Last Updated : 03 Mar, 2016 09:05 AM

 

Published : 03 Mar 2016 09:05 AM
Last Updated : 03 Mar 2016 09:05 AM

வங்கிகளின் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது?

வளர்ச்சிக்கான வங்கிகள் மூடப்பட்ட பிறகு கடன் தரும் பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகமானது

உலக அளவில் வங்கிகள் சிக்கலில் ஆழ்ந்துள்ள வேளையில், சமீபத்திய வாராக் கடன்கள் பற்றிய தரவுகள் இந்திய வங்கிகளையும் அதே கூட்டத்தில் சேர்க்கின்றன. வெளிநாடுகளில் வங்கிகளின் பங்கு மதிப்புகள் சரிந்துகொண்டிருக்கின்றன. காரணம், டெபாசிட்டுகளுக்கு வட்டி தருவதற்குப் பதிலாக, டெபாசிட்டிலேயே குறிப்பிட்ட சதவீதத் தொகையை வங்கிகளே எடுத்துக்கொள்கின்றன. இதை எதிர்மறை வட்டி (நெகடிவ் இன்ட்ரஸ்ட்) என்கிறார்கள். பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது இங்கு வந்து ஏன் பணத்தை முடக்குகிறீர்கள் என்பதே அதன் பொருள். நல்ல வேளையாக, இந்தியாவில் டெபாசிட்டுகளுக்குக் குறைவாகவேனும் வட்டியைத் தந்துவருகிறார்கள். அமெரிக்காவில் வங்கிகளின் வாராக் கடன் தொகையை அரசே முழுக்க வழங்கிக் கடனை அடைத்துவிட்டது. ஐரோப்பாவில் கடனின் சிறுபகுதியை மட்டும் தவணை முறையில் வங்கிகளுக்கு வழங்கினர். இதனால் கடனும் குறையவில்லை, வங்கிகளும் மீள முடியவில்லை. இந்திய அரசு இவற்றைப் பாடமாகக்கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இந்திய வங்கிகளின் வாராக் கடன், பலதரப்பட்ட கடன்களில் சிறு பகுதிதான் என்பதால் ஓரளவுக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், மேற்கொண்டு வருவாயை ஈட்ட முடியாத கடன் இனங்கள் அரசு வங்கிகளில்தான் அதிகம் காணப்படுகின்றன.

இந்தியா போன்ற குறைந்த வருவாய்ப் பிரிவினரும் மத்தியதர வர்க்கத்தினரும் அதிகம் உள்ள நாடுகளில் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) பெருநிறுவனங்களின் மொத்தக் கடன் விகிதமானது 2005-ல் 45% ஆக இருந்தது

2014-ல் 74% ஆக உயர்ந்துவிட்டது. பெரிய அடித்தளக் கட்டுமானப் பணிகளுக்கு தரப்பட்ட கடன்கள்தான் வசூலிக்க முடியாமல் முடங்கியிருக்கின்றன.

வெளிநாடுகளில் வாங்கும் கடனுக்கு வரம்பு விதிக்கப்பட்டுவிட்டதால், இந்திய வட்டி விகிதங்களில் மிகப்பெரிய ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய அனுபவம் என்னவென்றால் 2008, 2011, 2013 ஆண்டுகளில் பொருளாதாரம் வலுப்படத் தொடங்கியபோதெல்லாம் வெளிநாட்டு முதலீடு மீண்டும் இந்தியாவை நோக்கித் திரும்பியது. இப்போது உள்நாட்டு முதலீட்டாளர்கள் உதவிவருகின்றனர். குறுகியக் காலக் கடன்கள் மீது அரசு விதித்த கட்டுப்பாடுகளும் பலன் தரத் தொடங்கியுள்ளன.

பிற வங்கிகளுடன் போட்டியிட்டு லாபம் ஈட்ட தன்னால் முடியும் என்பதை பொதுத்துறை வங்கிகள் கடந்த காலத்தில் நிரூபித்துள்ளன. 1990 பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு அவை நன்கு செயல்பட்டன. சில விஷயங்களில் தனியார் வங்கிகளைக்கூட மிஞ்சின. 1991-ல் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு 12.8% ஆக இருந்தது, 2009-10-ல் வெறும் 2.4% ஆகக் குறைந்தது.

பொதுத்துறை, தனியார்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகளின் பிரச்சினைகளுக்கு அரசின் தலையீடு, முடிவெடுத்தலில் தவறுகள், புறக் காரணிகள் என்று பல காரணங்கள் உண்டு. அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்குக் கடன் கொடுப்பது என்று அவர்கள் எடுத்த முடிவுகளுக்கு முதல் இரண்டு காரணங்களுமே பொறுப்பு. பெரிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்தே துணையாக இருந்த வரலாறு அவற்றுக்கு உண்டு. வளர்ச்சிக்கான வங்கிகள் மூடப்பட்ட பிறகு கடன் தரும் பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகமானது. நாட்டின் உயர் வளர்ச்சிக்குக் காரணமாக விளங்கக்கூடிய அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்கு நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளும் வேறு தடங்கல்களும் பெருமளவுக்கு ஏற்படக்கூடும் என்பதை அவர்கள் முன்கூட்டியே உணர்ந்திருக்கவில்லை. 2011-ல் விலைவாசி உயர்ந்ததால் அதைக் கட்டுப்படுத்த வங்கிகள் தரும் கடன்கள் மீதான வட்டியை உயர்த்தியதாலும் பொதுத்துறை வங்கிகளின் வர்த்தகம் குறைந்து பாதிப்புகள் ஏற்பட்டன.

