

சென்னைப் புத்தகக்காட்சி என்பது ஒரு காலத்தில் ஏதோ சென்னைக்கு மட்டும் உரித்தானது என்ற தோற்றம் இருந்தது. ஆனால், சமீப காலமாக சென்னைப் புத்தகக்காட்சி தமிழ்நாடு, இந்தியா, இலங்கை முழுவதும் உள்ள தமிழர்களின் நிகழ்வாக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நிகழ்வாக மாறியிருக்கிறது. இந்தப் பெருநிகழ்வைத் தமிழ் மக்கள் தங்கள் பண்பாட்டுக் கொண்டாட்டமாக மாற்றிவிட்டார்கள். சென்னைப் புத்தகக்காட்சியை யொட்டி வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வாசகர்களும் எழுத்தாளர்களும் வந்துசெல்வது இந்த நிகழ்வின் வீச்சை நமக்கு நிரூபிக்கும்.
மேலும், இதன் வெற்றி காரணமாகத் தமிழ்நாட்டின் ஏனைய நகரங்களிலும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படுகின்றன. தொலைக்காட்சி, இணையம், சமூக ஊடகங்கள், கைபேசி உள்ளிட்டவைதான் புத்தக வாசிப்புக்கு எதிரிகள் என்று சொல்லப்பட்டுவரும் சூழலில், புத்தகங்களின் எல்லையும் புத்தகக்காட்சியின் எல்லையும் விரிவுபெற்றதற்கு அதே ஊடகங்கள்தான் துணைபுரிந்துவருகின்றன. சமூக ஊடகங்களில் ‘இன்று புத்தகக் காட்சிக்குச் சென்றேன்.
நான் வாங்கிய புத்தகங்கள் இவை’ என்று பதிவுபோடுவது தற்போது ஒரு பாணியாகியிருப்பது ஆரோக்கியமான மாற்றம். வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் புத்தகங்களில் கையெழுத்தும் பெற்று அவர்களுடன் செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள். எழுத்தாளர்கள் பலரும் தங்கள் பரிந்துரைகளையும் விருப்பப் பட்டியல்களையும் சமூக ஊடகங்களில் முன்வைப்பது புத்தகக்காட்சியில் என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம் என்று புது வாசகர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் இருக்கிறது. புக்டே.இன் (bookday.in), விமர்சனம்.இன் (vimarsanam.in) போன்ற மின்னிதழ்கள் புத்தக விமர்சனங்களுக்கும் பரிந்துரைகளுக்கும் முக்கிய இடம் அளிக்கின்றன.
எழுத்தாளர்களையும் புத்தக உலகத்தையும் தொலைக்காட்சி ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை என்ற விமர்சனம் முன்பெல்லாம் இருந்தது. இப்போது அப்படி இல்லை. புத்தகக்காட்சியையொட்டி மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள் பலரின் பேட்டிகள், பரிந்துரைகளை முன்னணி தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்புகின்றன. செய்தி அலைவரிசைகள் தினமும் புத்தகக்காட்சி செய்திகளை ஒளிபரப்புகின்றன. புத்தகக்காட்சி நடைபெறும் காலத்தில் சில தொலைக்காட்சி அலைவரிசைகளின் வாகனங்கள் அங்கேயே தொடர்ந்து இருந்ததையும் காண முடிந்தது. இவ்வளவு பெரிய மக்கள் திரளையும் அதன் எண்ணப்போக்கையும் வெகுஜன ஊடகங்களால் வெகுகாலம் புறக்கணிக்க முடியாது என்பதன் அடையாளங்கள்தான் இவையெல்லாம்.
சென்னைப் புத்தகக்காட்சி தொடர்பான காணொளி களும் யூடியூபில் குவிந்தவண்ணம் இருக்கின்றன. கைபேசி எல்லோரையும் காணொளிப் பதிவாளராக ஆக்கிவிட்டதால், புத்தகக்காட்சியில் தாங்கள் வாங்கிய புத்தகங்கள் பற்றிப் பெருமையுடன் வாசகர்கள் பேசும் காணொளிகளை யூடியூபில் பார்க்க முடிகிறது. மேலும், ஸ்ருதி டிவி கபிலன் இலக்கிய நிகழ்வுகள், புத்தகக்காட்சி போன்றவற்றைக் காணொளிகளாகப் பதிவுசெய்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறார். அவர் பதிவுசெய்திருக்கும் காணொளிகள் பலவும் நம் கால இலக்கிய உலகத்தைக் குறித்த மிகப் பெரிய ஆவணத் தொகுப்பாகப் பிற்காலத்தில் மாறும். எல்லாவற்றையும்விட முக்கியம், சென்னை புத்தகக் காட்சி என்பது ஆரோக்கியமான ஓர் அறிவுச் சூழலின் அடையாளமாக மாறியிருப்பது. இந்த அறிவுச் சூழல் படைப்பாளிகளை மேலும் மேலும் எழுத வைக்கும், வாசகர்களை மேலும் மேலும் படிக்க வைக்கும்!