Published : 15 Nov 2015 09:08 AM
Last Updated : 15 Nov 2015 09:08 AM

வளர்ச்சிக்கு காத்திருக்கும் சேலம்

செயல் இழந்த திட்டங்களை நிறைவேற்ற வலுவான நடவடிக்கை அவசியம்

மலைகள் சூழ்ந்து இயற்கையின் அரவணைப்புடன் கூடிய வளம் பொருந்திய சேலம் மண்டலத்தில் தொழில் வளம், மக்கள் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சில திட்டங்கள் பேச்சளவிலும், சில திட்டங்கள் நடைமுறைக்கு வரமுடியாமலும், பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்து, தொடர்ந்து நடைமுறைப்படுத்த முடியாமலும் உள்ளன. ஜவுளி பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, சிறப்பு பொருளாதார மண்டலம், விமான சேவை என அடுக்கிக்கொண்டே போகலாம். இத்திட்டங்கள் சேலத்தில் நடைமுறைக்கு வந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும். தொழில் வளம் சிறக்கும். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். மொத்தத்தில் சேலம் மாவட்டம் மட்டுமல்ல, சேலம் மண்டலமே வளம்பெறும்.

விமான சேவை முடக்கத்தால் பின்னடைவு

சேலம் - பெங்களூரு பை-பாஸ் சாலையில் உள்ள அம்மாப்பாளையம் பகுதியில் 52 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 2008-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. நிலம் சமன் செய்து சாலை, சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிர்மாணிக்கப்பட்டன. தற்போது, இரண்டு பெரிய நிறுவனங்கள் நிலம் ஒதுக்கீடு பெற்று கட்டுமான பணி தொடங்கியுள்ளன. அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. விமான சேவை இல்லை என்ற காரணத்தையே பல நிறுவனங்களும் கூறுகின்றன.

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள சேலம் மாவட்டம் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களை இணைக்கும் பகுதியாக விளங்கி வருகிறது. அதே போல, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் மார்க்கமாக சேலம் அமைந்துள்ளது.

சேலம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் 137 ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை மூலம் விமான நிலையம் அமைக்கப்பட்டது. அவ்வப் போது, தனியார் விமான நிறுவனங்கள் சேலம் முதல் சென்னை வரை சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தன. போதிய வருமானம் இல்லாத தால், அவர்களும் பின்வாங்கிக் கொண்டனர். இதனால், கடந்த பல ஆண்டுகளாக சேலம் விமான நிலையம் இயங்காமல் உள்ளது.

மத்திய அரசின் விமான போக்கு வரத்து துறை அதிகாரிகளை சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அதிபர்கள், வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் நேரடியாக சந்தித்து, சேலத்தில் விமான போக்குவரத்து இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சேலம் விமான நிலை யத்தில் ஓடுதளம் 6 ஆயிரம் அடி நீளம் சாலை உள்ளதால், இங்கு சிறிய ரக விமானங்கள் வந்து செல்லக் கூடியதாக உள்ளது. 8 ஆயிரம் அடி நீளம் சாலை இருந்தால் மட்டுமே ஏர் பஸ் உள்ளிட்ட பெரிய ரக விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

