Published : 27 Jan 2022 06:42 AM
Last Updated : 27 Jan 2022 06:42 AM
வேலையில்லாப் பிரச்சினைக்கு மத்திய - மாநில அரசுகள் மட்டும் காரணமல்ல. பள்ளிகளும் பெற்றோர்களும்கூடக் காரணம்தான். இதில் பள்ளிகள், ஆசிரியர்கள் பொறுப்பை நாம் அலசுவோம்.
இந்தத் தரவுகளைக் கொஞ்சம் பாருங்கள். 5,575 காலிப் பணி இடங்களுக்காக, 2019-ல் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுக்கு மட்டும் 16.29 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். 2018-ல் நடந்த குருப் 4 தேர்வுக்கு 19.83 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். 10-வது படிப்பைத் தகுதியாகக் கொண்ட இந்த குரூப் 4 பணிக்கு 2018-ல் 992 பிஹெச்டி, 23,000 எம்.ஃபில், 2.5 லட்சம் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்தார்கள்!
எந்த மாதிரியான பணியாக இருந்தாலும் அது பொருட்டல்ல; அது ஏதாவதொரு அரசுப் பணியாக இருந்தால் போதும், நிலையாக ஊதியம் கிடைத்தால் போதும் என்ற போக்குக்குத் தள்ளப்பட்டதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. இதற்கு மாணவர்கள் மத்தியில், தனித்திறனைக் கண்டறிந்து மேம்படுத்தாததும், துறையின் மீது ஆர்வத்தைத் தூண்டாததும், அத்துறை சார்ந்து பொருளாதாரத்தை ஈட்ட முயற்சிக்கும் துணிவை ஏற்படுத்தாததும்தான் முக்கியக் காரணம். மாணவர்களின் இந்நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களில் முக்கியமானவர்கள் அவர்களின் ஆசிரியர்கள்.
திருக்குறள், ரேடார் தொழில்நுட்பம், அக்பர், காந்தி, அம்பேத்கர் என எல்லாவற்றையும், எல்லோரையும் மதிப்பெண்களாகவே கடந்துசெல்லச் செய்கிறது, இப்போதைய கல்வி அமைப்பு. அதற்குத் தகுந்தாற்போல் மாணவர்களைப் பள்ளித் தேர்வின் மதிப்பெண்ணை நோக்கி ஓட வைப்பதே ஆசிரியர்களின் கடமையாகிவிட்டது. இவற்றுக்கு நடுவில், இங்குள்ள தேர்வு முறைகளால் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு மதிப்பெண்ணுக்காகத் தனி நீட் (NEET), ஜேஈஈ (JEE) தேர்வு மதிப்பெண்ணுக்காக மாணவர்களை இரண்டு வகையாக ஓட வைக்க வேண்டியுள்ளது. பள்ளிக் கல்வி முறையும் ஆசிரியர்களின் போக்கும்தான், தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் நேரத்தையும், பெற்றோர்களின் பணத்தையும் சுரண்டக் காரணமாகின்றன. பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்குச் சேர்ந்த உடனேயே அதுவரை தாங்கள் கற்றது போதும் என நிறுத்திவிடுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் புதிய பாடப் புத்தகத்தில், புத்தகத்தின் முகப்பில், இந்தப் புத்தகம் படிப்பதால் மேற்படிப்புக்காக என்னென்ன கல்லூரிகளில் சேர வாய்ப்பிருக்கிறது, என்னென்ன ஆராய்ச்சியில் ஈடுபட முடியும், அந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் எங்கெல்லாம் அமைந்திருக்கின்றன என்பது போன்ற விவரங்களைத் தந்துள்ளார்கள். சிறப்பான முயற்சி. அதனுடன் சேர்த்து இந்தப் படிப்பு சார்ந்த பணி எப்படி இருக்கும், சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதையும் ஒரு முன்னோட்டமாகக் கொடுக்கலாம். இவற்றை விளக்கி மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதில் ஆசிரியர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட பாடம் எடுக்கும்போது, அந்தப் பாடம் படித்து வங்கியில் பணிபுரிவோர், டிஎன்பிஎஸ்சியில் வேலை பார்ப்போர், ஆராய்ச்சி மேற்படிப்பில் ஈடுபடுவோர், துறை சார்ந்து சுயதொழில் தொடங்கியோர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் என ஆசிரியர் தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களையே தன் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யலாம். எந்தப் பாடத்திலும், எந்த ஒரு பத்தியை மாணவர்களுக்குக் கற்பிக்கும்போதும், பிற்பாடு எந்த வகையில் மாணவர்களுக்கு அது பயன்படப்போகிறது என்பதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
சமீபத்தில் ஒரு பள்ளியில் ‘விற்பனை நாள்’ (Sales Day) கொண்டாட்டத்தைப் பார்த்தேன். அந்த விற்பனை நாளில் அனைத்து மாணவர்களும் ஓவியம், கலைப் பொருட்கள், ஆபரணங்கள், உணவுப் பொருட்கள், கிரிக்கெட் பந்துகள் என அவர்களே தயாரித்த பொருட்களை, பள்ளியில் மற்ற மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் விற்க வேண்டும். இது உற்பத்தியில் தொடங்கி, அதனை எப்படி வியாபாரம் செய்வது என்பது வரை மாணவர்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. இது போன்ற பல முன்னெடுப்புகள்தான் மாணவர்களுக்கு, தங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதெனத் தெளிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு தருகிறது.
