Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

நாகவீணை

ப.ஷீலா

கோவில் சிற்பங்கள் அவை சார்ந்த காலங்களின் பண்பாட்டினைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக விளங்குகின்றன. அவை அக்கால வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை இசைக்கருவிகள். வழிபாடுகள், ஊர்வலங்கள், அரசவை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு போன்ற நிகழ்வுகளில் பல்வேறு இசைக்கருவிகள் அக்காலத்தில் இசைக்கப்பட்டு வந்தன.

இலக்கியங்கள் இசைக்கருவிகளைப் பற்றிய பல பயனுள்ள தகவல்களைக் குறிப்பிட்டிருந்தாலும், சிற்பங்களே நேரடிச் சான்றுகளாகின்றன. கோவில் கலை வளர்ச்சியுற்ற காலத்தில் கோவில்தோறும் இசைக்கலைஞர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்குப் பொன்னும் பொருளும், நிலமும், வீடும் வழங்கி இசையும் நடனமும் தடையின்றி நடைபெற மன்னர்கள் காலம் முதற்கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அவை அழியாவண்ணம் காப்பதற்குக் கோயில் சுவர்களில் இசைக்கருவிகள் வாசிக்க, நடன மகளிர் ஆடும் பல்வேறு சிற்பங்களைச் செதுக்கியதுடன் ஓவியங்களையும் வரைந்துள்ளனர். அவற்றைக் காண்பவர் மனதில் பக்தி ரசம் பெருக்கெடுப்பதுடன், அக்கால இசை, நடனக் கூறுகள் அழியாவண்ணம் காப்பாற்றப்பட்டுள்ளன.

பழங்கால இசைக்கருவிகள் பல இன்று வழக்கொழிந்துவிட்டன. அவற்றுள் சில மாற்றங்களுக்குள்ளாகி மருவிப் பயன்பாட்டில் உள்ளன. சிதம்பரம் நடராசர் கோவிலிலுள்ள சிவகாமி அம்மன் சந்நிதியின் வெளிப்பிரகாரத் திருச்சுற்று மாளிகையின் வடக்குச் சுவர்ப் பகுதியில் ஓர் இசைக்கலைஞன் வாசிக்கும் கருவி, இயல்பாகக் கோவில்களில் வாசிக்கப்படும் இசைக்கருவிகளிலிருந்து மாறுபட்டுக் காணப்படுகிறது. இதுபோன்ற கருவி இக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தின் அடிமேடை முன்பகுதியில் இடதுபுறம் காணப்படுகிறது. மேலும், கர்நாடக மாநிலத்தில் ஹளேபேடு ஹொய்சாளேஸ்வரர் சந்நிதியின் வடக்குப் பக்கத்தில் கந்தர்வன் ஒருவன் சிதம்பரத்தில் காணும் கருவியைப் போன்று வாசிக்கும் நிலையில் உள்ளான்.

அரிய இசைக்கருவி

சிதம்பரம் நடராசர் கோவில், ஹளேபேடு ஹொய்சாளேஸ்வரர் கோவிலில் காணப்படும் அரிய வகை இசைக்கருவி நரம்பிசைக் கருவியாகும். இதனை வாசிப்போர் ஆண் இசைக்கலைஞர்களாவர். இக்கருவி இடது தோளுக்குக் குறுக்கே வலக்கால் மேற்பகுதி வரை செங்குத்தாக அமைந்துள்ளது. இதன் வளைந்த தலைப்பகுதி நாகம் போன்றுள்ளது. தண்டுப்பகுதி வீணையில் காணப்படுவதுபோல் பல பண்களை ஒரே கருவியில் இசைக்கக்கூடிய பல மெட்டுக்களைக் கொண்டுள்ளது. அடிப்பகுதி தட்டையாக உள்ளது. வாசிப்பவர் இடது கை உள்ளங்கையில் தண்டின் மேற்பகுதியைத் தாங்கியுள்ளார். வலது கையிலுள்ள வில்லைக் கொண்டு கருவியின் அடிப்பகுதியிலுள்ள தந்திகளைத் தேய்த்து, ஒலியை எழுப்புகின்றனர்.

ஹளேபேடுவிலுள்ள சிற்பத்தில் இடதுகை மணிக்கட்டினைத் திருப்பி உள்ளங்கை தெரியும்வண்ணம் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவற்றைப் பலகையில் மேற்புறம் மேலும் கீழும் நகர்த்தி, இசைக் குறிப்புகளுக்கேற்பத் தந்திகளுக்கு அழுத்தம் கொடுத்து இசைக்கப்படுகிறது. வலது கையிலுள்ள வில்லினைக் கொண்டு கீழே இழுப்பர். இந்தக் கருவியை வாசிக்கும் விதம் வயலின் வாசிப்பதற்கு நேர் எதிரானதாகும். வயலினில் இடதுகையினால் தந்தியைக் கீழ்ப்புறம் தொட்டுக்கொண்டு மேற்புறம் வில்லினை இழுப்பர். மேற்காணும் சிற்பங்களிலுள்ள இசைக்கருவிகளின் தலைப்பகுதி நாகம் போன்றும் தண்டுப்பகுதி வீணையின் தண்டுப்பகுதி (Danda) போன்றும் அமைந்துள்ளதால், நாகவீணை என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வில்கொண்டு வாசிக்கும் இசைக் கருவிகள் உலக நாடுகளில் பழங்கால நாகரிகம் முதற்கொண்டு காணலாம். அவை மெட்டுக்களுடனோ (மயூரி) அல்லது மெட்டுக்களின்றியோ (வயலின்) காணப்படும். வில்கொண்டு வாசிக்கப்படும் இசைக்கருவிகள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் செல்வாக்குப் பெற்றுள்ளன. தாஸ், எஸ்ராஜ், தில்ரூபா போன்றவை வில்கொண்டு வாசிக்கும் கருவிகளாகும்.

வயலினுக்கு முன்னோடி

சிதம்பரம் நடராசர் கோவில், ஹளேபேடு கோயில் நாகவீணை சிற்பங்கள் பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. பிற்காலச் சோழர்கள் சாளுக்கிய சோழ மரபினர் என்பதால், சாளுக்கிய நாட்டிலிருந்து இக்கருவிகள் தமிழ்நாட்டுச் சிற்பங்களில் இடம்பெற்றிருப்பது தமிழக – தக்காணக் கலைப் பரிமாற்றங்களைக் காட்டுகிறது.

இந்தக் கோவில் சிற்பங்களில் காணப்படும் நாகவீணையின் மறுஎழுச்சியே தாஸ் ஆகும். இதன்வழி தோன்றியதே பிற்காலத்திய சாரங்கி, தில்ரூபா, எஸ்ராஜ், தாராசஹானாய் போன்ற கருவிகளாகும். வயலின், பிடில் போன்ற மேலை நாட்டுக் கருவிகளுக்கு நாகவீணை முன்னோடி என்பது அதன் காலத்திலிருந்து புலனாகிறது.

ப.ஷீலா, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக சிற்பத் துறைப் பேராசிரியர், தொடர்புக்கு: sheelaudaiachandran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x