Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

இந்திய வரலாற்றில் தென்னிந்தியாவுக்கு இடமில்லையா?

நாடெங்கிலும் பல்கலை, கல்லூரிகளில் ஒரே சீரான பாடத்திட்டங்களை அமல்படுத்தும் விதமாகப் பல்கலைக்கழக மானியக் குழு, புதிய பாடத்திட்டங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழுக்களில் அங்கம் வகித்த வல்லுநர்கள் பற்றி, ஏற்கெனவே பல்வேறு விமரிசனங்கள் எழுந்துள்ள நிலையில், அதனுள் செல்லாது எனது துறையாகிய வரலாறு பற்றி மட்டுமே நான் இங்கு விவாதிக்க விரும்புகிறேன்.

பொதுவாக, பாடத்திட்டத் திருத்தக் குழு தனது பணியின் தொடக்கத்தில் பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டத்தைப் பரிசீலித்து, அதன் குறைபாடுகளைக் கவனத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டத்தைப் பரிந்துரைக்கும். ஆனால், மாற்றுப் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ள பல்கலைக்கழக மானியக் குழு, அத்தகைய முயற்சியை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

கடந்த 50 ஆண்டுகளில் வரலாற்றியல் மாபெரும் வளர்ச்சியை, மாற்றத்தைக் கண்டுள்ளது. மாறியுள்ள அணுகுமுறைகளையும், புதிய ஆய்வு உத்திகளையும் கையாண்டதால், வெளிவந்த ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய பாடத்திட்டங்கள், பல மத்திய பல்கலைக்கழகங்களிலும் தென்னிந்தியாவில் சில மாநிலங்களின் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறையில் உள்ளன. கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் பட்ட வகுப்புப் பாடங்களைக் காலத்துக்கேற்றாற்போலச் செறிவூட்டி, மாற்றிட 1990-களிலிருந்தே தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுவந்திருக்கிறது.

கேரளத்தில் வரலாற்றறிஞர் ராஜன் குருக்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரை முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ராஜன் குருக்கள் கல்விக் குழு, வரலாற்று ஆய்வுக்கும் பாடத்திட்டத்துக்கும் அப்போது நிலவிய பரந்த இடைவெளியை இவ்வாறாகச் சுட்டிக்காட்டியது: “இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் வின்சென்ட் ஸ்மித்தின் வரலாற்று ஆய்வு முடிவுகள் அடுத்த பத்தாண்டிலும் (1920-களில்), ஆர்.சி.மஜூம்தார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி 1930-களில் எழுதிய வரலாற்று நூல்கள் 1940-களிலும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன. அப்படிப் பார்க்கும்போது, 1980-களில் வெளியான புதிய வரலாற்று ஆய்வு முடிவுகளை 1990-களில் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், நாம் அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கிறோம்.''

ராஜன் குருக்கள் குழு சுட்டிக்காட்டிய குறை, தமிழ்நாட்டில் அதற்கு முன்பே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) முன்முயற்சியின் விளைவாக, பாரதியார் பல்கலைக்கழகத்திலும் (1990-91), மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் வே.வசந்தி தேவி முயற்சியால் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் (1993-94) அமல்படுத்தப்பட்ட புதிய வரலாற்றுப் பாடத்திட்டத்தின் கீழ் நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது. இவ்விரு பல்கலைக்கழகங்களிலும் அன்றைய வரலாற்றுப் பாட திட்டக்குழுவில் இருந்த நான், டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தைப் பின்பற்றியதற்கான காரணத்தை நினைவுகூர விரும்புகிறேன். டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டம் அலகுவாரியாக, உட்தொகுதிவாரியாகத் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. ஒரு நாட்டின் வரலாற்றைப் பயில காலத்தின் எல்லையை 1945/1950-லிருந்து 1991 வரை விஸ்தரித்திருந்தது.

இதற்குள் 1992-93 ஆண்டிலிருந்து பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தால் அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் ஞானம் அறிமுகப்படுத்திய மாணவர் விருப்பத் தேர்வு அடிப்படையில், கல்வி (Choice-based Credit System) என்ற முறையானது கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அம்முறை தன்னாட்சிக் கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில், வே.வசந்தி தேவி அம்முறையை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1997-98-லிருந்து அமல்படுத்தினார். 2009-10- லிருந்து தமிழ்நாட்டில் அன்றைய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்துதலின் பேரில் அனைத்துக் கல்லூரிகளிலும் இம்முறை செயல்படுத்தப்பட்டு, இன்றும் நடைமுறையில் இருந்துவருகிறது. பல்கலைக்கழக மானியக் குழு இத்திட்டத்தை 2015-லிருந்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் கட்டாயமாக அமல்படுத்தியபோதுதான், வடஇந்தியக் கல்வி நிறுவனங்களில் இம்முறை அமலுக்கு வந்தது.

தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் வல்லுநர் குழு தயாரித்திருக்கும் புதிய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் பாரதம் பற்றிய கருத்து (The Idea of Bharath) ஒரு அலகில் அடக்குவதற்குப் பதிலாக ஒரு பிரதானப் பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. வரலாற்றுப் பின்னணியில் புரிந்துகொண்டு படிக்க வேண்டிய பல கருத்துகளையும் கோட்பாடுகளையும் பாரதம் பாடத்தில் அந்தக் குழு இணைத்துள்ளது. புராணக் கதைகளை வரலாறாக முன்வைப்பது அன்றைய ஏற்றத்தாழ்வுடனான சமூகக் கட்டுமானத்தை நியாயப்படுத்தும் முயற்சியோ என சந்தேகப்பட வைக்கிறது. 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைபெற்ற சமூக நீதிப் போராட்டங்கள் இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெறாதது இச்சந்தேகத்தை அதிகரிக்கிறது. இந்திய வரலாற்றில் சமூக-பொருளாதாரக் காரணிகளின் தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு உகந்ததாக இந்திய வரலாற்று பாடத்திட்டம் வகுக்கப்படவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, பிரபல வரலாற்று அறிஞர்கள்கூடத் தென்னிந்திய வரலாற்றுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை. இந்திய வரலாறு வடஇந்திய வரலாறாகவே தொடர்கிறது. 1857-ல் நடைபெற்ற பெரும் கிளர்ச்சியை முதல் சுதந்திரப் போராக அறிவித்து, நூற்றாண்டு விழா எடுத்துக் கொண்டாடியபோது (1957), அரசு சார்பாக வெளியிடப்பட்ட நூலில் (எஸ்.என்.சென்: 1857) வேலூர் புரட்சி (1806) பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

அன்றைய சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் சஞ்சீவி 1956-ல் ‘வேலூர் புரட்சி’ என்ற நூலைத் தமிழில் வெளியிட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 1806-ல் வேலூர் கோட்டையில் தொடங்கி பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தென்னிந்தியாவின் பல ஆங்கிலேய ராணுவத் தலங்களுக்கும் பரவி, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துக்குப் பெரும் நெருக்கடியைத் தந்த வேலூர் புரட்சி பற்றி, வடஇந்தியாவில் பயிலும் மாணவர்களுக்கு இன்று வரை தெரியாது.

பல்கலைக்கழக மானியக் குழு தற்போது தயாரித்துள்ள புதிய பாடத்திட்டத்தில் வட்டார, உள்ளூர் வரலாறு படிப்பதற்கான வாய்ப்பை வழங்காததால், தமிழ்நாட்டில் நடைபெற்ற அந்நியர் எதிர்ப்புப் போராட்டங்களாகக் கருதப்படும் பாளையக்காரர் எழுச்சிகள் (1758-1801), வேலூர் புரட்சி (1806) போன்றவை விடுபட்டிருக்கின்றன. வரலாற்றுப் பாடத்திட்டக் குழுவில் தமிழ்நாட்டுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பது ‘காஞ்சி சோழர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டதிலிருந்து தெரிகிறது.

மேற்கூறியதுபோல் ஒவ்வொரு மாநிலமும் அதனதன் கண்ணோட்டத்தில் குறைபாடு களைச் சுட்டிக்காட்ட முடியும். மேலிருந்து திணிக்கும் எத்தகைய திட்டமும் எப்போதும் வெற்றிபெற்றதில்லை. மாநிலப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும், பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் பேராசிரியர்களிடம் தேவையான தகுதி, திறமை, அனுபவம் உள்ளதால் கல்லூரி-பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பை நடைமுறையில் உள்ளதுபோல் அந்தந்தப் பல்கலைக்கழகத்திடமே விட்டுவிடுவது நல்லது.

- கா.அ.மணிக்குமார், பேராசிரியர் (ஓய்வு), மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: kamkumar1951@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x