாதிகளாக ஆயுத மேந்திக் கொண்டிருக்கின்றனர். கர்னல் கடாஃபியின் ஆட்சிக்கு எதிராகப் போரிட்டவர்கள் வெறும் 30,000 பேர்தான். மற்றவர்கள் அதற்குப் பிறகு ஆயுதமேந்தியவர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களில் பலர் பணரீதியாகவும் ஆதாயம் அடைந்துவருகின்றனர். எனவே, இதே குழப்ப நிலை நீடிக்க வேண்டும் என்பதற் காகவே போராடுகின்றனர். பல இனக் குழுக்களின் தலைவர்கள், மத அமைப்புகளின் தலைவர்கள், சர்வாதிகாரம் நீங்கி மக்களாட்சி இடம்பெற வேண்டும் என்பதற்காக உண்மையாகவே ஆயுதமேந்திப் போராடி யவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் அவர்களில் உண்டு. அவர்கள் ஜெனரல் இஃப்தரின் இயக்கத்திடம் சரணடைந்துவிட மாட்டார்கள். எனவே, லிபியாவில் அமைதியும் அரசியல் நிலைத்தன்மையும் ஏற்படுவது கடினம்.

அவமானகரமான கொள்கை

ஜெனரல் இஃப்தரின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசியல் தலைமை சகித்துக்கொண்டிருப்பதால் நிலைமை மோசமாகிவிட்டது. வாஷிங்டனின் அழிப்புப் பட்டியலில் உள்ள பயங்கரவாத குழுக் களுக்கு எதிராக ஜெனரல் இஃப்தரின் படைகள் சண்டையிட்டுவருவதால், இஃப்தரைக் கண்டிக்கப் போவதில்லை என்று லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் டெபோரா ஜோன்ஸ் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்ற தற்காலிக லட்சியத்துக்காக, சர்வாதிகாரத்தைச் சகித்துக்கொள்வது என்ற அவமானகரமான கொள்கையை அமெரிக்க அரசு இப்போது கடைப் பிடிக்கிறது. இதனால், லிபியாவில் அமைதியும் ஜனநாயகமும், அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் ஆட்சியும் ஏற்படுவதற்குப் பதிலாக உள்நாட்டுப் போர் தீவிரமடைய அமெரிக்கா வழிசெய்கிறது. அதற்குப் பதிலாக, ஜெனரல் இஃப்தரிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழ்வதற்காக தேசிய அளவில் சமரசப் பேச்சு நடத்தவும் ஜனநாயகபூர்வமான ஆட்சி பதவியேற்கவும் வழிசெய்ய வேண்டும்.

ஒரு சர்வாதிகாரி நியாயவானாக இருந்தாலும் முரடனாக இருந்தாலும் சர்வாதிகாரம் என்பது சர்வாதிகாரம்தான். லிபியா இப்போதுதான் சர்வாதி காரத்திலிருந்து விடுபட்டிருக்கிறது, மீண்டும் இன்னொரு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கிவிடக் கூடாது.

தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x