Published : 10 Aug 2021 05:34 AM
Last Updated : 10 Aug 2021 05:34 AM

பாடப் புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம்

தொகுப்பு:ஆசை

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதியப் பின்னொட்டுடனேயே அறியப்படுவார்கள். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் எழுச்சியால் பொதுவெளியில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் இட்டுக்கொள்வது வெகுவாகக் குறைந்தது. எனினும், பாடப் புத்தகங்களில்கூட அறிஞர்கள், தலைவர்கள் பலரின் பெயர்கள் அவர்களின் சாதிப் பெயரோடு இணைந்தே அறியப்படுகின்றன. பாடப் புத்தகங்களில் அந்த சாதிப் பெயர்களை தமிழ்நாடு அரசு களைய ஆரம்பித்திருக்கிறது. இதன்படி உ.வே.சாமிநாதையர் இனி ‘உ.வே.சாமிநாதர்’ என்றும் ‘நீலகண்ட சாஸ்திரி’ இனி ‘நீலகண்டர்’ என்றும் ‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ இனி ‘மாயூரம் வேதநாயகம்’ என்றும் அழைக்கப்படுவார்கள். இது குறித்துப் பலரின் கருத்துகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ரவிக்குமார், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்

சாதிப் பின்னொட்டு சாதாரணர்களுக்கு மட்டுமல்ல, சாதனை யாளர்களுக்கும் தேவையில்லை. அவர்களுக்கு சாதனைதான் அடையாளம், சாதி அல்ல! பள்ளிக் கல்வித் துறையின் பாடநூல்களில் சாதிப் பெயர்களை நீக்கிய தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறேன்.

பிரபா கல்விமணி, கல்வியாளர்

பாடப் புத்தகங்களில் அறிஞர்கள், தலைவர்கள் பெயரில் உள்ள சாதிப் பின்னொட்டுகளை நீக்குவதை நான் வரவேற்கிறேன். இந்திய அளவில், பல முற்போக்காளர்களின் பெயரில்கூட ராவ், ரெட்டி என்று சாதிப் பெயர்கள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்தப் பின்னணியில் பார்த்தால், சாதிப் பெயர்களை நீக்குவதில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது. பெயர்களிலிருந்து சாதியை நீக்கினால் மட்டும் போதாது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமையைக் களைவதற்கு முற்போக்காளர்கள் ஒன்றுசேர வேண்டும்.

சோ.தர்மன், எழுத்தாளர்

ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளி, கம்மவார் மேல்நிலைப் பள்ளி, நாடார் மேல்நிலைப் பள்ளி, விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளி, ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, இல்லத்துப் பிள்ளைமார் உயர்நிலைப் பள்ளி, செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, சேனைத்தலைவர் ஆரம்பப் பள்ளி இது மாதிரி இன்னும் நிறைய இருக்கலாம். நெற்றியில் எழுதி ஒட்டியது மாதிரி சாதிப் பெயர்களைத் தாங்கி நிற்கும் இவற்றின் பெயர்களை மாற்றுவதில் என்ன சிக்கல். இதுவரை எந்த அரசும் இதுபற்றி யோசிக்கவே இல்லையே. இவை அனைத்துமே அரசு உதவி பெறும் பள்ளிகளே. இந்த மாதிரியான சாதிச் சங்கங்களால் நடத்தப்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அத்தனை பேரும் அந்த சாதியைச் சேர்ந்த நபர்களாகவே இருப்பார்கள். பெயர்களின் பின் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிப் பெயர்களை நீக்குவது மாதிரி, பள்ளிகளின் இந்த சாதிப் பெயர்களையும் மாற்றலாமே.

அஜிதா, வழக்கறிஞர்

அரசின் முடிவை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில், சிலருடைய பெயர்கள் வரலாறாக நிலைபெற்றிருந்தால், அதை மாற்ற வேண்டாம் என்று நினைக்கிறேன். நீலகண்ட சாஸ்திரி என்ற பெயர் ஆக்ஸ்போர்டு நூல்கள் பலவற்றிலும் அப்படியே இடம்பெற்றிருக்கும். நீதிக் கட்சியின் பிதாமகர்களுள் ஒருவரான டி.எம்.நாயர் பெயரை ‘நாயர்’ இல்லாமல் எப்படிக் குறிப்பிடுவது? அதேபோல் நீதியரசர் பி.ஆர்.கிருஷ்ணய்யர், நீதியரசர் சின்னப்பா ரெட்டி போன்றோரின் பெயர்களுக்குப் பின் சாதிப் பின்னொட்டுகள் இருந்தாலும், அந்த அடையாளத்தையும் தாண்டி, அமைப்பில் நிறைய காரியங்கள் ஆற்றியவர்கள் அவர்கள். ஆகவே, தங்கள் பெயரின்வழி நிரந்தர அடையாளமாக ஆகிவிட்ட தலைவர்கள், அறிஞர்கள் பெயரைப் பாடப் புத்தகங்களில் குறிப்பிடும்போது ‘உ.வே.சாமிநாதையர் என்று அறியப்படும் உ.வே.சாமிநாதர்’, ‘ஜி.டி. நாயுடு என்று அறியப்படும் ஜி. துரைசாமி’ என்று கொடுக்கலாம். காலப்போக்கில் அதையும் விடுத்து சாதிப் பெயர் இல்லாமலேயே அவர்களின் பெயரைப் பயன்படுத்தலாம். எனினும், தற்காலத்தில் ஒருவர் தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பின்னொட்டைப் பயன்படுத்துவார் என்றால், அது சாதிய வன்மமே. அதைக் களைவதற்கு எடுத்து வைக்கப்பட்ட சிறு அடியாக அரசின் முடிவை நான் கருதுகிறேன்.

