Published : 08 Feb 2016 09:39 AM
Last Updated : 08 Feb 2016 09:39 AM

சாதியக் கண்ணோட்டம் அன்றும் இன்றும்!

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா (25), விடுதி நண்பரின் அறையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்தார். அவருடைய மரணம், முற்போக்கு மாணவர் குழுக்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்துக்கும் நாடு முழுக்கக் கல்விக்கூடங்களில் நிகழ்ந்துவரும் மோதல்களை ஓரளவுக்கு வெளிக்கொணர்ந்திருக்கிறது.

பாஜக தொடங்கி வித்யார்த்தி பரிஷத் வரையில் சங்கப் பரிவாரங்கள் சாதி, மத, பாலினச் சமத்துவத்துக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவை. அனைவரும் சமம் என்ற கொள்கையைவிட ‘அதிகார்’ ‘பகிஷ்கார்’ என்று, மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையிலான ஏற்பாட்டில் கவனம் செலுத்துபவை.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ரோஹித் பல்வேறு சமூகப் பிரச்சினைகளில் தீவிரச் செயல்பாட்டாளராக இருந்திருக்கிறார். அம்பேத்கரிய அரசியல், மாட்டிறைச்சித் தடைக்கு எதிரான போராட்டம், இந்திய தண்டனையியல் சட்டத்தில் மரண தண்டனையை இன்னமும் தொடருவது, 2013-ல் முஸாபர்நகரில் நடந்த வகுப்புக் கலவரம் போன்ற பல பிரச்சினைகள் குறித்துப் பல்கலைக்கழகங்களில் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்னால் நான்கு மாணவர்களுடன் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். சீர்குலைவு நடவடிக்கை களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி மாதாந்திர ஆய்வு உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது. சாதியவாதி, தீவிரவாதி, தேச விரோதி என்ற போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது வித்யார்த்தி பரிஷத்; மத்திய, மாநில அரசுகளுக்கு பரிஷத் அளித்த நெருக்குதலின்பேரில் ‘அம்பேத்கர் மாணவர் சங்கம்’ என்ற அவருடைய அமைப்பைச் சேர்ந்த அனைவரும் அலைக்கழிப்புக்கு உள்ளாயினர். இந்த அமைப்பு சென்னை இந்தியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட (சென்னை ஐ.ஐ.டி.) ‘அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டம்’ என்ற அமைப்பைப் போன்றது. அந்த அமைப்பும் 2015 கோடைப்பருவத்தில் கல்விக்கழக அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டது.

நகுல் சிங் சகானியின் ‘முஸாபர்நகர் பாக்கி ஹை’ என்ற ஆவணப் படத்தை பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட அம்பேத்கர் மாணவர் சங்கம் ஆதரித்ததால் வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் அவர்களைத் தாக்கி வகுப்பறைகளையும் விடுதியையும் விட்டு விரட்டினர்.

கல்வி நிலையங்களிலிருந்தும் வேலைவாய்ப்புகளி லிருந்தும் சூத்திரர்களையும் தலித்துகளையும் விலக்கி வைப்பது, இந்தியச் சமூக அடுக்கிலும் சிந்தையிலும் நடைமுறைகளிலும் காலம்காலமாக ஊறிப்போன ஒன்று. நம்முடைய புராதனக் காப்பியங்கள், காவியங்களிலேயே இதற்கான சான்றுகள் உள்ளன.

