Last Updated : 04 Dec, 2015 11:02 AM

 

Published : 04 Dec 2015 11:02 AM
Last Updated : 04 Dec 2015 11:02 AM

மீன்கள் ஏன் வடக்கு நோக்கிச் செல்கின்றன?

உயிரினங்கள் இடம்பெயர்ந்து செல்லும் அளவுக்கு அவற்றின் பருவ நிலை மாற்றத்தின் தாக்கம் இருக்கிறது

நமது மீன்கள் வடக்கு நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றன. 1980-களின் மத்தியில் வரை, மெக்கெரெல் மற்றும் எண்ணெய் மத்தி போன்ற முக்கியமான மீன் வகைகள், கேரளாவின் மலபார் கடற்பகுதியில் இருந்தன. புவி வெப்பமயமாதல் காரணமாக, 1967 2007 காலகட்டத்தில் இந்தியாவின் மேற்குக் கடற் கரைப் பகுதியின் வெப்பநிலை 0.6 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்திருப்பதாக, பருவ நிலை மாற்றத்துக்கான கேரள மாநிலச் செயல் திட்டத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதன் விளைவாக, இந்த மீன்கள், உயிர் வாழ்வதற்கு வசதியான வாழ்விடத்தைத் தேடி கடலில் வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கின. கடந்த 30 ஆண்டுகளில், வடக்கு திசையில் 650 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக அம்மீன்களின் எல்லை விரிவடைந்திருக்கிறது. கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தையும் தாண்டி இவை தற்போது குஜராத்தின் கடல்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்தும், மெக்கெரல் மீன்கள் வடக்கு நோக்கிச் சென்றுவிட்டன. முன்பு ஆந்திரக் கடற்கரையோரம் இருந்த இந்த மீன்கள் தற்போது மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் சென்று விட்டன.

காரணம் என்ன?

கடலில் மட்டுமல்ல, இந்தியாவின் நதிகளிலும் பல்வேறு மீன் இனங்களின் இடம்பெயர்வு நடந்திருக்கிறது. உதாரணத்துக்கு, கங்கை நதியில் இருந்து, மித வெப்ப நீர் மீன்களில் நான்கு இன மீன்கள், வட திசையில் ஹரித்வார் வரை சென்றுவிட்டன. இந்தப் பகுதியில் 1970-1986 காலகட்டத்தின் சராசரி வெப்ப நிலை, 2009-ம் ஆண்டுவாக்கில் 1.5 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்ததால் ஏற்பட்ட விளைவு இது.

புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவின் ஒவ்வொரு நிலப் பகுதியிலும், சுற்றுச்சூழலிலும் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. வெப்பநிலை உயர்ந்து வருவது ஒரு முக்கியமான காரணம் என்றாலும், மழைப் பொழிவில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. சில சமயங்களில், உணவுக்காகத் தாங்கள் சார்ந்திருக்கும் விலங்குகள் கிடைக்காமல்போவதால், மேலும் சில உயிரினங்கள் வேறு இடம் நோக்கிச் செல்லும் கட்டாயத்துக்கு ஆளா கின்றன. இந்தியாவுக்கு மட்டுமான நிலை அல்ல இது. உலக அளவில், தரையிலும் கடலிலும் வாழும் நூற்றுக் கணக்கான உயிரினங்கள் தொடர்பாகப் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நடத்தப்படும் ஆய்வுகள் தெரிவிக்கும் தகவல் இது: “ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கடல்வாழ் உயிரினங்களில் மூன்றில் ஒரு பகுதி, துருவங்களின் திசையில் தங்கள் வாழ்விடத்தின் எல்லையை விரித்துக்கொண்டிருக்கின்றன. நிலப்பகுதியில் வசிப்பனவற்றில் பாதி உயிரினங்களும் இவ்வாறு இடம்பெயர்ந்திருக்கின்றன”.

நகரும் மரங்கள்

இந்திய இமய மலைப் பகுதி, கடந்த சில பத்தாண்டுகளாக சராசரியாக 1.5 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை உயர்ந்திருப்பதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் பல உயிரினங்கள் கடுமையான வெப்பத்தை உணர்கின்றன. ‘ஹிமாச்சலி ஆப்பிள்’ எனும் புகழ் பெற்ற ஆப்பிள் வகை, குலு பள்ளத்தாக்கில் இப்போது செழித்து வளர்வதில்லை. உத்தர்காண்ட்டில் மட்டும் 1970-களிலிருந்து, மரங்களின் அடுக்கு 1,000 அடிகளுக்கும் மேல் மலை மீது நகர்ந்திருக்கிறது. இமய மலையின் கிழக்குப் பகுதியில் பட்டாம்பூச்சிகள், பறவைகள், மான், தேனீக்கள், ஊர்வன போன்ற எண்ணற்ற உயிரினங்கள் உயரமான இடத்தை நோக்கி நகர்ந்துசென்றுவிட்டன. இதுபோல் 25 உயிரினங்கள் இடம்பெயர்ந்துவிட்டதாக சிக்கிமில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. புவிவெப்பமயமாதலின் மற்ற விளைவுகளாலும் இந்திய உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அவை: வெப்ப அழுத்தம், கடல் அமில மயமாதல், பூச்சிகளின் தாக்கு தல் மற்றும் வறட்சி. எனினும், உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியில் ஏற்பட்டிருக்கும் மாறுதல், இந்தப் பிரச்சி னையின் தாக்கத்தை, மற்ற எதையும் விட அழுத்தமாகச் சொல்கிறது.

