Published : 09 Mar 2016 09:51 AM
Last Updated : 09 Mar 2016 09:51 AM

நீதித் துறையில் சமூக அநீதியா?

தலித்துகளை நீதிபதிகளாக நியமிப்பதற்கான இடஒதுக்கீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் தலித்துகள். ஆனால், தலித்துகள் ஒருவர்கூட உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக தற்போது இல்லை. நீதித் துறையில் சமூக நீதியை நிலைநாட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தல்கள், குடிமக்கள் சமுதாய அமைப்பினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும்போதிலும், கடந்த ஐந்தாண்டுகளில் தலித்துகள் ஒருவர்கூட உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.

உயர் நீதிமன்றங்களின் நிலைமை இன்னும் மோசம். மத்திய அரசு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவிலுள்ள 24 உயர் நீதிமன்றங்களில் மொத்தமுள்ள 1,044 நீதிபதிப் பணியிடங்களில் 20-க்கும் குறைவானவர்கள் மட்டுமே தலித்துகள். இவர்களில் பெரும்பாலும் கீழமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, படிப்படியாக பதவி உயர்வுபெற்று வந்தவர்கள். வழக்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. பல உயர் நீதிமன்றங்களில் தலித் நீதிபதிகளே இல்லை என்பது வருத்தமளிக்கும் ஒன்றாகும். அனைத்து உயர் நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்தம் 400-க்கும் மேற்பட்ட நீதிபதிப் பணியிடங்களும் உச்ச நீதிமன்றத்தில் ஐந்து பணியிடங்களும் காலியாக உள்ளன.

மக்கள்தொகை அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் 6 பேரும், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் 5 பேரும், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக 253 பேரும், குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 75-க்கு 19 பேரும் நீதிபதிகளாக தலித்துகள் இருக்க வேண்டும்.

முதல் குடிமகன் குரல்

கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, 1998-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு ஒப்புதல் கோரி அவரிடம் கோப்பு வந்தது. அதில் நாராயணன் எழுதிய குறிப்பு இன்றைக்கும் நம் கவனம் கோருவது. “உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளின்போது, இந்திய மக்கள்தொகையில் 25 விழுக்காடாக இருக்கும் தலித்துகள் போன்ற நலிவடைந்த பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்து உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டால், அது அரசியல் சாசனத்துக்கும் நாட்டின் சமூக நோக்கங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.”

முன்னாள் மக்களவைத் துணைத் தலைவர் கரியமுண்டா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு தனது அறிக்கையில், “அரசியல் சாசனத்தைக் கடைப்பிடிப்பதாக நீதிபதிகள் உறுதியேற்றுக்கொள்கின்றனர். ஆனால், உச்ச நீதிமன்றமும் சில உயர் நீதிமன்றங்களும் அரசியல் சாசனத்தைவிட, அதிக அதிகாரம் தங்களுக்கு இருப்பதாகக் கூறிக்கொண்டு தீண்டாமையைக் கடைப்பிடிப்பது, அரசியல் சாசனத்தின் சட்டக்கூறு 16(4)-ஐ மதிக்காமலிருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

தலித்துகளை நீதிபதிகளாக நியமிப்பதற்கான இடஒதுக்கீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும். தேவைப்பட்டால் அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும் எனவும் அது பரிந்துரைத்தது.

வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாகச் சீர்திருத்தக் குழு தனது அறிக்கையில், “ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ, அதேபோல், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வுசெய்வதற்கான நீதித் துறைப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்தது.

மாநிலங்களவை உறுப்பினர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, 2007-ல் “நீதிபதிகள் பதவிகளிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று பரிந்துரைத்தது.