துரோணரும் ஏகலைவனும்

மகாபாரதக் கதையில் வரும் ஏகலைவன், நிஷாதர்கள் என்று அழைக்கப்படும் வேட்டுவக் குலத்தவரின் இளவரசன். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் அஸ்திரப் பயிற்சி அளிக்கும் துரோணாச்சாரியாரிடம் வில் வித்தை கற்கச் செல்கிறான். பழங்குடி என்பதால் அவனுக்கு வில்வித்தையைக் கற்றுத்தர துரோணர் மறுத்துவிடுகிறார். துரோணர் தரும் பயிற்சியை மறைந்திருந்து பார்க்கிறான் ஏகலைவன். அவரைப் போன்ற உருவத்தை மண்ணில் செய்து மானசீகக் குருவாக வரித்து, அஸ்திரப் பயிற்சிகளை மேற்கொண்டு சிறந்த வில்லாளியாகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அர்ஜுனனைவிட, தான் சிறந்த வில்லாளி என்பதை வெளிப்படுத்துகிறான். குருதட்சிணை தராமல் வித்தை கற்பது தவறு என்று கூறி, குருதட்சிணையாக அவனுடைய வலது கை கட்டைவிரலை காணிக்கையாகக் கேட்டுப் பெறுகிறார் துரோணர். இனி வில்லைப் பயன்படுத்த முடியாதபடி தன்னை வஞ்சித்துவிட்டார் துரோணர் என்பதை ஏகலைவன் உணரவேயில்லை. இதில் துரோணரின் சாதிப் பாகுபாடு அப்பட்டமாகத் தெரிகிறது. தன்னால் எல்லோருக்கும் கற்றுத்தர முடியும் என்றாலும், உயர் சாதியினருக்கு மட்டுமே அவர் கற்றுத்தந்திருக்கிறார். துரோணரின் சீடனாகத்தான் ஆக முடியவில்லை என்றாலும், சுயமாகக் கற்ற வித்தையைக்கூடப் பயன்படுத்த முடியாமல் ஏகலைவனிடமிருந்து அதைப் பறித்துவிட்டது வர்ணாசிரம (அ)தர்மம்.

சத்யகாம ஜாபாலி

இன்னொரு கதை சாண்டோக்ய உபநிஷதத்தில் வரும் சத்யகாம ஜாபாலியைப் பற்றியது. சத்யகாமனுக்குத் தனது தந்தை யார் என்று தெரியாது. அவனுடைய தாயின் பெயர் ஜபலா. எனவே, ஜாபாலி என்ற பெயருக்கு உரியவனாகிறான். அவன் கௌதமரின் ஆசிரமத்துக்குச் சென்று தன்னைச் சீடனாக ஏற்குமாறு வேண்டுகிறான். அவர் நீ யார், உன்னுடைய பெற்றோர் யார் என்று கேட்கிறார். தந்தையின் பெயரோ, வர்ணத்தின் பெயரோ தெரியாது என்று நேர்மையாக ஒப்புக்கொள்கிறான். அவன் உண்மையைச் சொன்னதால் மகிழ்ச்சியடைந்து அவனைச் சீடனாக ஏற்கிறார் கௌதமர். உண்மையை நேசித்தான் என்பதால் சத்ய காமன் என்ற காரணப் பெயர் அவனுக்கு ஏற்படுகிறது. அவனை இரு பிறப்பாளனாக்கும் பூணூல் அணிவிப்பு சடங்கைச் செய்துவிட்டு, அவனுக்குக் கல்வியைப் போதிக்கிறார் கௌதமர். பிராமணனின் தன்மையில் ஒன்று உண்மை பேசுவது என்பதால், அவனைப் பிராமணனாக அங்கீகரிக்கிறார். அதாவது, பிராமணன் யார் என்றால் பிறப்பால் மட்டும் அல்ல செயலாலும் என்று உணர்த்துகிறார்.

வாசகர்களுக்கு இக்கதை குழப்பத்தைத் தரலாம். கௌதமர் விதிவிலக்காக சத்ய காமனைச் சீடராக ஏற்றாரா அல்லது தந்தை யார் என்று தெரியாவிட்டாலும் தாய்க்கு மணம் ஆகாமல் இருந்தாலும் கோத்திரத்தைக் கூற முடியாவிட்டாலும் பார்வைக்குப் பிராமணனாகத் தெரியாவிட்டாலும் நேர்மையும் உண்மையும் இருந்ததால் பிராமணனாக அங்கீகரித்துக் கல்வி போதித்தாரா என்ற கேள்விகள் எழலாம். இந்திய வரலாற்றில் சாதி ஆதிக்கம் என்பது காலங்காலமாக எப்படிப் புரையோடிப் போயிருக்கிறது என்று காட்ட அம்பேத்கரே ஏகலைவன், சத்யகாமன் கதைகளை உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.