ஷோபாசக்தி, எழுத்தாளர், நடிகர்

உ.வே.சாமிநாதையர் பெயரிலுள்ள சாதிப் பெயரான ஐயரை எப்படி நீக்க முடியும்? அவ்வாறு நீக்கி, உ.வே.சாமிநாதர் என அழைத்தால் யாருக்குப் புரியும் என்றெல்லாம் சொல்லி சில பல இலக்கியவாதிகள் காலத்துக்குக் காலம் ‘ஐயர்' என்ற சாதிப் பெயருக்கு லண்டனிலிருந்து தமிழ்நாடு வரை முட்டுக்கொடுத்தது நவீன இலக்கிய வரலாறு. அவர்கள் எழுதும்போதும் இந்த ‘ஐயா... பையா' போடாமல் எழுதவே மாட்டார்கள். இப்போது தமிழ்நாடு அரசு பாடநூல்களிலிருந்து சாதிப் பெயர்களை நீக்கியிருக்கிறது. ஐயர், பிள்ளை, ரெட்டி... எனச் சாதிப் பின்னொட்டுகள் எல்லாவற்றையும் தூக்கியிருக்கிறார்கள். இலக்கிய நூல்களிலும் தொகுப்புகளிலும் இதழ்களிலும் இடம்பெறும் ஐயர், பிள்ளை, செட்டி, நாயக்கர்களையும் நீக்கிவிடுவது இலக்கியவாதிகளின் கட்டாயக் கடமையாகிறது. இலக்கியத்தைப் படித்துக் குழந்தைகள் கெட்டுப்போய்விடக் கூடாது!

யாழினி ஜோஸ், இதழியல் மாணவி

தமிழ்நாடு அரசின் முடிவை நான் வரவேற்றாலும் இதைக் கண்துடைப்பு போன்றுதான் பார்க்கிறேன். ஒருபக்கம் பாடப் புத்தகங்களிலிருந்து சாதிப் பெயர்களை நீக்கிக்கொண்டு மறுபக்கம் சென்னையின் பூர்வ குடிகளான பட்டியலின மக்களை அவர்கள் விருப்பமின்றி அப்புறப்படுத்துவதும் நடக்கத்தானே செய்கிறது. எனினும், அரசின் முடிவு மாணவர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில், வாக்கு அரசியலுக்கு சாதியைப் பயன்படுத்துவதையும் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பாடப் புத்தகங்களில் செய்யும் மாற்றத்தை சமூகத்திலும் செய்ய வேண்டும் என்பதுதான் நான் எதிர்பார்ப்பது.

விஷ்ணு வரதராஜன், முனைவர் பட்ட மாணவர்

சமூகமயமாக்கம் என்ற சொல் ஒன்று உண்டு. ஒரு தனிமனிதராக இவ்வுலகில் பிறக்கும் நாம், ஒரு சமூகத்தின் அங்கமாக மெதுவாக மாறுகிறோம், வெவ்வேறு சமூக அடையாளங்கள் நம் மீது விழுகின்றன, அதற்கேற்றவாறு சலுகைகளும் இழிவுகளும் வந்துசேர்கின்றன. வீடும் கல்விக்கூடமும் சமூகமயமாக்கத்தின் முக்கிய அமைப்புகள். சாதிப் பெயர்கள் சாதியத்தின் இயக்கத்தை இயல்பாக்குகின்றன. மேலும், அவை சமநிலை அற்றதொரு வரலாற்றைச் சுட்டுகின்றன, சாதிப் படிநிலையின் இருத்தலை நினைவுபடுத்துகின்றன, சமச்சீரான வகுப்பறைகள் அமைவதைத் தடுக்கின்றன. எனவே, இப்போது அச்சில் இருக்கும் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது சரியான திசையே. சாதிப் பெயர்கள் தெரியாமல் வளரும் தலைமுறையால் சாதி ஒழியாது. ஆனால், அத்தலைமுறையால் சாதியொழிப்பை நோக்கி மேலும் வலுவாக ஒருங்கிணைய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x