நீதிபதிகளின் குரல்

உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரத்தினவேல்பாண்டியன், 1993-ல் வழங்கிய ஒரு தீர்ப்பில் “நீதித் துறை நியமனத்தை எந்த அளவுக்கு விரிவான நடைமுறை கொண்டதாக மாற்ற முடியுமோ, அவ்வளவு விரிவான நடைமுறை கொண்டதாக மாற்ற வேண்டியது அவசியம்” என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் “உயர் நீதிமன்றத்தின் 154 ஆண்டுகால வரலாற்றில் வழக்கறிஞர்களிலிருந்து 9 தலித்துகள் மட்டுமே நீதிபதிகளாகவும், சுதந்திரம் அடைந்த 67 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்துக்கு இந்தியா முழுமையிலுமிருந்து 6 தலித்துகள் மட்டுமே நீதிபதிகளாகவும் இருந்திருக் கின்றனர். இப்போதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு இஸ்லாமியர்கூட நீதிபதியாக இல்லை. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளில் தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரை எல்லா முக்கிய பதவிகளில் இடஒதுக்கீடு உள்ளபோது, நீதித் துறையில் இடஒதுக்கீடு ஏன் கூடாது? ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டுவருகிற மத்திய அரசு, நீதித் துறையில் தலித்துகள், சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டுச் சட்டத்தை ஏன் கொண்டுவரக் கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆணையத்திலும் அநீதி

இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் நீதித் துறையைத் தவிர, நாடாளுமன்றம், நிர்வாகத் துறை ஆகிய இரண்டும், தலித்துகளுக்கும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்துள்ளன. நீதித் துறை மட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதியை நுழைய விடாத இரும்புக்கோட்டையாகவே நீடிக்கிறது.

நீதித் துறையின் இந்தப் போக்கு, சட்டத்தை வகுப்பவர்கள், அரசின் கொள்கை வகுப்பாளர்கள், சமூகத்தின் நலிந்த பிரிவினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. அவற்றின் காரணமாகத்தான் மத்திய அரசு 99 மற்றும் 121-வது அரசியல் சாசனத் திருத்தங்களைச் செய்தது. அதன்படி தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் உருவானது. ஆனால், அதிலும் தலித்துகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிர் ஆகியோருக்கான பிரதிநிதித்துவம் குறித்த எந்தவித உத்தரவாதமும் இல்லை. அதையும் கூட உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை மேலும், அதைச் செல்லாது என்றும், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த கொலீஜியம் முறையே தொடரும் என்றும் 16.10.2015-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசியல் சாசனத்தின் மனசாட்சியைப் பாதுகாக்கும் துறையாக நீதித் துறை செயல்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களின் நோக்கம். ஆனால், நீதிமன்றத்தின் போக்கு அதைப் பிரதிபலிக்கிறதா?

படேலின் கேள்வி

ஆங்கிலேயர் காலத்து இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இருந்தனர். அவர்களுக்குக் காலம் காலமாகக் கல்வியுரிமை, சொத்துரிமை, குடியுரிமை மறுக்கப்பட்டுவந்தது. தீண்டாமையால் ஏற்பட்ட அத்தகைய பாகுபாட்டைப் போக்கும் செயலாகவே ஆங்கிலேயர் ஆட்சி தலித்துகளுக்கு அறிவித்த இடஒதுக்கீடு பார்க்கப்பட்டது.

இதையொட்டி எழுந்த முரண்பாடுகளால் காங்கி ரஸுக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே புனே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1932 செப்டம்பர் 24-ல் புனே ஒப்பந்தத்தில் சர்தார் படேல், ராஜாஜி, தேவதாஸ் காந்தி ஆகியோரும், டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் கையெழுத்திட்டனர். “ஒடுக்கப்பட்டவர்களுக்கு அனைத்து ஆட்சியதிகாரங் களிலும் கொடுக்கப்பட வேண்டிய பங்குகள் எவ்விதத் தடையுமின்றி வழங்கப்படும்” என்று உறுதிபட கூறுகிறது புனே ஒப்பந்தம்.

புனே ஒப்பந்தத்தை மறக்காத படேல், அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான அவையில் பேசிய போது, தலித்துகளைச் சுட்டிக்காட்டி, “இந்த மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுவருகிறார்கள். அவர்கள் இன்னும் பாதுகாக்கப்படவில்லை. நாம்தான் அவர்களின் அறங்காவலர்கள். புனே ஒப்பந்தத்தின்படி, இதற்கான வாக்குறுதியை நாம் அளித்திருக்கிறோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோமா? அந்த வகையில் நாம் குற்றம் இழைத்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

படேல் எழுப்பிய கேள்வி இன்றும் அப்படியே நிற்கிறது. நீதித் துறையின் காதுகளிலேயே விழாவிட்டால் யார் காதில் விழும்?

தொல்.திருமாவளவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தொடர்புக்கு: vckhq2011@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x