காலங்கள் மாறினாலும்…

கதைகளில் வரும் ஏகலைவனும் சத்யகாமனும் இறக்கவில்லை. ஆனால், ரோஹித் இறந்துவிட்டார். இந்த சோக முடிவு பல்வேறு எண்ணங்களை நமக்குள் தோற்றுவிக்கின்றன. நவீன அரசின் உயர் கல்விக்கூடங்களில் நிலவும், முறிக்க முடியாத சாதியப் போக்குகளும் எதிர்பார்த்திராத குரூரங்களும் ஒரு கணம் நம் கண் முன்னால் விரிகின்றன. துரோணரும் ஏகலைவனும் கௌதமரும் சத்யகாமனும் தங்களிடையே பேசி ஒரு முடிவுக்கு வர முடிந்திருக்கிறது. ரோஹித்துக்கு இந்திய அரசியல் சட்டமே பெருந்துணையாக இருக்கிறது. இந்நாட்டின் குடிமகன் என்ற வகையில் அடிப்படையான பல உரிமைகள், சமூக பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டுச் சலுகை, அம்பேத்கர் பெயரிலான மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் அதிகாரமளிப்பு பற்றிய புரிதல், அரசியல் விழிப்புணர்வு, சமத்துவத்துக்காகப் போராடும் ஆற்றல் எல்லாம் இருந்தும் அவருடைய வாழ்க்கை சோகத்தில் முடிந்திருக்கிறது; பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டபோதும் விடுதியிலிருந்து வெளியேற்றப் பட்டபோதும் அவரும் அவருடைய தோழர்களும் கொடும் பனியில் வெட்டவெளியில் படுத்துறங்க நேர்ந்தபோதும், ஆய்வு உதவித்தொகை நிறுத்தப்பட்டு அடிப்படைச் செலவுகளுக்குக் கடன் வாங்க நேர்ந்தபோதும், இனி விமோசனம் இல்லை என்ற விரக்திதரும் முடிவுக்கு அவர் வந்தபோதும் புராணத்திலும் இலக்கியத்திலும் இடம்பெற்றுவிட்ட அவருடைய முன்காலத்துச் சகோதரர்களைவிட மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் ரோஹித்.

நெஞ்சைப் பிழியும் அவருடைய தற்கொலைக் கடிதம், இனி நல்லதே நடக்கும் என்று இன்னமும் நம்பும் உள்ளங்களில் கூராகப் பாய்ந்து துளைக்கிறது. ‘என்னுடைய பிறப்பு, என் உயிரைப் பறிக்கும் விபத்து’ என்ற அமில வார்த்தைகள் இந்த சாதியமானது எத்தனைக் கொடுமையானது என்பதை இடியாக நெஞ்சில் இறக்கிப் பிளக்கிறது. இதுதான் இந்த மானிடப் பிறப்பு. நம்முடைய தந்தையையோ தாயையோ நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது; நாம் வாழும் குழு, சமூகமும் அப்படியே. இந்தியாவில் மட்டும்தான், சாதிய ரீதியிலான கட்டமைக்கப்பட்ட சமூகத்தில்தான், அதிலும் தலித்துகளுக்கு மட்டும்தான் சமத்துவமற்ற வாழ்க்கை நெறிகள் காரணமாக மரணம் எதிர்ப்படுகிறது. வாழ்நாள் முழுக்க சமத்துவமில்லாமல் அவமானங்களுடனேயே வாழவேண்டுமா அல்லது எதிர்த்துப் போராடி, நியாயமே இல்லாத முறையில், அற்பாயுளில் மரணிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க நேர்கிறது.

16.12.2012 என்பது எப்படி கொடூரமான பாலியல் வல்லுறவுக்குப் பலியான நிர்பயாவை நினைவுபடுத்து கிறதோ அப்படியே 17.1.2016 ரோஹித் வெமுலாவை நினைவுபடுத்தும்; ரோஹித் போன்றவர்களுக்குக் கண்ணியமான, வளமான வாழ்வு நிச்சயம் என்று உறுதியளித்த நம்முடைய அரசியல் சட்ட முன்னோடிகளின் உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டோம், என்றென்றும் வெட்கப்படத்தக்க வகையில்!

வளரும் சமூகங்கள் பற்றிய டெல்லி ஆய்வுக்கான மையத்தில் பணிபுரிகிறார் அனன்யா வாஜபேயி

சுருக்கமாகத் தமிழில்: சாரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x