Published : 02 Mar 2016 09:45 AM
Last Updated : 02 Mar 2016 09:45 AM

மேலும் ஒரு பட்ஜெட்!

தெளிவில்லாத கொள்கைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட் இது



ஒரு மகத்தான சாதனை! 12,187 வார்த்தைகள், 111 நிமிட வாசிப்பு. வாசிப்பின்போது குறுக்கீடுகள் இல்லை - உண்மை; அவையில் எல்லோரையும் தூங்க வைத்தார் அருண் ஜேட்லி. நிறைய பட்ஜெட் உரைகளைக் கேட்டிருக்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங்கின் உரையைக் கேட்டதும் உற்சாகம் பொங்கி வழியும் என்று சொல்ல மாட்டேன். ஜேட்லி அவரையும் மிஞ்சிவிட்டார்!

இரண்டு வகைகளில் சோர்வை ஏற்படுத்தினார் ஜேட்லி. தன்னுடைய வரி பிரேரணைகளைத் தெரிவிக்க பேச்சில் மூன்றில் ஒரு பகுதியைப் பயன்படுத்தினார். ஆனால், அவற்றால் ஒரு மாறுதலும் ஏற்படப்போவதில்லை. சுங்கம், கலால் வரி விகிதங்களில், விதிகளில், விதிவிலக்குகளில் சின்னஞ்சிறு மாற்றங்களைச் செய்து அவற்றையெல்லாம் வாசித்தார். நல்லவேளை அவற்றிலும் பெரும்பாலானவற்றைப் படிக்காததால் 20 நிமிடங்களில் முடித்தார். செலவு கோரிக்கைகளைத்தான் அதிக நேரம் படித்தார். அது இந்தியாவில் இப்போது மரபாகிவிட்டது. பட்ஜெட்டை மக்களுடைய ஓட்டுகளைக் கவரும் ஆயுதமாகத்தான் பார்க்கின்றனர். வேளாண்மை, ஊரகம், சமூக நலன், கல்வி, அடித்தளக் கட்டமைப்பு என்ற ஐந்து தலைப்புகளுக்குள் இவற்றை அவர் அடக்கியதுதான் வியப்பை அளித்தது.

இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்

வரி விதிப்பை எடுத்துக்கொள்வோம். பெரும்பாலான வரி விகிதங்கள் இப்போது நிலைபெற்றுவிட்டன. நேரடி வரி விகிதங்கள் சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடியதாகவே இருக்கின்றன. மறைமுக வரிகளும் பொதுச் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்தால் அந்த நிலையை அடைந்துவிடும். மாநிலங்கள் ஏற்காததால் இதில் இழுபறி நீடிக்கிறது.

எனவே, எல்லா நிதியமைச்சர்களுமே இங்கும் அங்கும் சிறு மாற்றங்களையே செய்கின்றனர். ஜேட்லியின் அறிவிப்புகளில் சில விரும்பத் தக்கவை. நம்பிக்கைக்குரிய இறக்குமதியாளர்கள் சுங்க வரியைக் காலம் தாழ்த்திச் செலுத்தலாம், ஏழு பெரு நகரங்களில் வருமான வரியை ஆன்-லைன் மூலமே செலுத்தலாம் என்பன போன்றவை, சில தேவையற்றவை. ரூ.10 லட்சத்துக்கு மேல் லாப ஈவு பெற்றால் அதிக வரி செலுத்த வேண்டும் என்பது உட்பட.

ஜேட்லிக்குத் தங்கம், தங்க நகை என்றால் அப்படியொரு ஈர்ப்பு! முதலில் தங்கத்தின் மீது வரி சுமத்தினார். அவர் எதிர்பார்த்தபடி வருவாய் பெருகவில்லை. காரணம், பெரும்பாலான தங்கம் கடத்திதான் கொண்டுவரப்படுகிறது. அனுபவத்திலிருந்து பாடம் பெறத் தவறும் ஜேட்லி இப்போது தங்க நகைகள் மீது வரி விதித்திருக்கிறார். இரண்டு காரணங்களால் இதற்குப் பலன் ஏற்படலாம். கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான கிளைகளுடன் நகைக்கடை நிறுவனங்கள் உருவாகியிருப்பதால் வரி ஏய்ப்பு சாத்தியமில்லை. நகைகளை வெளிநாடுகளில் செய்து கடத்தி வர முடியாதபடிக்கு இங்கே பொற்கொல்லர்களின் ஊதியம் மிகக் குறைவு. அதே சமயம், நகையின் மதிப்பை வெகு எளிதாகக் குறைத்துக் காட்ட முடியும். இந்த ஒரு வரியால் மட்டும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கிடைத்துவிடும் என்று நம்பினால் இழப்பு அவருக்குத்தான்.

ஆரம்பகட்டத் தவறுகள்

எல்லா அரசுகளுமே விவசாயிகளுக்குச் சலுகைகளை வாரிவழங்கத் தயாராக இருக்கின்றன. காரணம், விவசாயிகளிடம் மிகப்பெரிய வாக்கு வங்கி இருக்கிறது. பருவமழை தவறிவிட்டதால் சாகுபடி பொய்த்துவிட்டது. எனவே, அவர்களுக்கும் அரசின் உதவி தேவை. ஆனால், அவர்களுடைய அவசரம் ஜேட்லிக்குத் தெரியவில்லை. இன்னும் 5 ஆண்டுகளில் விவசாயிகளுடைய வருவாயை இரட்டிப்பாக்கிவிடுவதாகக் கூறுகிறார். ஆண்டுக்கு 15% வருவாய் உயர வேண்டும். ஆண்டுக்கு 3% அளவுக்குத்தான் இப்போது வருவாய் உயர்கிறது என்றாலும் வேளாண் விளைபொருட்களுக்கான விலை 12% அதிகரிக்க வேண்டும். அப்படி நடந்தால் பணவீக்க விகிதம் எகிறுவதற்கு அதைவிட வேறு வினையே வேண்டாம். அப்படியே விலை உயருவதாக வைத்துக்கொண்டாலும், அதன் பலன் விவசாயிகளுக்கு அப்படியே போய்ச் சேருமா?

இதில்தான் பால பாடம் இருக்கிறது. விவசாயக் கடன்கள் மீதான வட்டியில் ஒரு பகுதியை வேண்டுமானால் மானியமாக அரசு தரக்கூடும். சாகுபடி பொய்த்துவிட்டால் விவசாயக் கடனுக்கான அசலை விடுங்கள், வட்டியைக் கட்டுவதற்குக்கூடப் பணம் தேவைப்படும். இப்போது விவசாயத்தை நம்பியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத் தொழிலாளர்கள்தானே தவிர, நில உடைமையாளர்கள் அல்ல. அவர்கள் விவசாயிகளைவிட வறியவர்கள். சாகுபடி பொய்த்துவிட்டால் அவர்கள் வேலையைக்கூட இழந்துவிடுவார்கள். கிராமங்கள், விவசாயிகள் குறித்து ஏதும் தெரியாதவர்களாக இருந்தாலும்கூட, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை ஊன்றிப் படித்திருந்தால் பல உண்மைகள் புரிந்திருக்கும். இப்படி மோசமான கொள்கைகளை வகுக்காமல் தவிர்த்திருக்கலாம்.

ஜேட்லிக்குப் பொருளாதாரம் தெரியாது

திறந்தவெளியில் மலம் கழிக்காத கிராமங்களுக்கு மானியம் தருவோம் என்று ஜேட்லி அறிவித்திருக்கிறார். அதை அரசு எப்படிக் கண்டுபிடிக்கும்? அதற்கென்று 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்களா? இப்படியெல்லாம் சிந்திப்பதைவிட, மக்கள் ஏன் திறந்தவெளியை நாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். பொதுக் கழிப்பறைகளைக் கட்டிவிட்டு, அவற்றுக்குத் தண்ணீர் வழங்காமல் இருந்தாலோ, தூய்மையாகப் பராமரிக்கத் தவறினாலோ மக்கள் அதைப் பயன்படுத்த மாட்டார்கள். புத்திசாலித்தனமாகச் சிந்திக்காவிட்டால் இத்தகைய திட்டங்கள் பயனற்றுப்போகும்.

நிதியமைச்சகத்தின் கீழ்தான் வங்கிகள் வருகின்றன. அவை வாராக் கடன் சுமையால் தத்தளிக்கின்றன. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கட்டாததால் வாராக் கடன்கள் அதிகரித்துவிட்டன. அதில் பெரும்பகுதி வீடு, அடுக்ககம் கட்டுகிறவர்களால் வாங்கப்பட்டுள்ளது. ஏழைகள் வீடு கட்டப்படுவதற்கு அமெரிக்க அரசு பிணை நின்றது. வீடு வாங்கியவர்களில் பெரும்பாலானோருக்கு வருமானம் இல்லாததால் கடன் சுமை சேர்ந்தது, வங்கிகள் நொடிந்தன. அரசு தலையிட்டு வங்கிகளுக்கு நிதியுதவி அளித்து நிமிர வைக்க நேர்ந்தது.

அதேபோல், வாராக் கடன்களை அடைக்க இந்திய அரசும் தலையிட வேண்டும். ரூ.25,000 கோடி முதலீட்டு உதவியெல்லாம் உதவாது. புதிய கடன்களைக் கொடுப்பதைவிட, வீடு வாங்குவோருக்கு மானியங்களை அனுமதிப்பதன் மூலம் விற்கப்படாத வீடுகளையும் அடுக்ககங்களையும் விற்றுவிட முடியும். ஜேட்லிக்குப் பொருளாதாரம் பற்றி அதிகம் தெரியாது என்பதால், மக்களும் நாடும் கோடிக்கணக்கில் பணத்தைப் பலி கொடுக்க நேர்ந்திருக்கிறது.

- அசோக் வி. தேசாய், பொருளாதார நிபுணர்.

‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x