Last Updated : 02 Mar, 2016 10:03 AM

 

Published : 02 Mar 2016 10:03 AM
Last Updated : 02 Mar 2016 10:03 AM

இது சோஷலிச பட்ஜெட்டா?

வெளித்தோற்றங்கள் நம்மை ஏமாற்றக்கூடியவை. விவசாயி களின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவது பற்றி நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார். கிராமப்புற மேம்பாட்டுக்கும் சமூக நலத் திட்டங்களுக்கும் அதிக ஒதுக்கீடுகள் செய்துள்ளார். இவையெல்லாம் வலதுசாரியான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், திடீரென ‘சோஷலிச’த்தை நோக்கி திரும்புகிற தோற்றத்தை எழுப்பலாம். ஆனால், உண்மை நிலை வேறு.

2009-10 நிதியாண்டில் 15.9% ஆக இருந்த அரசாங்கத்தின் செலவுகள், கடந்த ஆண்டில் 13.3% ஆக இறங்கியது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 12.6 % ஆக மேலும் குறைந்துவிட்டது.

2015-16க்கான பொருளாதார ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப் பட்டது. சுகாதார நலனுக்கும் கல்விக்கும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அது சுட்டிக்காட்டியது. அந்த அறிவுரையை பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை.

சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் 9% முதல் 10% வரை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2% பொதுச் சுகாதாரம் தொடர்பான திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற நிலைக்குப் போவதற்கான பாதையில் 30% முதல் 40% அளவுக்கு உயர்வு இருக்க வேண்டும். அதற்குக் கீழாகவே இந்த ஒதுக்கீடு இருக்கிறது.

சமூக-பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பின் விவரங்கள் கடந்த ஆண்டு வெளியிடப் பட்டன. அதன்படி இந்தியாவின் கிராமப்புறத்தில் உள்ள 75% குடும்பங் களில் குடும்பத் தலைவர் மாதம் ரூ 5,000-க்கும் குறைவாகச் சம்பாதிக் கிறார். 50% கிராமப்புறக் குடும்பங்கள் தினக்கூலி அடிப்படையிலான உடல் உழைப்பு மூலமாகவே வாழ்கின்றன. இத்தகைய சூழல்கள் அதிகமான நிதி ஒதுக்கீட்டைக் கோருகின்றன.

தேசிய சமூக உதவித் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.9,000 கோடியிலிருந்து ரூ.9,500 கோடியாக உயர்ந்துள்ளது. 55 வயதான அனைவருக்கும் ஓய்வூதியம் என்பதும் மாதம் 300 ரூபாய் என்பது 500 ஆக உயர்த்த வேண்டும் என்பதும் இன்னும் ஏற்கப்படவில்லை என்கிறார் டெல்லியைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளர் ஹேப்பி பந்த்.

விவசாயிகளைப் பிரதானமாகக் கொண்டது பட்ஜெட் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு என்பது தொடர்ந்து வறட்சியைச் சந்திக்கும் விவசாயிகளுக்குப் போதவே போதாது. கிராமப்புற வேலைஉறுதித் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 38,500 கோடி. போன வருடத்தைவிட சிறிதளவு அதிகம். இந்தத் திட்டம் அர்த்தமுள்ளதாக நடக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் ரூ. 50,000 கோடி வேண்டும்.

ஜி.சம்பத், பத்திரிகையாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x