சொல்...பொருள்...தெளிவு | கடன் மதிப்பீடு

சொல்...பொருள்...தெளிவு | கடன் மதிப்பீடு
Updated on
2 min read

கடன் மதிப்பீடு (Credit Rating) என்பது நிறுவனங்கள், லாப நோக்கமற்ற அமைப்புகள், அரசுகளின் கடன் தகுதியை (Credit Worthiness) மதிப்பிடுவதற்கான வழிமுறை. இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே ஒரு நிறுவனத்துக்குக் கடன் கொடுப்பது அல்லது முதலீடு செய்வது குறித்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

ஒரு நபரோ நிறுவனமோ கடன்/முதலீட்டைத் திருப்பிச் செலுத்தாமல் போகும் கடனுக்கு ஏற்படும் ஆபத்தை (Credit Risk) அறியவும் கடன் மதிப்பீடு தேவைப்படுகிறது.

கடன் தகுதி: ஒரு நபரோ நிறுவனமோ கடன் பெறுவதற்குத் தகுதியானவரா என்பதை அடையாளப்படுத்துவதே கடன் தகுதி (Credit Worthiness). வாங்கிய கடனை உரிய காலக்கெடுவுக்குள் திருப்பிச் செலுத்தும் திறனே கடன் தகுதியை நிர்ணயிப்பதற்கான முதன்மையான அளவுகோல்.

மதிப்பீடு X மதிப்பெண்: பொதுவாக பெரிய நிறுவனங்கள், அமைப்புகள், அரசுகளுக்குக் கடன் மதிப்பீடு பயன்படுத்தப்படுகிறது. தனிநபர்கள், சிறு நிறுவனங்களுக்கு கடன் மதிப்பெண் (Credit Score) என்னும் வழிமுறையே பயன்படுத்தப்படுகிறது.

இரண்டும் கடன் தகுதியை மதிப்பிடுவதுதான் என்பது இரண்டுக்குமான அடிப்படை ஒற்றுமை. கடன் மதிப்பீட்டுக்கான குறியீடு எழுத்துகள் வடிவிலும் கடன் மதிப்பெண் எண்களாகவும் வெளியிடப்படுகிறது.

இரண்டையும் மேற்கொள்வதற்கான நிறுவனங்கள், கடைபிடிக்கப்படும் வழிமுறைகள், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் அளவுகோல்களில் வேறுபாடுகள் உள்ளன.

குறியீடுகளும் எண்களும்: கடன் மதிப்பீடுகள் பொதுவாக AAA முதல் D வரையிலான குறியீடுகளாக வெளியிடப்படுகின்றன. AAA என்பது ஆகச் சிறந்த கடன் தகுதியைக் குறிக்கிறது.

AA, A ஆகியவை நல்ல மதிப்பீடாகவும்; BBB, BB ஆகியவை சராசரி மதிப்பீடாகவும்; B, C ஆகியவை குறைந்த மதிப்பீடாகவும் கருதப்படுகின்றன. D என்பது கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுகிறவர் என்பதைக் குறிக்கும் மதிப்பீடு.

இதேபோல் கடன் மதிப்பெண்கள் 300 தொடங்கி 900 வரையிலான எண்களில் குறிக்கப்படுகின்றன. 900 என்பது ஆகச் சிறந்த மதிப்பெண். மதிப்பெண் குறையக்குறைய கடன் தகுதியும் குறையும். இந்த மதிப்பீட்டுக் குறியீடுகளும் மதிப்பெண்களும் மதிப்பீட்டை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு ஏற்ப வேறுபடும்.

நாடுகளுக்கான கடன் மதிப்பீடு: தேச, மாநில அரசுகளுக்கான கடன் மதிப்பீடு என்பது, ஒரு நாடு அல்லது மாநிலத்தில் முதலீட்டுச் சூழல் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கானது.

ஒரு நாட்டின் நிலவும் பொருளாதாரச் சூழல், அரசியல் சூழல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அந்த நாட்டில் முதலீடு செய்வது எவ்வளவு பாதுகாப்பானது அல்லது ஆபத்தானது என்பது மதிப்பிடப்படுகிறது.

