Last Updated : 01 Dec, 2015 09:14 AM

 

Published : 01 Dec 2015 09:14 AM
Last Updated : 01 Dec 2015 09:14 AM

நிமிடக் கட்டுரை: மதுவுக்கு முற்றுப்புள்ளி!

“பாட்னாவில் ஒரு பொதுக்கூட்டம். நான் பேசிவிட்டு அமர்ந்தேன். இன்னொருவர் பேசத் தொடங்கினார். அப்போது கூட்டத்தின் கடைசி வரிசையில் சலசலப்பு எழுந்தது. பெண்களின் குரல் அது. “மதுவைத் தடைசெய்யுங்கள்” என்று அவர்கள் சத்தமிட்டார்கள். நான் மீண்டும் மைக்கைப் பிடித்தேன். ‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நிச்சயம் அதைச் செய்வேன்’ என்றேன். இதோ இன்று அதை நிறைவேற்றிவிட்டேன்.” பிஹாரில் மதுவிலக்கு, வரும் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்த பின்னர், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறிய வார்த்தைகள் இவை. மாணவிகளுக்கு சைக்கிள், பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்று பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு இயங்கும் நிதிஷுக்குப் பெண்களின் ஆதரவு கிடைத்திருப்பதில் வியப்பில்லை.

கிராமப்புறங்களில் ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி, தங்களுக்குக் கிடைக்கும் சொற்பக் கூலியையும் மதுவிடம் தாரைவார்த்துவருகிறார்கள். இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், சரியான நேரத்தில் தங்கள் அஸ்திரத்தை நிதிஷ்குமார் பக்கம் வீசினார்கள். அதைச் சமயோசிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அவர்.

எதிர்பார்த்ததுபோல், பெண்கள் அவருக்குப் புகழ்மாலை சூட்டிக்கொண்டிருக்கின்றனர். சரண் மாவட்டத்தின் நயா காவ் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், இந்த உத்தரவின் மூலம் தங்களுக்குப் பேருதவி செய்திருப்பதாக நிதிஷைப் பாராட்டியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன், சாப்ராவில் மதுக் கடைகளை அடித்து நொறுக்கி, மதுக் கடை அதிபர்களை விரட்டியடித்த பெண்கள் இவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால், மதுவைத் தடைசெய்வது என்பது மிகச் சவாலான பணி என்றும் சிலர் கருதுகிறார்கள். ஆண்டுக்கு சுமார் ரூ. 4,000 கோடி வருவாயை ஈட்டித்தரும் மது விற்பனையைத் தடைசெய்வது என்பது, பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிஹாருக்கு நிச்சயம் பெரிய சவால்தான். அம்மாநிலத்தின் மொத்த வருவாயில் 15%அது. அத்துடன், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் நேபாளிலிருந்தும் கடத்திவரப்படும் மதுபானங் களைத் தடுக்கும் இன்னொரு சவாலும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

சட்டவிரோதமாக மது தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைத் தண்டிக்க ஏற்கெனவே பிஹார் மற்றும் ஒடிஷா கலால் துறைச் சட்டம் 1915 இருக்கிறது. புதிய சட்டம், மதுவை முற்றிலுமாகத் தடை செய்கிறது.

சரி, இந்தத் தடையால் ஏற்படும் பொருளாதார இழப்பை எப்படிச் சரிகட்டப்போகிறது பிஹார் அரசு? “எத்தனால் தயாரிப்பு உள்ளிட்ட மாற்று வழிகளை யோசித்துக்கொண்டிருக்கிறோம். மக்களின் நலனைப் பற்றிச் சிந்திப்பதுதான் அரசின் வேலை” என்று உறுதியுடன் சொல்கிறார் அப்துல் ஜலீல் மஸ்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x