Published : 12 Apr 2021 03:18 am

Updated : 12 Apr 2021 05:59 am

 

Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 05:59 AM

தேர்தல் முடிவு இழுத்தடிக்கப்படுவதால் அரசின் பணிகள் பாதிக்கப்படுகின்றனவா?

election-results

அரசு நிர்வாகம் செயல்பட முடியவில்லை!- க.பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்

வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் இடைவெளி என்பது அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிறையப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. என்னுடைய தொகுதியையே ஓர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். ஆவடி நகராட்சியில் ரூ.10 கோடியில் இரண்டாம் கட்ட புதைசாக்கடைக் கட்டுமானப் பணி மற்றும் முந்தைய புதைசாக்கடையில் கசடு அகற்றும் பணிக்கு உத்தரவே கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குள்ளாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அந்த வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டன. இதேபோல வீடுதோறும் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கும் வேலை உத்தரவு வழங்கியும், அந்தப் பணியும் அப்படியே நிற்கிறது. அதிகாரிகளைக் கேட்டால், ‘தேர்தல் பிஸி...’ என்கிறார்கள். அடுத்து கரோனா என்பார்கள். நான் இப்போதும் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்தான். இந்த ஏப்ரல் மாதத்திலும் ஊதியம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், பணியில் ஈடுபட முடியவில்லை; யாரையும் கேள்வி கேட்டு வேலை வாங்க முடியாது. காரணம் தேர்தல் விதிமுறைகள் அப்படி. ஆவடியில் குடிநீர் இணைப்பு கொடுத்தால் அது அஸாம் தேர்தலைப் பாதித்துவிடும் என்பது அபத்தமாக இல்லையா? சரி, தேர்தல் முடிவுகளை ஒரு மாநிலத்தில் அறிவிப்பது இன்னொரு மாநிலத் தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்று நினைக்கிறார்கள் என்றால், தேர்தலை இங்கே தள்ளி நடத்தியிருக்கலாம் இல்லையா? நான் இதுகுறித்து முறையிடவிருக்கிறேன்.


பேரிடர் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?- கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர்

தேர்தல் அறிவிப்பு வெளியான பிப்ரவரி 26-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. மே முதல் வாரத்தில், புதிய அரசு பொறுப்பேற்கும் வரையில் இந்த விதிகள் அமலில் இருக்கும். அதாவது இரண்டு மாதங்களுக்கும் அதிகமான நாட்கள் ஒட்டுமொத்தமாக ஒரு மாநிலத்தையே முடக்கிவிட்டார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் முகாம்கள் கிடையாது, தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரையும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரையும் பார்க்க முடியாது. காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்கப் போனால்கூட, பல விஷயங்களுக்குத் ‘தேர்தல் முடியட்டுமே?’ என்று சொல்கிற நிலை இருக்கிறது. எட்டு கட்டமாகத் தேர்தல் நடக்கிற வங்கம் போன்ற மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தலை நடத்திவிட்டு, ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிற தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடைசியாகத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். கடந்த 2016 தேர்தல் அப்படித்தான், வாக்குப்பதிவு மே 16-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதியும் நடத்தப்பட்டது. இம்முறை ஏன் அப்படித் திட்டமிட்டிருக்கக் கூடாது? வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்கிற நாடுகளிலேயே தேர்தல் முடிந்த கையோடு முடிவுகளை நோக்கிப் போய்விடுகிறார்கள். நவீன யுகத்தில், அதுவும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து, ஒரு மாத காலம் காவல் காத்துக்கொண்டிருக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டிருப்பது கொஞ்சம்கூட நியாயமே இல்லை. பழைய அமைச்சரவையும் முழுமையாகச் செயல்பட முடியாது, புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்க முடியாது என்கிற நிலையில், நாளைக்கே ஏதாவது பேரிடர் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆழ்ந்து யோசிக்க வேண்டும்!

மக்களின் நம்பிக்கையைக் குலைக்கக் கூடாது! -கிறிஸ்துதாஸ் காந்தி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

அரசுப் பணிகள் பாதிக்கப்படும் என்று நான் சொல்ல மாட்டேன். அதை விடுங்கள். ஒரு தேர்தலை இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் நடத்துகிறோம். இதில் மிக முக்கியமானது மக்களுடைய நம்பிக்கை. இப்படி முடிவுகள் கால தாமதமாகும்போது, ‘என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்ற ஒரு பேச்சு இன்று மக்கள் மத்தியில் இருக்கிறதா, இல்லையா? இது தேவையற்ற விஷயம். மேலும், அரசு ஊழியர்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை பல தரப்புகளுடைய உழைப்பைத் தேவையில்லாமல் உறிஞ்சக்கூடிய விஷயமும்கூட. நான் ஓசூரில் சார் ஆட்சியராக இருந்த காலத்தில், மலைக் கிராமங்களிலிருந்து வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குக் கொண்டுவரவே இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடும். அப்படியிருந்தும் மறுநாளே வாக்குகளை எண்ணிவிடுவோம். ‘குளறுபடிகள் இல்லாமல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்’ என்றுதான் வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், அதைக் கொண்டுபோய் இப்படி நாள் கணக்கில் பூட்டி வைப்பது அபத்தமாக இல்லையா? 294 தொகுதிகள் உள்ள ஒரு மாநிலத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதும், அதற்காக இன்னொரு மாநிலத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முடிவுகளைத் தள்ளிப்போடுவதுமான நிலையில்தான் நம்முடைய அமைப்பு இருக்கிறது என்றால், இந்த லட்சணத்தில் ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்...’ என்றெல்லாம் பேசுவது அபத்தம் இல்லையா?

கரோனா சூழலில் இது பெரும் பாதிப்பே!- நீதிராஜா,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் இயந்திரங்களைப் பாதுகாக்கும் பணி அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. சரி, வழக்கமான பணிகளை ஏனையோர் பகிர்ந்துகொள்கிறோம் என்று வைத்தாலும்கூட வழக்கமான அரசுப் பணிகளைப் பாதிப்பின்றி தொடரலாமே தவிர, முக்கியமான கொள்கை முடிவுகள் சார்ந்த விஷயங்களை அதிகாரிகளால் மேற்கொள்ள முடியாது. இது எண்ணற்ற பாதிப்புகளை உண்டாக்கும். உதாரணமாக, கரோனா தொற்று மிகக் கடுமையாக அதிகரித்துவரும் இந்தச் சூழலில், அவர்களைக் கையாளும் அளவுக்கு மருத்துவப் பணியாளர்கள் இல்லை. கடந்த ஆண்டு தற்காலிகமாக வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள் எல்லாம் வீட்டுக்குப் போய்விட்டார்கள். அவர்களைப் பணி நீட்டிப்பு செய்வது அல்லது புதிய பணியாளர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றால், அரசு பொறுப்பேற்க வேண்டும். இப்படி எவ்வளவோ பணிகளைக் குறிப்பிட முடியும்.தேர்தல் முடிவுஅரசின் பணிகள்Election results

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

milkha-singh

ஓடு மில்கா ஓடு

கருத்துப் பேழை

More From this Author

x