அளவுகோல்கள்: நிறுவனங்களின் நிதி அறிக்கைகள், ஆண்டறிக்கைகள், நிறுவன ஆய்வாளர்களால் வழங்கப்படும் அறிக்கைகள், நிறுவனங்கள் குறித்து ஊடகங்களில் இடம்பெறும் செய்திகள், தொழில்துறை ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்கள் ஒரு நிறுவனத்தின் கடன் மதிப்பீட்டை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு நிறுவனத்தின் கடன், அதைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றின் வரலாறு, நிறுவனத்தின் வருங்கால நிதிப் பொருளாதாரம் சார்ந்த சாத்தியங்கள் ஆகியவையும் கடன் மதிப்பீட்டைத் தீர்மானிக்கக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

தனிநபர்களுக்கான கடன் மதிப்பெண்ணைத் தீர்மானிப்பதில் கடன் வரலாறு, கடனைத் திருப்பிச் செலுத்தியதன் வரலாறு ஆகியவையே முக்கியப் பங்கு வகிக்கின்றன. அத்துடன் வங்கிப் பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தாமல் இருப்பது.

அடிக்கடி வங்கிக் கடனுக்கோ கடன் அட்டையின் கடன் அளவை அதிகரிப்பதற்காகவோ விண்ணப்பிப்பது, மிக அதிக எண்ணிக்கையில் கடன் அட்டை பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, ஒரே மாதிரியான கடனை அதிகமாகப் பெறுவது ஆகியவையும் தனிநபர்களின் கடன் மதிப்பெண்ணைப் பாதிக்கின்றன.

முக்கியத்துவம்: வங்கிகள், வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள், கடன்கொடுப்போர், முதலீட்டாளர்கள் ஆகியோர் கடன் மதிப்பீட்டைப் பயன்படுத்துகிறார்கள். கடன் கொடுப்பது அல்லது முதலீடு செய்வது குறித்தும், அதில் உள்ள ஆபத்தைக் கணக்கில்கொண்டு சரியான முடிவெடுக்கவும் கடன் மதிப்பீட்டு நடைமுறை அவசியமாகிறது.

அதே நேரம், கடன் மதிப்பீடு என்பது கடன் கொடுப்பது அல்லது முதலீடு செய்வது குறித்து முடிவெடுப்பதற்கான கருவிதானே தவிர, கொடுக்கப்பட்ட கடனோ மேற்கொள்ளப்பட்ட முதலீடோ உரிய நேரத்தில் திருப்பிக் கிடைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் அல்ல.

நிறுவனங்களைப் பொறுத்தவரை நல்ல கடன் மதிப்பீட்டைப் பெற்றிருப்பது, அவற்றின் மீதான மதிப்பை அதிகரிக்கிறது. நல்ல கடன் மதிப்பீடு தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் அதிக கடனைப் பெற உதவும்.

மதிப்பீட்டை மேற்கொள்வது யார்? : நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீட்டைக் கடன் மதிப்பீட்டு முகமைகள் மேற்கொள்கின்றன. இந்தியாவில் கடன் மதிப்பீட்டு முகமைகள் அனைத்தும் பங்கு, பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை.

தனிநபர்களுக்கான கடன் மதிப்பெண்கள், கடன் தகவல் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இவை இந்திய ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்று இயங்குகின்றன. கடன் தகவல் நிறுவன (ஒழுங்காற்று) சட்டத்தால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்

(Standard & Poor), ஃபிட்ச் (Fitch), மூடீஸ் (Moodys) ஆகிய நிறுவனங்கள் உலக அளவில் புகழ்பெற்ற கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள். இந்தியாவில் இயங்கும் கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (Credit Rating Information Services of India Limited - CRISIL), இன்வெஸ்ட்மென்ட் இன்ஃபர்மேஷன் அண்ட் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி ஆஃப் இந்தியா (Investment Information and Credit Rating Agency of India Limited - ICRA), கிரெடிட் அனாலிசிஸ் அண்ட் ரிசர்ச் (Credit Analysis and Research Limited - CARE) உள்ளிட்டவை பிரபலமானவை. நான்கு நிறுவனங்கள் தனிநபர்களுக்கான கடன் மதிப்பெண்ணை வழங்குகின்றன. அவற்றில் சிபில் என்று அறியப்படும் கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ ஆஃப் இந்தியா லிமிடெட் (Credit Information Bureau (India) Limited - CIBIL) இந்தியாவிலேயே தொடங்கப்பட்ட நிறுவனம்.

- கோபால்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in