அல்மோராவில் உள்ள ஜி.பி. பாண்ட் மையத்தில் உள்ள விஞ்ஞானிகள், ரோடோடென்ரான் (மலைப் பூவரசு) எனும் தாவரத்தின் மலர்ச்சிப் பருவம் தொடர்பாக 1893-ல் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர். இச்செடிகள் தற்போது 40 நாட்கள் முன்னதாகவே மலர்ந்துவிடுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த மாற்றத்துக்கும் வெப்ப நிலை உயர்வுக்கும் தொடர்பு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இமய மலைப் பகுதியில் உள்ள பல உயிரினங்களும் இதே போன்ற பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. கர்நாட காவின் கடற்கரை பகுதியில் உள்ள எனது கிராமத்தில் மாமரத்தின் மலர்ச்சி பருவம் இதேபோன்ற மாற்றத்துக் குட்பட்டிருப்பதை அறிய முடிகிறது. மணிப்பாலில் அத்தி, ஒடிஷாவில் சாரப் பருப்பு, கேரளாவில் காப்பிக்கொட்டை ஆகியவற்றிலும் இந்த மாற்றத்தை உணர முடிகிறது. சென்னை கடல் நீர் வெப்பமானதைத் தொடர்ந்து இரண்டு வகை மீன்கள், தாங்கள் முட்டையிடும் பருவத்தை அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு மாற்றிக் கொண்டுவிட்டன. மற்ற மாதங்கள் இன்னும் அதிகமாக வெப்பமடைந்திருக்கின்றன.

அறுந்துபோகும் தொடர்பு

வாழ்விடத்தை மாற்றிக்கொள்ளுதல் மற்றும் வளர்ச்சி சுழற்சிமுறையில் மாறுதல் போன்றவை பருவ நிலை மாற்றத்தின் காரணமாக அந்த உயிரினங்கள் கைக்கொண்டிருக்கும் மாற்றங்கள். இந்த உயிரினங்க ளால் இதைச் சமாளிக்க முடியுமா, இல்லையா என்பது மட்டுமல்ல விஷயம். தாவரங்களின் சுழற்சி முறை மாறும்போது உணவுக்காக அவற்றை நம்பியிருக் கும் மற்ற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சில உயிரினங்கள் இவ்வாறு தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும்போது உயிர்ச் சூழலில் உள்ள மற்ற உயிரினங்களும் இந்த மாற்றத்தில் இணைந்து கொள்வதில்லை. அத்துடன், பல்லாண்டுகளாகத் தொடரும் உயிரினங்களுக்கு இடையிலான தொடர்பு பாதிப்புக்குள்ளாகிறது. இயற்கையான தடைகளும் உண்டு. கடல் வெப்பம் அதிகரிக்கும் நிலையில், பாம்பே வாத்து என்றழைக்கப்படும் ஒரு வகை மீன் வடக்கில் எத்தனை தூரம் இடம்பெயர முடியும் என்று ஒரு நிபுணர் கேட்டார். ஏனெனில், இந்த மீன் வடக்கில் இடம்பெற முடியாத வகையில், குஜராத்தின் நிலப் பகுதிதான் அதன் வடக்கு எல்லையாக இருக்கிறது. ஐரோப்பாவில் புவி வெப்பமயமாதல் காரணமாக மலைப் பகுதிகளில் வாழும் தவளைகள் மற்றும் தேரைகள், மேலும் மேலே செல்ல வழியில்லாததால் அழிந்துபோன சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளும் இங்குள்ள உயிரினங்களின் அழிவு குறித்து பேசுகின்றன.

சுருக்கமாகச் சொல்வதானால், புவி வெப்பமயமாதல் தரும் இப்பிரச்சினை வெவ்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில், உடனடியாகச் செயலாற்ற வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. ஏற்கெனவே, சராசரி வெப்ப நிலையில் 0.9 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்து வருவது உள்ளிட்ட அழிவுகள் சுற்றுச்சூழலில் ஏற்பட்டு வரும் நிலையில், வெப்பநிலை மேலும் உயர்வது இந்தியாவின் கணக்கற்ற உயிரினங்களில் ஏற்படும் பாதிப்பு குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.

மனிதர்களைப் பொறுத்தவரை, மற்ற உயிரினங்களின் வாழிடம் மற்றும் அவற்றின் நலனைச் சார்ந்துதான் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை இருக்கிறது. மற்ற உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் காரணமாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், மீனவ மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் இன்னும் ஆழமான ஆய்வைக் கோருபவை. பருவநிலை மாறுதல் தொடர் பாக டிசம்பர் மாதம் பாரிஸில் நடக்கவிருக்கும் சி.ஓ.பி.21 மாநாட்டில், புவிவெப்பமயமாதலின் தாக்கத்தைச் சந்திக்கும் உயிரினங்கள் சொல்லும் சேதிக்கு, அரசியல் தலைவர்கள் செவிமடுப்பார்கள் என்று நம்பலாம். ஏனெனில், வாழ்க்கை என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரு வலைப் பின்னல். ஆபத்தில் இருக்கும் உயிரினங்கள் நமக்குச் சொல்லும் செய்தியை அலட்சியம் செய்வது ஆபத்தானது!

- நாக்ராஜ் ஆத்வே,

‘இந்தியா கிளைமேட் ஜஸ்டிஸ்’ அமைப்பின் உறுப்பினர்.

‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x