Last Updated : 13 Jun, 2022 07:45 AM

3  

Published : 13 Jun 2022 07:45 AM
Last Updated : 13 Jun 2022 07:45 AM

தாய்மொழி வழிக் கல்வி பழங்குடிகளுக்கும் பொருந்தும்தானே!

‘ஒரு குழந்தையின் மொழியை நிராகரித்தல், அந்தக் குழந்தையை நிராகரிப்பதற்கு ஒப்பானது’ என்பார் கல்வியாளர் கமின்ஸ். இத்தனை ஆண்டு காலமும், நம் பழங்குடிக் குழந்தைகளின் மொழிகளை நிராகரித்தே வருகிறோம். இதற்கு நீதி செய்ய வேண்டியது அவசரத் தேவை.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊராளிப் பழங்குடி மக்கள் மட்டுமே வாழும் கிராமத்தில் உள்ள பழங்குடிக் குழந்தைகளுக்கான தொடக்கப் பள்ளி அது. அந்தப் பள்ளியில் நாம் சந்தித்த ஆசிரியர், அருகில் உள்ள கிராமத்துக்குக் குடிவந்துவிட்டார். தனது பிள்ளைகளையும் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைக்கிறார். மாணவர் மையக் கற்றல், கற்பித்தல்மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒன்றாம் வகுப்பு படிக்கும் பழங்குடிக் குழந்தை ஒன்று பள்ளிக்குள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தது. அந்தக் குழந்தையைக் காட்டி, ‘‘இந்தக் குழந்தையோடு நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?’’ என்று கேட்டேன். ஆசிரியருக்கு ஊராளி மொழி தெரியாது.

அங்குள்ள குழந்தைகளுக்கோ தமிழ் தெரியாது. அருகில் உள்ள தமிழ் பேசும் மக்களையோ குழந்தைகளையோ சந்திக்க முடியாத குழந்தைகள். பேருந்து, ரயில், கார், நவீனத் தொலைத்தொடர்புச் சாதனங்கள், கடைவீதி என எதனையும் பார்த்தறியாத குழந்தைகள். அதனால், தங்கள் தாய்மொழி தவிர வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாத குழந்தைகள்.

பள்ளி‌க் கட்டமைப்பு, ஆசிரியர், வகுப்பறை எல்லாம் அந்தக் குழந்தைகளுக்குப் புதியவை. இப்படியான சூழ்நிலையில், பள்ளி வளாகத்துக்குள் மிரட்சியுடன் நுழையும் அந்தக் குழந்தையிடம் ஆசிரியர் எப்படி உரையாடுவார்? குழந்தையிடம் ஆசிரியர் எதுவும் கேட்க முடியாது. குழந்தையும் ஆசிரியரிடம் எதுவும் சொல்ல இயலாது. கற்றல், கற்பித்தல் எவ்வாறு நடைபெறும்?

‘‘நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் உதவியோடுதான் அந்தக் குழந்தையுடன் பேச முடியும்’’ என்றார்.‌ ‘ஒன்றாம் வகுப்புப் பாடவேளையில் மேல் வகுப்பு மாணவர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டால், அந்த வகுப்பு மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாதா?’ என்ற கேள்வி எழும். இதனையெல்லாம் கடந்துதான் பழங்குடிக் குழந்தைகள் படித்து மேலே வருகிறார்கள். அல்லது தொடக்கநிலையிலேயே பள்ளியிலிருந்து விடைபெற்றும்விடுகின்றனர். இவர்களை நாம் கற்கும் திறன் குறைந்தவர்கள் என்று முத்திரைகுத்துகிறோம்.

பள்ளிகளில் எப்படிப் பாடம் பயிற்றுவிக்க வேண்டும்? முதலில் பழங்குடி மக்களின் பயன்பாட்டில் உள்ள கதைகள், விடுகதைகள், சொலவடைகள், அவர்களின் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த செயல்பாடுகள் என ஓரிரு மாதங்கள் உற்சாகமாக வகுப்பறைகள் செயல்பட வேண்டும். பழங்குடிக் குழந்தைகளின் வீட்டு மொழி வழியாகப் பள்ளி மொழிக்கு நகர்ந்து வருவதே கற்றலின் அஸ்திவாரம்.

தமிழில் உரையாடலைத் தொடங்குதல் கற்றல் செயல்பாட்டின் முதல் படி. தமிழ் எழுத்துகளை நோக்கிக் குழந்தைகளை நகர்த்திச் செல்லுதல் மூன்றாம் நிலையாக இருக்க வேண்டும். வீட்டு மொழியில் தொடங்கி, பள்ளி மொழியைக் கைக்கொள்வதன் மூலமே பழங்குடிக் குழந்தைகளுக்குக் கற்றலில் ஆர்வம் ஏற்படும். கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை துளிர்விடும். மேலும்மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். இப்படித்தான் பழங்குடிக் குழந்தைகளின் கல்வி தொடங்க வேண்டும்.