இதற்கிடையே தனியார் வங்கிகள் இடர்கள் குறைவான, உடனே வசூலாகக்கூடிய, சில்லறை வர்த்தகம் போன்றவற்றுக்கு அதிகக் கடன்களை அளித்தன. எனவே, அவற்றுக்கு நல்ல லாபம் கிடைத்தது. 2011-ல் பொதுத்துறை வங்கிகளுக்குக் கிடைத்ததைவிட அதிக முதலீடு தனியார் வங்கிகளுக்குக் குவிந்தது. தனியார் வங்கிகள் வேறு துறைகளுக்கும் வேறு தொழில்களுக்கும் அதிக அளவு கடன் தந்ததால் ஒட்டுமொத்தமாக இந்திய வங்கித் துறைக்கு வரவிருந்த வாராக் கடன் சுமை கணிசமாகக் குறைந்தது.

பொருளாதாரம் மீட்சியடைந்தால் வாராக் கடன்களும் குறையும். ஆனால், வெளியிலிருந்து ஏற்படும் அதிர்ச்சிகளும், உள்நாட்டு அரசியல் முட்டுக்கட்டை நிலையும் கடன்களைத் திரும்ப வசூலிக்க முடியாமல் தடுத்துவருகின்றன. வங்கிகளின் செயல்பாட்டுக்குத் தேவைப்படும் மூலதனத்தைப் பெறுவதற்கு, வங்கிகள் நல்ல நிலையில் நடக்கும்போதே நிதி ஒதுக்கப்பட வேண்டும். வாராக் கடன் சுமையிலிருந்து மீள வங்கிகளுக்கு அதிக காலம் பிடிக்கிறது. இதனாலும் கடன் வழங்கலில் வளர்ச்சியும் வேகமாக இல்லை. பொதுத்துறை வங்கிகளில் அதிகப் பங்குகளை வைத்திருப்பது அரசுதான் என்பதால், அவற்றுக்குத் தேவைப்படும் நிதியைப் பெருமளவுக்கு அளிக்க வேண்டிய கடமையும் அரசுக்கே இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் மூலதனத் தேவைக்கு பட்ஜெட் ரூ.25,000 கோடியை ஒதுக்கியிருக்கிறது. இது போதாது. வங்கிகளின் கடன் முழுவதையும் அரசு ஏற்று அடைத்துவிட்டு நிதியை வழங்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் முதலீடுகளில் பெரும்பகுதி மானியங்களாகும். இந்த மானியங்களை மக்கள்தான் வரிகள் மூலம் செலுத்திவருகின்றனர். வளர்ச்சி வங்கிகள் மூடப்பட்டபோதும் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்தபோதும் அந்தச் சுமையை ஏற்றது மக்கள்தான். 1990-ல் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தம் இதில் சில ஓட்டைகளை அடைத்தது. சந்தைக்கு அது முக்கியத்துவம் அளித்தது. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் தனியார் வங்கிகளின் பங்களிப்பு போதுமானதாக இல்லை. எனவே, பொதுத்துறை வங்கிகளைக் கடன் தருமாறு அரசு கேட்டுக்கொண்டது. கடன் ஏற்படும்போதெல்லாம் அதை அரசு இட்டு நிரப்புவதால் அரசுத்துறை நிர்வாகங்களுக்கு அந்தக் கடன் சுமை குறித்து அதிகக் கவலை ஏற்படுவது கிடையாது.

அரசின் பொறுப்பு

பொதுத்துறை வங்கிகள் செயல்படத் தேவைப்படும் நிதியை மீண்டும் அளிப்பதுடன் அரசு நின்றுவிடக் கூடாது. வங்கிகளைச் சரியாகக் கட்டமைக்க சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். பொதுத்துறை வங்கிகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். வங்கியின் நிர்வாகிகள் தாங்கள் வழங்கும் கடனுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இழப்பு வந்தாலும் அது நிர்வாகிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்கப்பட வேண்டும். வங்கிகளின் நிர்வாகக் குழுக்களை எளிதாக மாற்றும் விதத்தில் விதிகள் திருத்தப்பட வேண்டும்.

ஒரு நிறுவனத்திடமிருந்து தனக்குக் கடன் பாக்கி வர வேண்டும் என்றால் அதற்குக் கடன் தருவதையே வங்கிகள் நிறுத்திவிடுகின்றன. அதற்குப் பதிலாக அந்தத் திட்டங்களுக்கு புத்துயிர் ஊட்டிச் செயல்பட வைத்து, மேலும் கடன் தந்து முழுக் கடனையும் வசூலிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடனைத் திருத்தியமைக்க ரிசர்வ் வங்கி புதிய வழிமுறைகளைக் கூறியிருக்கிறது. அதைக் கையாள வேண்டும். பெரும் தொகைகளைக் கடன் வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிடுமாறு உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியிருக்கிறது. வாராக் கடனாக இருந்தாலும் நிர்வாகக் கோளாறால் ஏற்படும் இழப்பாக இருந்தாலும் இறுதியில் தலையில் சுமப்பது வரி செலுத்துவோர்தான். எனவே, வங்கிகளின் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்று அறியும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. எந்தவித நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகாமல் நேர்மையாக முடிவெடுக்கும் நிர்வாகிகள் வங்கிகளுக்குத் தலைவர்களாக வர வேண்டும். வங்கிகளைச் சுதந்திரமாகவும் வர்த்தக நிறுவனமாகவும் நிர்வகிக்க வேண்டும்.

- மும்பையில் உள்ள இந்திரா காந்தி வளர்ச்சி, ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ஆஷிமா கோயல்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x