Published : 03 Mar 2016 09:35 AM
Last Updated : 03 Mar 2016 09:35 AM

மாற்றத்தை ஏற்படுத்திய 10 பட்ஜெட்டுகள்

இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய 10 பட்ஜெட் அறிக்கைகள் இவை.



*

ஆர்.கே. சண்முகம் செட்டி (26.11.1947)

இந்திய, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு போடப்பட்ட முதல் பட்ஜெட். எதிர்பார்த்த மொத்த வருவாய் ரூ.171.15 கோடி. செலவு ரூ.197.39 கோடி. ராணுவச் செலவு ரூ.92.74 கோடி. அகதிகள் மறுவாழ்வுக்கு ரூ.22 கோடியும், கோதுமை, அரிசி போன்றவற்றை ரேஷனில் விற்பதற்கும் கணிசமாக மானியமாகத் தரப்பட்டது. பருத்தி, நூலிழை மீதான ஏற்றுமதித் தீர்வை மட்டுமே முக்கியமான வரி விதிப்பு.

ஜான் மத்தாய் (28.02.1950)

இந்தியக் குடியரசின் முதல் பட்ஜெட். திட்டக்குழுவை உருவாக்க வழிகாட்டியது. ஆண்டுக்கு ரூ.1.21 லட்சத்துக்கும் மேல் சம்பாதித்த பெரும் பணக்காரர்களுக்கு ஒரு ரூபாயில் 8.5 அணா வருமான வரியாக வசூலிக்கப்பட்டது.

திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி (15.05.1957)

இறக்குமதி மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. ஏற்றுமதியாளர்களின் நலனுக்காக இன் சூரன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. செல்வ வரி, செலவு வரி, ரயில் பயணக் கட்டணத்தின் மீது வரி அறிமுகம். எக்சைஸ் வரி அதிகபட்சம் 400%. மாத வருமானம், வணிக வருமானம் வேறு முதலீட்டின் மீதான வட்டி, வாடகை வருமானம் வேறு என்று வகைப்படுத்தினார். ஆனால், பட்ஜெட்டால் நிலைமை மோசமானது. ஹங்கேரியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் நிகோலஸ் கால்டர் ஆலோசனையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.

மொரார்ஜி தேசாய் (29.02.1968)

எக்சைஸ் அதிகாரிகள் ஆலைக்கே சென்று முத்திரையிட்டு உற்பத்தியை அங்கீகரிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி. இதனால் உற்பத்தி பெருகியது. கணவன், மனைவி இருவருமே சம்பாதித்தால் வாழ்க்கைத் துணைவருக்குப் படி தரும் முறையை நீக்கினார். இவ்விருவரில் யார், யாருக்குக் கொடுத்தார் என்று வெளியாள் முடிவு செய்வது சரியில்லை என்று விளக்கம் தந்தார்.

யஷ்வந்த் ராவ் பல்வந்த் ராவ் சவாண் (28.02.1973)

பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இந்திய செம்பு கார்ப்பரேஷன், நிலக்கரிச் சுரங்கங்களை தேசியமயமாக்க ரூ.56 கோடியை ஒதுக்கினார். தொழில் நிறுவனங்களுக்குத் தடையில்லாமல் நிலக்கரி கிடைக்க இந்நடவடிக்கையை எடுத்தார். அரசு மட்டுமே ஏகபோக நிறுவனம் என்பதால், உற்பத்தி பெருகுவதற்குப் பதிலாகச் சரிந்தது. திருட்டு அதிகமானது. இதன் பிறகு நிலக்கரி இறக்குமதி தொடர்கதையானது.

விசுவநாத் பிரதாப் சிங் (28.02.1986)

மாட்வாட் என்ற மதிப்புக் கூட்டப்பட்ட வரி முறையை அமல்படுத்தினார். மறைமுக வரிகளில் சீர்திருத்தத்துக்கு இது கதவைத் திறந்துவிட்டது. சிறுதொழில் வளர்ச்சி வங்கி, ரயில்வே, நகராட்சித் துப்புரவுப் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீடு, செருப்பு தைப்போர், ரிக் ஷா ஓட்டிகள் உள்ளிட்டோருக்கு வங்கிக் கடன் மானியம் ஆகியவற்றை அறிவித்தார். யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா மியூச்சுவல் பண்ட், டெல்லி, மும்பையில் மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட் நிறுவனத்தை ஏற்படுத்தினார். வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க அமல்பிரிவு இயக்ககத்துக்கு அதிகாரம் அளித்தார்.

ராஜீவ் காந்தி (28.02.1987)

நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச மாற்று வரியை (எம்.ஏ.டி.) அறிமுகப்படுத்தினார். முதலாண்டில் ரூ.75 கோடி மட்டுமே வசூலானாலும் பின்னால் பல மடங்கானது. வியட்நாம் போரின்போது அமெரிக்கா கடைப்பிடித்த உத்தி இது.

மன்மோகன் சிங் (24.07.1991)

இறக்குமதி ஏற்றுமதிக் கொள்கையை மாற்றினார், இறக்குமதிக்கு உரிமம் பெறும் முறையை ரத்து செய்தார், ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தீவிரம் காட்டினார். இந்திய நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடுவதற்கேற்ற இறக்குமதியை அளவோடு அனுமதித்தார். சுங்கத்தீர்வை 220% என்றிருந்ததை 150% ஆகக் குறைத்தார். வெளிவர்த்தகப் பற்றுவரவு மோசமாக இருந்ததை நல்ல நிலைக்கு மாற்றினார். உலகில் வேகமாக வளரும் இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்தார்.

ப. சிதம்பரம் (28.02.1997)

தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வரி விகிதங்களைக் குறைத்தார். முந்தைய ஆண்டுகளில் செலுத்திய குறைந்தபட்ச மாற்று வரியைப் பிந்தைய ஆண்டுகளுக்கும் பயன்படுத்த அனுமதித்தார். கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவர தானாக முன்வந்து அறிவிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். வருமான வரி மூலம் வருவாய் பெருகியது. வரி விகிதம் குறைக்கப்பட்டதால் மக்களிடையே செலவுக்குப் பணம் மிஞ்சியது. பொருளாதார, சமூக நல நடவடிக்கைகளுக்கு அதிக நிதி ஒதுக்கினார். கனவு பட்ஜெட் என்று அவருடைய பட்ஜெட்டை அழைத்தனர்.

யஷ்வந்த் சிங் (29.02.2000)

மென்பொருள் ஏற்றுமதியாளர்களுக்கு மன்மோகன் சிங் அளித்த வரி விடுமுறைச் சலுகையை நீக்கி, வருவாயைப் பெருக்கினார். இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத் தக்க மாற்றங்களை ஏற்படுத்திய 10 பட்ஜெட் அறிக்கைகள் இவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x