மேலும், இரவில் விமானங்கள் தரை இறங்க போதுமான ஒளி அமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இந்த வசதிகளை மாநில அரசு செய்து கொடுத்தால், மத்திய அரசு மூலம் விமான சேவை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், விமான நிலையம் விரிவாக்கம் செய்ய 563 ஏக்கர் நிலம் சர்வே செய்யப்பட்டு, கையகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்த போது, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நிலத்தை தர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட மக்கள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிகோலக்கூடிய தொழில்நுட்ப பூங்கா ஏற்படுவதில் விமான போக்குவரத்தும், அதற்கான விரிவாக்க பணிக்கு நிலம் அளிக்க மக்கள் மறுப்பதும் பெரிய தடையாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு மாநில அரசு சுமுகமான முறையில் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விமான சேவை தொடங்க தேவை யான நடவடிக்கை எடுத்தால், தொழில் நுட்ப பூங்கா விரைந்து செயல்படும் என்பது உறுதி.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவை யான கோழித் தீவன மூலப்பொருட் களை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தொழில் ரீதியாக இங்குள்ள பண்ணை யாளர்கள் வட மாநிலங்களுக்கு செல் வது வாடிக்கை. சேலத்தில் விமான சேவை தொடர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள வர்த்தகர்கள் பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்ல விமான சேவைக்கு பெங்களூரு செல்லும் நிலையுள்ளது. சேலத்தில் விமான சேவை தொடங்கினால், சிறு தொழில் முதலீட்டாளர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜவுளி மற்றும் தொழில்துறையில் சிறப்பு பெற்ற ஈரோடு மாவட்டத் துக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து செல்ல தற்போது கோவை விமான நிலையத்துக்கு செல்லும் நிலையுள்ளது. ஈரோட்டில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்து கோவை விமான நிலையத்தை அடைய வேண்டியுள்ளது. சேலத்தில் விமான நிலையம் அமையுமானால், ஒரு மணி நேரத்தில் விமான சேவையை பெறமுடியும்.

ஜல்லடை ஓட்டையாக மாறிய ஜவுளி பூங்கா கனவு

சேலம் என்றதும் நினைவுக்கு வருவது கைத்தறி, விசைத்தறி தொழில் தான். மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேர் இத்தொழிலை நம்பி உள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு ஜவுளி ரகங்கள் நாளொன்றுக்கு 20 லட்சம் மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது.

இங்கு உற்பத்தியாகும் ஜவுளி ரகங்களை டெல்லி, மும்பை, ராஜ்கோட், ஹைதராபாத், கொல்கத்தா, புனே போன்ற வர்த்தக பகுதிகளில் உள்ள வட மாநில வியாபாரிகள் வாங்கிச் சென்று, ஆயத்த ஆடைகளாக மாற்றி, அதிக லாபம் ஈட்டுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் 25 ஆயிரம் விசைத்தறிகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பர்கூரில் டெக்ஸ்டைல்ஸ் நகரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில், 2,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. கைத்தறி தொழிலில் சுமார் 500 பேரும், கார்மெண்ட்ஸ் தொழிலில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டவர்களும் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் ஜவுளி பூங்கா அமைத்தால், உற்பத்தியை பெருக்கவும், இத்தொழிலில் பொருளாதார வளர்ச்சி காணவும் உதவும். ஈரோடு மாவட்டத்தில் ரூ.4,500 கோடியில் ஜவுளி வர்த்தகம் நடந்து வரும் நிலையில், வட மாநில வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர். சேலத்தில் ஜவுளி பூங்கா அமைந்தால் ஈரோடு, சேலம் மாவட்ட ஜவுளி வியாபாரிகளுக்கான சந்தை வாய்ப்பு கிடைக்கும்.

மூடப்பட்ட நூற்பாலையில் அமைக்கலாம் ஜவுளி பூங்கா:

சேலம், உடையாப்பட்டி பகுதியில் அம்மாப்பேட்டை கூட்டுறவு நூற்பாலை 31 ஏக்கரில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கியது. இதில் 14 ஏக்கரில் நூற்பாலை கட்டிடம் கட்டப்பட்டு, தரமான நூல்கள் உற்பத்தி செய்து லாபத்தில் இயங்கிய ஆலை நிர்வாக காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனால், இங்கு பணிபுரிந்த 1,100 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

நூற்பாலை இயங்க நடவடிக்கை எடுப்பதாக தேர்தலின்போது அரசியல் தலைவர்கள் வாக்குறுதி அளிப்பது வாடிக்கையாகவும் அதன்பின்னர் கண்டு கொள்ளாமல் விடுவது வேடிக்கையாகவும் ஆகிவிட்டது. தற்போது, இந்த இடத்தில் 17 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இங்கு அடுக்குமாடி தொழிற்கூடம் உருவாக்கி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட நெசவு சார்ந்த தொழில் தொடங்கி ஜவுளி பூங்கா உருவாக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளது.

ஜவுளி பூங்கா அமைக்க வாய்ப்புகள் இருந்தும், நெசவு தொழிலில் மறுமலர்ச்சி ஏற்படுத்த ஆட்சியாளர்கள் முன் வரவில்லை. சேலத்தை மையமாக கொண்டு ஜவுளிப் பூங்கா அமைவதால் மூலப் பொருட்கள் எளிதில் கிடைப்பதுடன், உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் சந்தைக்கு கொண்டு செல்வதும் எளிதாகும்.

ஆயுத்தஆடை தயாரிப்பில் போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. சேலம் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா தொடங்கினால், கிருஷ்ணகிரி மாவட்ட ஜவுளி வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும்.

அரசு நடவடிக்கை எடுத்தால், சேலம் மண்டலத்தின் பாரம்பரிய தொழில் வளர்ச்சி அடுத்த மைல் கல்லை நோக்கி நகரும் என்பது நிச்சயம்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவு நனவாகும்

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்குள்ள கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்ப பட்டம் பெற்ற மாணவர்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வேலை தேடிச்செல்ல வேண்டி யுள்ளது. சேலத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைந்தால், வேலைவாய்ப்பு பெருகும். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறுதொழில்களின் வளர்ச்சிக்கு சேலம் சிறப்பு பொருளாதார மண்டலம் உதவியாய் இருக்கும். இதன் மூலமும் படித்த இளைஞர்கள் பலரின் வேலைவாய்ப்பு கனவு நிச்சயம் நனவாகி, வாழ்வில் முன்னேற்றம் காண வழி பிறக்கும்.

ஆமைவேகத்தில் தயாராகும் தகவல் தொழில்நுட்ப பூங்கா



10 மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை

ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சேலம் இரும் பாலை இயங்கி வந்தாலும், 400 ஏக்கர் நிலம் காலியாகவே உள்ளது. மத்திய அமைச்சகம் கடந்த 2008-ம் ஆண்டு, 309 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்க தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது முதல்கட்டமாக நிலம் ஒதுக்கப்பட்டு, ஐஎல்எஃப்எஸ் மூலம் இடமும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த திட்டம் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடந்து கொண்டிருந்த வேளையில், உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி கண்டது. இதனால், பல்வேறு தொழில்களின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டு, பங்கு சந்தையும் சரிவை கண்டது.இதனால், சேலம் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான நட வடிக்கையை தனியார் நிறுவனங்கள் கைவிட் டுச் சென்றன. கிடப்பில் உள்ள இத்திட்டம் தேர் தலின்போது மட்டும் அரசியல் தலைவர்களின் வாக்குறுதியாக வலம் வருகிறது ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற இதுவரை சிறு கல்லைக் கூட ஆட்சியாளர்கள் எடுத்து வைக்க வில்லை என்பதுதான் உண்மை.

சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ஈரோடு, கடலூர், கரூர் ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவர். இத்திட்டம் முடங்கிய நிலையில் சிறு, குறு தொழிற்சாலைகள் அமைத்திட தனியார் தொழில் நிறுவனங்கள் தொழில் பேட்டை அமைக்க இரும்புத் துறை அமைச்சகத் திடம் அனுமதி கோரியுள்ளன.

நீண்டகால முறையிலான தொழில்பேட்டை அமைக்க அரசு முன்வந்தால், சேலம் மாவட்டத்தில் தொழில் மற்றும் பொருளாதார ரீதியான உயர்வு ஏற்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஆட்சி மாற்றங்களால் நிறைவேறாத திட்டங்கள்

தமிழகத்தில் ஆளும் கட்சிகள் கொண்டு வரும் திட்டங்கள், அந்த ஆட்சிக் காலத்துக்குள் முடிப்பதில் சிரமங்கள் உள்ளன. ஆனால் அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக வரும்போது, முந்தைய ஆட்சியின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பெருவாரியான மாவட்டங்களில் மக்களுக்கு பயன் தரும் நல்ல பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டும், முடக்கி வைக்கப்பட்டும் உள்ளன. மக்களுக்கு பயன் தரும் நல்ல திட்டங்களை விரைந்து நிறைவேற்ற ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வேலைவாய்ப்புகள் பெருகும்