சமகர சிக்ஸா (Samagra Shiksha) என்ற திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள், மாணவர்கள் மேம்பாட்டிலும், கல்வித் தர மேம்பாட்டிலும் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. ‘மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தரமான கல்வி மூலம் முழுமையான முன்னேற்றம்’ (SARTHAQ), ‘பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான வளர்ச்சிக்கான தேசிய முயற்சிகள்’ (NISHTHA), மூக் (MOOC) என்னும் இணையவழிக் கல்வி முறை எனப் பல திட்டங்களை ஆசிரியர்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு முன்னெடுத்துவருகிறது. ஆனால், இத்திட்டங்கள் எந்த அளவுக்கு ஆசிரியர்களைச் சென்றடைகின்றன, ஆசிரியர்கள் எந்த அளவுக்கு அவற்றின் மூலம் தங்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி!
மாணவர்கள் திறன் மேம்பாட்டுக்காகவே ‘21-ம் நூற்றாண்டின் திறன் பற்றிய கையேடு’ (Handbook on 21st Century Skill) என்ற தலைப்பில், சிபிஎஸ்இ 2020-ல் சிறப்பான புத்தகம் ஒன்றை வெளி யிட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய புத்தகம். மாணவர்களின் கற்றலில் உள்ள பலதரப்பட்ட கோணங்கள், ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ப எந்த வகையில் மாணவர்களின் திறன் அமைந்திருக்க வேண்டும், அதற்கு என்னென்ன வழிகளை ஆசிரியர்கள் முன்னெடுக்கலாம் என்பதையெல்லாம் புத்தகம் விளக்குகிறது. இப்படியொரு புத்தகத்தை நமது அரசு வெளியிட்டிருப்பது பள்ளி ஆசிரியர்கள் பலருக்கும் தெரியாததும், தெரிந்தும் படிக்காததும்தான் இங்கு சிக்கல்.
திடீரென்று 11-ம் வகுப்பிலிருந்து ‘இப்படி மாறுங்கள்’ என்றால் மாணவர்களுக்கு அது சிரமம். அதனால் கற்றல், உரையாடல், தர்க்கரீதியாகக் கேள்வி எழுப்பிப் பாடங்களைப் புரிந்துகொள்ள வைத்தல், தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல் என முதல் வகுப்பிலிருந்தே குழந்தைகள் மேம்பாட்டில் ஆசிரியர்கள் தங்கள் இன்றியமையாமையை உணர வேண்டும். 12-ம் வகுப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு ஒப்பானதுதான் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிப்பதும். துரதிர்ஷ்டவசமாக, நமது நாட்டில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பெரும்பாலும் கொடுக்கப்படுவது இல்லை.
கல்லூரி இறுதியாண்டில், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, குழப்பமாகி நண்பர்களின் தன்விவரக் குறிப்பைக் கொஞ்சம் திருத்தித் தனதாக்கிக்கொண்டு தனியார் வேலைக்குப் போகலாம் என்று முடிவுசெய்வது, நண்பர் மேற்படிப்பு படிக்கிறார் நாமும் மேற்படிப்பு படிப்போம் என்று செல்வது, எல்லோரும் வங்கிப் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெறுகிறார்கள் அல்லது டிஎன்பிஎஸ்சிக்குப் படிக்கிறார்கள் அதையே நாமும் படிப்போம் என்று பெரும்பாலானோர் ஆட்டு மந்தையாக முடிவெடுக்கிறார்கள். மாறாக, சுயமாகத் தனக்கு விருப்பமான கல்வியைக் கற்று, அது சார்ந்து பணிக்குப் போவதையும் தீர்மானிப்பதில் ஆசிரியரின் பங்கு அளப்பரியது. அதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டும். மேலும், இந்தப் பொறுப்பை ஆசிரியர்கள் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரத்தைப் பள்ளிகள் வழங்க வேண்டும்.
- சா.கவியரசன், கழனிப்பூ மின்னிதழ் ஆசிரியர். தொடர்புக்கு: kaviyarasan411@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT