Published : 01 Dec 2015 09:42 AM
Last Updated : 01 Dec 2015 09:42 AM

பரிசாகக் கிடைத்த பழந்தொழி போனது எங்கே?

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

தூத்துக்குடியின் நட்டாத்திக் கிராமத்தில் இருக்கிறார் நயினார் குலசேகரன். தனது வாழ்நாள் முழு வதையும் தாமிரபரணி நதிக்காக அர்ப் பணித்த அறப்போராளி அவர். ஸ்ரீவைகுண் டம் அணை தூர் வாருவதைக் கண்காணிக்க நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில் தோழர் நல்லக்கண்ணு உள்ளிட்டோரில் இவரும் ஒருவர். வயது 91-ஐ கடந்துவிட்டது. தள்ளாமையில் கரங்கள் நடுங்குகின்றன. பார்வை மங்கிவிட்டது. காது கேட்கும் திறனும் குறைந்துவிட்டது. பேச்சும் வரவில்லை, திக்கித் திணறித்தான் பேசுகிறார். ஆனால், இந்த நிலையிலும் நீர் நிலைகளைக் காக்க அரசு அலுவலகங்களின் படியேறிக் கொண்டி ருக்கிறார்.

“யப்பா, தாமிரபரணி ஆத்துல ஆதிச்சநல்லூர்கிட்ட சின்னதா ஒரு தடுப்பணை கட்டணும்னு மனு கொடுத்தேன். அது முடியாதுன்னு சொல் றாங்க. ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுப்பா. அதேபோல இந்தப் பயலுக தூர் அள்ளுறேன்னு மணலை பூரா கொள்ளையடிக்கிறானுங்க. ஊர்க்காரங் களுக்கும் உணர்வில்லாமப் போச்சு. கால்வாயை எல்லாம் ஆக்கிரமிச்சிருக் காங்க…” என்று உடன் வந்திருந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விடம் சொல்கிறார். உண்மைதான், நமக்குதான் உணர்வு வற்றிவிட்டது. தூத்துக்குடியில் நமது முன்னோர் உருவாக்கி வைத்த கால்வாய்களையும் வெள்ள நீர் வடிகால்களையும் ஆக்கிர மித்து, பராமரிக்காமல் சீரழித்து வைத் திருக்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிர பரணியின் மூலம் 46,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆற்றில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல பிரதான கால்வாய்களும், வெள்ளக் காலங்களில் விவசாய நிலங் களில் இருந்து உபரி நீரை வெளியேற்ற வெள்ள நீர் வடிகால்களும் இருக்கின்றன. ஆற்றில் இருந்து பாசனத்துக்காக கால் வாய்க்குச் செல்லும் தண்ணீர் மீண்டும் ஆற்றில் கலந்துவிடும் தொழில்நுட்ப அமைப்புடன் கட்டப்பட்ட கால்வாய்கள் அவை. அவற்றில் முக்கியமானவை, செய்துங்கநல்லூர் - ஆலங்கால் வடி கால், தூதுகுழி வடிகால், நாசரேத் - சர்க்கார் ஓடை வடிகால், குரும்பூர் - ‘கடல்பாதி கடம்பா பாதி’ எனப்படும் கடம்பா குளம் வடிகால்.

மேற்கண்ட வடிகால்கள் எல்லாம் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்தன. தவிர ஏராளமான ஆக்கிரமிப்புகள். நயினார் குலசேகரன் போன்றவர்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 1996 - 2001 காலகட்டத்தில் இவை தூர் வாரி சீரமைக்கப்பட்டன. இவற்றில் முத்தாலங்குறிச்சி - ஆலங்கால் கால் வாயின் அகலம் 10 அடி. ஆக்கிரமிப்பை அகற்றாதபோது அது ஒரு அடியாக சுருங்கியிருந்தது. ஆனால், ஆக்கி ரமிப்பை அகற்றியபோதும், பின்பும், இப்போதும் அது நான்கு அடியாக மட்டுமே இருக்கிறது. சுமார் ஆறடி வாய்க்கால் வயல்வெளிகளாக மாறி விட்டது. தூதுகுழி கால்வாய் 20 அடி அகலம் கொண்டது. இந்தக் கால்வாய் தூர் வாரிய பிறகு சில ஆண்டுகள் மட்டுமே பராமரிக்கப்பட்டது. அதன் பின்பு மீண்டும் இதில் சீமைக் கருவேல மரங்கள் மண்டிவிட்டன.

