Last Updated : 11 Dec, 2015 09:11 AM

 

Published : 11 Dec 2015 09:11 AM
Last Updated : 11 Dec 2015 09:11 AM

இந்திய இந்தியாவை உருவாக்குவோம்

இதுவரை அறியப்படாத பாரதியின் பயணமும் சொற்பொழிவும்

மகாகவி பாரதியின் இறுதி யாத்திரை 1921 செப்டம்பர் 12-ம் நாள் திருவல்லிக்கேணியில் நடந்து முடிந்துவிட்டது. இறுதி யாத்திரைக்குச் சரியாக 42 நாட்கள் முன்னர் அவருடைய இறுதி வெளியூர் யாத்திரை நிகழ்ந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் வாசகசாலையின் ஆண்டுவிழா கூட்டத்தில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றச் சென்றதே அந்தப் பயணம். அந்த இறுதி வெளியூர்ப் பயணம் குறித்து அவரே ‘என் ஈரோடு யாத்திரை’ என்னும் தலைப்பில் ‘சுதேசமித்திரன்’ இதழில் எழுதியி ருக்கிறார்.

ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன்...

அரை மைல் தூரத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் எனக்கு வேலை...

அங்கே ஒரு புஸ்தக சாலை இருக்கிறது. வாசகசாலை. அதன் காரியதரிசி ஒரு வக்கீல். மிக நல்ல மனிதர்; மஹா புத்திமான்; தேசபக்தியில் மிகவும் பாராட்டுதற்குரியவர்...

இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள்...

பிறகு மறுநாள் என்னை ஈரோட்டுக்கு வந்து வாய்க்கால் கரையில் ஒரு பொதுக் கூட்டத்திலே, ‘இந்தியாவின் எதிர்கால நிலை’ என்ற விஷயத்தைக் குறித்துப் பேசும்படி கேட்டுக்கொண்டார்கள். நான் உடன்பட்டேன்...

(கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 12, பக். 383-385) என்பவை பாரதியின் அப்பதிவுள் சில பகுதிகள்.

சிறந்த சொற்பொழிவாளன்

பரவலான மனப்பதிவில் வாசகசாலையில் பேசிய ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்பதே பாரதியின் இறுதிப் பொழிவு என இருப்பினும், ‘இந்தியாவின் எதிர்கால நிலை’ என்பதே அவரின் இறுதிப் பொழிவாகும்.

பாரதி தன் வாழ்வில் ஏராளமான ஊர்களுக்குச் சென்றதில்லை. பத்தாண்டுகள் வெளியில் செல்ல முடியாதபடி புதுவையில் அடைந்து கிடந்தவன் எத்தனை ஊர்களுக்குச் சென்றிருக்க முடியும். எனினும் முன் பின்னான காலங்களில் தமிழகம் தாண்டிய தென்னாடு, வடநாடு முதலியவற்றில் சில இடங்களுக்கு அவன் சில முறை சென்றுவந்திருக்கின்றான். அவனது முக்கியமான முதல் பயணம் திருநெல்வேலிக்குச் சென்றதாக இருக்கக்கூடும் (நெல்லை யூர்சென்றவ் வூணர் கலைத்திறன் நேரு மாறெனை எந்தை பணித்தனன் - கால வரிசையில் பாரதி பாடல்கள், ப.332). முக்கியமான முதல் நெடுந்தொலைவுப் பயணமாகக் காசிக்குச் சென்றமையைக் கருதலாம்.

இலக்கியப் பணி, இதழியல் பணி, இந்திய விடுதலை அரசியல் பணி முதலியன அவன் வாழ்வின் பெரும்பங்கை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தாலும், அவன் குறிப்பிடத்தக்க ஒரு சொற்பொழிவாளனாகவும் விளங்கியிருக்கிறான். சென்னையில் நிகழ்ந்த அரசியல் கூட்டங்களிலும் வெளியூர் கூட்டங்களிலும் பங்கேற்று அவன் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கின்றான். அவன் முதன்முதலாகச் சொற்பொழிவு ஆற்றியது, உ.வே.சா. வீற்றிருந்த தமிழ்த் துறையின் மாணவர் தமிழ்ச் சங்க ஆண்டுக் கூட்டத்தில். ‘கருணை’ என்பது அவன் ஆற்றிய முதற்பொழிவின் தலைப்பு.

நிவேதிதாவுடனான சந்திப்பு

பாரதி குறித்த நூல்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது ‘சித்திர பாரதி’என்னும் ரா.அ. பத்மநாபனின் நூலாகும். இந்நூலிலே ஒரு வரைப்படப் பதிவு உள்ளது. ‘பாரதி கண்ட தென்னாடு’ (ப. 2) என்னும் தலைப்பில் பாரதி வாழ்ந்த, பயணம் சென்று வந்த ஊர்கள் அந்தப் படத்திலே குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

எட்டயபுரம், கடையம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மணியாச்சி, கோவில்பட்டி, மதுரை, சென்னை, புதுவை, நாகை கிராமம், கடலூர், விழுப்புரம், காரைக்குடி, கானாடுகாத்தான், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், திருவனந்தபுரம், ஈரோடு ஆகிய ஊர்கள் அந்தப் படத்தில் குறிப்பிடப்பெற்றவையாகும்.