சேலம் சிறு, குறு தொழிற்சாலைகளின் பொதுச்செயலாளர் இன்ஜினீயர் மாரியப்பன்

சேலம் மாவட்டம் பல்வேறு உற்பத்தி தொழில் கேந்திரமாக விளங்குகிறது. இங்கு கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினால் பல தொழிற்கூடங்கள் உருவாகும். பலர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தொழில்நுட்ப பூங்கா பணிகள் பாதியில் நிற்பதும், விமான சேவை முடக்கத்தால் வெளிநாடு, வெளிமாநில நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. சேலத்தில் ஜவுளி உற்பத்தி அதிகளவு உள்ள நிலையில், மாநகர பகுதியில் சாயப்பட்டறைகள் அதிகம் உள்ளன. இங்கு பொது சேவை மையம் அமைத்து, சுத்திகரிப்பு செய்வதன் மூலம் சாயக்கழிவுகளால் மண் வளம் கெடுவது, தொற்று நோய் அபாயத்துக்கு அஞ்ச தேவையில்லை.

வரிச் சலுகை கிடைக்கும்

சேலம் மாநகர வணிகர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் ஜெயசீலன்

சேலம், நாமக்கல் மாவட்ட கல்வி நிறுவனங்களில் வெளி மாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் படிக்கின்றனர். அவர்கள் விமான சேவைக்காக கோவை, திருச்சி, சென்னையை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் விமான சேவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால், விமான சேவை முடக்கத்தால் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு வர வெளிநாட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. இதனால் தொழில் வளர்ச்சி பாதிப்படைந்து உள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் வரிச் சலுகை கிடைக்கும் என்பதால், வெளிமாநில நிறுவனங்கள் சேலத்தில் தொழில் தொடங்கியிருக்கும். அதற்கும் வாய்ப்பு இல்லை. ஜவுளி பூங்காவுக்கு இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்த பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தொழில்துறை வளரும்

சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் பொருளாளர் பிரபாகரன்

கோவை, பெங்களூரு ஆகிய இரண்டு நகரங்களில் தொழில் தொடங்க தேவையான இடப்பற்றாகுறை, பணியாளர் பற்றாகுறை, மிகுதியான சம்பளம் என்பதையெல்லாம் கணக்கிட்டு, தொழில் முனைவோர் சேலத்தில் தொழில் தொடங்க தயாராக உள்ளனர். ஆனாலும்,இங்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஜவுளி பூங்கா, சிறப்பு பொருளாதார மண்டலம், விமான சேவை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் அரசு மவுனம் சாதிப்பதால், தொழில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகரம் வளர்ச்சிக்கு இந்த திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி ஏற்படும்

தென்னிந்திய நூல் மில் ஆலைகள் சங்க முன்னாள் தலைவர் தினகரன்

சேலம் மாவட்டத்தில் 200 நூல் மில் ஆலைகளும், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் நூல் மில்களும் உள்ளன. இத்தொழில் சார்ந்து 50 லட்சம் பேர் உள்ளனர். சேலத்தில் ஜவுளி பூங்கா திட்டத்தால், ஜவுளி தொழில் பெருமளவு ஊக்குவிக்கப்படும். பருத்தியை ஆலைகள் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது. ஜவுளி தொழிலுக்கு புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்த வேண்டும்.

சேகோ, வெள்ளி, இரும்பு, விவசாய விளை பொருள், பால் பவுடர் உற்பத்தி ஆலை, விசைத்தறி, கைத்தறி, ஆயத்த ஆடை ஏற்றுமதி, அலுமினிய தயாரிப்பு நிறுவனங்கள் என பலதரப்பட்ட தொழில் நகரமாக விளங்கும் சேலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம், விமான சேவை, தொழில்நுட்ப பூங்கா அவசியமானது. இந்த திட்டங்களை நிறைவேற்றினால், பல மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி காணும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x