2022 மே மாதம் ‘இல்லம் தேடிக் கல்வி’ ஆய்வுக்காகக் கூடலூர் சென்றிருந்தபோது, இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு உதாரணங்கள் வழிகாட்டின. அங்குள்ள ஒரு பழங்குடிக் கிராமத்தில், ‘இல்லம் தேடிக் கல்வி’ மையத்தின் தன்னார்வலர் அதே காட்டுநாயக்கர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.

இதன் விளைவாக, தாங்கள் பார்க்கும் எல்லாப் பொருட்களின் பெயர்களையும் தமிழில் தெரிந்து வைத்துள்ளனர். குழந்தைகள் தமிழைச் சரளமாகப் பேசவும் கற்றுக்கொண்டனர்; எழுதவும் தொடங்கியுள்ளனர். அதே ஒன்றியத்தில் உள்ள பணியா பழங்குடிப் பகுதியில் நடக்கும் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையத்தின் தன்னார்வலர் தமிழ் மட்டுமே தெரிந்தவர். எனவே. அந்த மையத்துக்குக் குழந்தைகளை அழைத்துவரக்கூட அவரால் முடியவில்லை.

பழங்குடிக் குழந்தைகளின் கற்றல் வாய்ப்புகளை அதிகரித்து, கல்வித் தரத்தையும் அதிகரித்துள்ள மாநிலங்களில் ஒன்று ஒடிசா. அங்கே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகளின் வீட்டு மொழியில் (அவரவர் பழங்குடி மொழியில்) கற்றல், கற்பித்தலைத் தொடங்கி, மாநிலப் பாட மொழிக்குச் சென்றனர்.

இதன் விளைவாகப் பழங்குடிக் குழந்தைகளுக்குப் பாடங்களில் கற்றல் ஆர்வம் அதிகரிப்பதைக் கண்டனர். கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் உத்வேகமும் பெற்றதை அறிந்தனர். இதன் காரணமாகப் பள்ளி இடைநிற்றல் குறைந்து, கற்றல் திறன் அதிகரித்துள்ளது. பாடம் சார்ந்த திறன்கள் மேம்பட்டன.

ஆசிரியர் - மாணவர் உறவும் மேம்பட்டது. வகுப்பறை உறவு அர்த்தமுள்ளதாக மலர்ந்தது. பழங்குடிக் குழந்தைகள் சம அளவு கற்றல் திறன் உடையவர்கள் என்பது நிரூபணம் ஆனது. ஒடிசா அரசின் இத்தகைய சீரிய முயற்சியால், பழங்குடிக் குழந்தைகள் மத்தியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 11 விழுக்காடும், ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 14 விழுக்காடும், பத்தாம் வகுப்பில் 20 விழுக்காடும் பள்ளி இடைநிற்றல் குறைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வாழும் கிராமங்கள் சுமார் 130 உள்ளன. இதில் 30 கிராமங்களுக்கு மட்டுமே சென்றிருக்கிறேன். பெரும்பாலான கிராமங்களில், பத்தாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம், கல்வியில் பட்டம், ஆசிரியர் பயிற்சி என்று படித்து முடித்த பழங்குடி இளைஞர்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலையில், பெரும்பாலான பழங்குடிக் கிராமங்களில், கிராமத்துக்குச் சிலரேனும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். பல கிராமங்களில் உண்டு உறைவிடப் பள்ளி அல்லது ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.

இந்தப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் அந்தந்தக் கிராமத்தில் உள்ளவர்களுக்குப் பயிற்சியளித்து, குறைந்தபட்சம் தொடக்கக் கல்வி வரை அந்தந்தப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத இடங்களில் அந்தப் பழங்குடி மக்களின் மொழியைச் சரளமாகக் கற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.‌ தமிழ்நாட்டில் மொத்தம் 36 வகையான பழங்குடிகள் உள்ளனர்.

இதில் தங்களுக்கென்று தனித்த தாய்மொழியைக் கொண்டவர்களுக்கு மட்டும் இந்த முறையைக் கையாண்டால் போதும். எழுத்து வடிவம் இல்லாத பழங்குடிச் சமூகத்தின் இந்த மொழிகள் அழிவின் விளிம்புக்குச் செல்லாமல் தடுக்கவும் இது பயன்படும். இதன் மூலம் பள்ளி இடைநிற்றல் குறையும். கல்வித் தரம் மேம்படும்.

‘ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தில் வாழும் குழந்தைகளின் தாய்மொழியில் கற்பிப்பதற்குப் போதுமான வசதியைச் செய்துதர வேண்டும்’ என்கிறது அரசமைப்பின் கூறு 350 ஏ. பழங்குடி மக்களின் மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை என்பதற்காக அவற்றைத் தாய்மொழி இல்லை என்று கூறிவிட முடியாது.

- நா.மணி, பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத் துறை, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி.

தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

To Read this in English: Education through mother tongue: Is it not applicable to tribal children?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x