தந்தையை இழந்த பின் அத்தை வீட்டில் வசிக்க, அத்தையோடு அவர் காசிக்குச் சென்றார் என்பது வரலாறு. மீளவும் ஒருமுறை காங்கிரஸ் மாநாட்டிற்காகக் காசி சென்றார் என்பதும் திரும்பும்போது கல்கத்தா அருகிலுள்ள டம்டம் என்னும் ஊரில் நிவேதிதாவைச் சந்தித்தார் என்பதும் வரலாறு. காங்கிரஸ் மாநாட்டிற்காக சூரத் நகருக்கு 1906-ல் சென்று வந்திருக்கிறார்.

பாரதியின் பயணம்

அறியப்பட்டிருக்கின்ற பாரதியின் வாழ்க்கை வரலாறும், வெளிவந்திருக்கின்ற பாரதி ஆய்வு நூல்களும், பாரதி நூற்பதிப்புகளும், தொகுப்புகளும் இதுவரை குறிப்பிடாத பாரதியின் ஒரு பயணம் பற்றியும் ஆற்றிய சொற்பொழிவு பற்றியும் ஓர் அருஞ்செய்தியை அண்மையில் முதன்முறையாகச் ‘சுதேசமித்திரன்’ நாளிதழிலிருந்து கண்டறியும் பேறு எனக்கு வாய்த்தது.

1920 டிசம்பர் 13-ம் தேதி பழைய தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இடையில் உள்ள மணலி என்னும் கிராமத்திற்குப் பாரதியார் சென்றிருக்கின்றார்; அங்கு அமைந்திருந்த ‘குலோத்துங்கன் வாசக சாலை’ என்னும் படிப்பறையின் முதலாண்டு நிறைவு விழாவின் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியிருக்கின்றார்; பாரதியாரோடு சத்தியமூர்த்தியும் பங்கேற்று உரையாற்றியிருக்கின்றார்; இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பாரதியின் சொற்பொழிவு நிகழ்ந்தது. இந்தச் செய்திகள் 1920 டிசம்பர் 15-ம் நாளிட்ட ‘சுதேசமித்திரன்’ இதழில் ‘மணலி குலோத்துங்கன் வாசகசாலை - அரிய உபந்யாஸங்கள்: நமது நிருபரிடமிருந்து’(பக். 5,6) என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளன.

பாரதியார் ஆற்றிய சொற்பொழிவின் தலைப்பு ‘இந்தியாவின் முற்காலப் பெருமையும் தற்கால நிலைமையும்’. பாரதியாருக்கு முன் சத்தியமூர்த்தி உரையாற்றினார். பாரதியார் தம் சொற்பொழிவுக்கு முன்னர் ‘இந்தப் பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’, ‘ஜயமுண்டு’ எனத் தொடங்கும் பாடல்களைப் பாடினார்.

பாரதியின் தத்துவ, ஆன்மிகப் போக்கு

பாரதியின் பேச்சு சபையோரால் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதைச் சுதேசமித்திரன் நிருபர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: ‘ஸபையோர் அடிக்கடி கைகொட்டி வியப்புக் கூறி மகிழும்படி இரண்டு மணி நேரத்துக்கு மேலே நெடுநேரம் பேசினார்.’

இந்தச் சொற்பொழிவில் இந்திய வரலாற்றைப் பற்றிப் பேசும்போது, “இந்தியாவின் சரித்திரம் ஐந்து பகுதி: (1) வேத இந்தியா, (2) பௌத்த இந்தியா, (3) ஹிந்து இந்தியா, (4) மஹமதிய இந்தியா, (5) ஐரோப்பிய இந்தியா என. இவற்றுள் ஐரோப்பிய இந்தியா சில விஷயங்களில் குற்றமில்லை. பல விஷயங்களில் குற்றமுடையது. இக்குற்றங்கள் நீங்கி, இந்திய இந்தியா ஆறாவதாகத் தோன்றி, உலகத்தில் தர்மத்தை ஸ்தாபிக்க வேண்டும்” என்று பேசினார்.

அக்கால இந்தியத் தலைவர்கள், சிந்தனையாளர்கள் பெரும்பாலும் அழுத்தம் தந்து பேசியது போலவே பாரதியாரும் இந்து மதத்தின் சிறப்பு, கீதையின் கருத்துகள் ஆகியவற்றை மக்களை இந்திய விடுதலைக்குப் போராட ஆயத்தம் செய்யும் வகையில் எடுத்துக்காட்டிப் பேசியிருந்தார். இச்சொற்பொழிவு இறுதிக்காலத்தில் பாரதியிடம் மேலோங்கியிருந்த தத்துவ, ஆன்மிகப் போக்கைக் காட்டுகின்றது.

வாசகசாலையின் ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு என்னும் வகையில் கருங்கல்பாளைய வாசகசாலை ஆண்டுவிழாவிற்கு முன்னதாக இவ்விழாச் சொற்பொழிவு அமைகின்றது. பாரதி தம் வாழ்வில் இரு வாசகசாலைகளின் ஆண்டு விழாக்களில் பங்கேற்றிருக்கின்றார் என்பதும், சுதேசமித்திரனில் வெளிவந்த இச்செய்தி பின்னாளில், தேசியப் பற்றும் பொதுநல ஈடுபாடும் கொண்ட ஈரோடு தங்கப்பெருமாள் பிள்ளை, பாரதியை ஈரோட்டிற்கு அழைக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதும் மனங்கொள்ளத்தக்கன.

- ய. மணிகண்டன், உதவிப் பேராசிரியர்,

தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x