மருதூர் மேலக்கால்வாயில் இருந்து தென்கரை குளத்துக்குத் தண்ணீர் செல் கிறது. அங்கிருந்து முதலாம் மொழிக் குளம், நொச்சிக்குளம், புதுக்குளம், தேர்க்கன்குளம், வெள்ளரிக்காயூரணி குளம் நிரம்பி சர்க்கார் ஓடையாகப் பாய்ந்து, கடம்பா குளத்துக்குச் செல் கிறது. ஆனால், தூர் வாரப்பட்டப் பின்பு அதனைப் பராமரிக்காததால் 15 அடி அகலம் கொண்ட சர்க்கார் ஓடை இன்று முழுவதுமாக தூர்ந்துக்கிடக்கிறது. கடம்பா குளம் தண்ணீர் குரும்பூர், அங்கமங்கலம், புறையூர் வழியாக ஆத்தூர் கால்வாய்க்குச் செல்கிறது. இதில் வெள்ளக் காலங்களில் கடம்பா குளத்தின் உபரி நீர் செல்வதற்கான கடம்பா குளம் வடிகால் முழுமையாக தூர்ந்துக்கிடக்கிறது. இதனால், வெள்ளக் காலங்களில் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்துவிடுகிறது. மேற்கண்ட சீரழிவுகளால் நமது சாகு படியே மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது.

கால்வாய்களும் வெள்ள வடிகால்களும் நன்றாக இருந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 15 முதல் மார்ச் வரை பிசான சாகுபடி நடந்தது. ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை கார் சாகுபடி நடந்தது. இவைத் தவிர, பாபநாசம் அணையின் தண்ணீர் இருப்பைப் பொறுத்து ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் பழந்தொழி (முன் கார்) சாகுபடி நடந்தது. ஆனால், இப்போது பல பகுதிகளில் பிசான சாகுபடி மட்டுமே நடக்கிறது. மற்ற இரண்டும் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. காரணம், நாம் கால்வாய்களையும் வடிகால்களையும் பராமரிக்கவில்லை; ஆக்கிரமித்திருக்கிறோம். அரசு நிர்வாகங்களின் மீது தவறு இருக்கி றதுதான். அதிகாரிகளைக் குறை சொல்லலாம்தான். ஆனால், நமக்கும் அக்கறை வேண்டும் அல்லவா. தூர் வார செலவிடப்பட்ட பணம் விவசாயி களின் வரிப் பணம்தானே. அவரவர் வயலையொட்டியாவது அவற்றைப் பராமரித்து வந்திருந்தால் இன்று இவ்வளவு சாகுபடியை இழந்திருப் போமா? பல இடங்களில் வயல்களே வடிகாலுக்குள் இருக்கின்றன. பல இடங்களில் குப்பைகள் கொட்டப் பட்டிருக்கின்றன. பக்கத்து மாநிலத்தில் இருந்தா வந்து கொட்டினார்கள்?

மண்ணை, நீர் நிலைகளை நேசித்த மக்கள் வாழ்ந்த மண் தூத்துக்குடி. முன்கார் எனப்படும் பழந்தொழி சாகுபடி திருநெல்வேலி மாவட்ட விவசாயி களுக்குக் கிடையாது. அது தூத்துக்குடி விவசாயிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட உரிமை, பரிசு. இன்றைய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் அப்பாக்களும் தாத்தாக்களும் கொட்டிய உழைப்பில் கிடைத்தது அது. 1950-களில் மணிமுத்தாறு தாமிரபரணியில் கலந்து வெள்ளமாக ஓடி கடலுக்குச் சென்றுவிடும். இதனால், கோடை காலத்தில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, மணிமுத்தாற்றில் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தார்கள். இதனை அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.கோசல்ராம், காமராஜருடைய கவனத்துக்குக் கொண்டுச் சென்றார். ஆனால், அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தது. எனவே, மக்கள் பங்களிப்பு இருந்தால் மட்டுமே அணையைக் கட்ட லாம் என்றார் காமராஜர். சொன்ன மறு நாளே அள்ளிக்கொடுத்தார்கள் தூத்துக் குடி விவசாயிகள். நிலத்தை விற்று நிதி கொடுத்தவர்கள் பலர். இதைத் தொடர்ந்துதான் 1956-ல் அணை கட்டப்பட்டது.

நயினார் குலசேகரன் | நீர் நிரம்பிய நிலையில் மணிமுத்தாறு அணை

அணையில் 80 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தால் முதலாம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவுக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு வழங்கப்பட்டது. இது போக கோடைக் காலத்தில் அணையில் 80 அடிக்கு கீழே தண்ணீர் இருக்கும் பட்சத்தில் நீர் வரத்து, இருப்பைப் பொறுத்து அது தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் பழந்தொழி சாகுபடிக்காக பயன்படுத்திக்கொள்ள உரிமை அளிக்கப்பட்டது. நிதி கொடுத்த தற்கான பரிசு இது. கூடுதல் சாகுபடி இது. கூடுதல் லாபம் இது. ஆனால், நம் அக்கறையின்மையால் முன்னோர்கள் வாங்கிக் கொடுத்த பரிசைக் கூட இழந்துவிட்டுத் தவிக்கிறோம்.

(நீர் அடிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x