Published : 10 Nov 2015 10:18 AM
Last Updated : 10 Nov 2015 10:18 AM

சிலருக்கு மட்டும் ஏக கவனிப்பு!

பிரமுகர்களுக்குத் தனி கவனிப்பு மூலம் அதிக நன்கொடைகளைப் பெற முடியும்

மருத்துவக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தபோது, ‘சிவப்பு நிற’ போர்வையை மருத்துவமனையில் பார்த்திருந்தும் அதைக் குறித்து ஏதும் சிந்திக்கவேயில்லை. கலிபோர்னிய மருத்துவமனையில் மருத்துவராக வேலைக்குச் சேர்ந்த பிறகு, ஒரு முதியவர் மட்டும் சிவப்பு நிற போர்வையைப் போர்த்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மற்ற நோயாளிகள் வெள்ளை நிறப் போர்வையுடன் இருந்தனர். சிவப்புப் போர்வையை அவர் வீட்டிலிருந்து எடுத்து வந்திருப்பார் என்றே நினைத்தேன். நான் சிகிச்சை தர வேண்டிய நோயாளி அவர் அல்ல என்பதால் மேற்கொண்டு ஆராயாமல் அங்கிருந்து அகன்றுவிட்டேன்.

பிற்பகலில் 2 மூத்த மருத்துவர்கள் அந்த நோயாளியைப் பற்றித் தங்களுக்குள் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர். அவருடைய பெயர், வயது, பால், தொழில், ஊர் என்று எந்த அடையாளத்தையும் குறிப்பிடாமல், ‘சிவப்புப் போர்வை நோயாளி’ என்றே தங்களுக்குள் பேசிக்கொண்டனர். சிவப்புப் போர்வை நோயாளி ஒருவரை நான் கவனித்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வந்த பிறகுதான், அதன் முக்கியத்துவம் புரிந்தது. சிவப்பு நிறப் போர்வை என்பது அந்தஸ்தின் அடையாளம். ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அல்லது பிரமுகர் அல்லது மருத்துவமனை அறக்கட்டளை உறுப்பினர் என்ற 3 தரப்பினரில் எவருக்கோ அவர் வேண்டியவர் என்று புரிந்துகொண்டேன். இத்தகைய பிரமுக நண்பர்களை எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் எங்களுக்குத் தனியாக வகுப்புகள் எடுக்கப்படாவிட்டாலும் சிவப்பு நிறப் போர்வை போர்த்திய நோயாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தும் சிகிச்சை முறையைத் தெரிந்துகொண்டுவிட்டோம்.

அந்தஸ்தின் அடையாளம்

இப்போது நான் மசாசூசெட்ஸ் மருத்துவமனையில் பணிபுரிகிறேன். இங்கு எல்லோருக்கும் வெள்ளை நிறப் போர்வைதான். இங்கும் சிவப்புநிறப் போர்வை நோயாளிகள் சிலர் உண்டு. அவர்களைப் போலவே சிறப்பு கவனத்துக்குரிய நோயாளிகளும் உண்டு. அவர்கள் மருத்துவமனைக்குக் கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர். மருத்துவமனையின் மேல் மாடியில் அவர்களுக்கு நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள் அலங்காரங்களும் உள்ள பெரிய அறைகள் தரப்படுகின்றன. அவர்களுக்கான உடைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள் எல்லாமே நல்ல நிறத்திலும் தரத்திலும் இருக்கும். உணவு கூட அவர்க ளுடைய விருப்பப்படி - அதே சமயம் - ஊட்டச் சத்து நிபுணரின் வழிகாட்டுதலின்படி தயாரித்து அளிக்கப் படும். சிவப்பு நிறப் போர்வையாகவோ, தனி அறை யாகவோ, நட்சத்திர ஹோட்டலின் தங்குமறைகளைப் போலவோ அவரவர் பண வசதி, அந்தஸ்துக்கு ஏற்ப அமெரிக்காவின் எல்லா பெரிய மருத்துவமனைகளிலும் இவர்களுக்கென்று தனிப் பிரிவுகள் வழக்கமாகிவிட்டன. நாட்டின் 15 முன்னணி மருத்துவமனைகளில் 10 இதைப் போன்ற வசதிகளுடன் உள்ளன.

பிரமுகர்களுக்கு தனி கவனிப்பு மூலம் அதிக நன்கொடைகளைப் பெற முடியும் என்பதால் இதில் தீங்கு ஏதும் இல்லை என்று சில மருத்துவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். பணக்கார நோயாளிகள் ஓர் இரவுக்கு 1,000 டாலர்களைக்கூட அறை வாடகை யாகத் தருகின்றனர். நம்முடைய சிகிச்சையும் சேவை யும் அவர்களுக்குப் பிடித்துவிட்டால் தாராளமாக நன்கொடை தந்துவிட்டுச் செல்கின்றனர். சில புற்று நோய் சிகிச்சை மையங்களில் பணக்கார நோயாளிக ளிடம் எப்படி நன்கொடை கேட்க வேண்டும் என்று மருத்து வர்களுக்குப் பயிற்சியளிப்பதும் உண்டு. இதில் அர்த்தம் இருக்கிறது. நிறையப் பணம் கிடைத்தால் மருத்துவமனையை நவீனப்படுத்தவும் நோயாளிகளுக்கு அதிக வசதிகளைச் செய்துதரவும் முடியும். நோயா ளிகளின் பராமரிப்பும் மேம்படும்.

சிவப்புப் போர்வைகள் தீங்கற்றவையா?

பணக்காரர்களுக்கு அதிக அறைகளை ஒதுக் கும்போது ஏழை நோயாளிகளுக்கான இடம் சுருங்கி விடுகிறது.

முக்கியப் பிரமுகர்கள் அல்லது அவர்களுக்கு வேண்டி யவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு அவர்களை மட்டுமே தொடர்ந்து கவனித்து வந்தால் மற்ற நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

பணக்கார நோயாளிகளுக்கு சற்றே விலை அதிக முள்ள மருந்துகள், மருத்துவ சாதனங்களைப் பரிந்துரைத்தால் மற்ற நோயாளிகள் பாதிப்படைவார்கள் என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. இதன் உள் கருத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. மருத்துவ மனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் அனைவரையும் ஒரு மருத்துவர் சமமாகவே பார்க்கிறார். சிவப்புப் போர்வையை மட்டும் அதிகம் கவனிப்பது மற்றவர் களை உதாசீனப்படுத்துவது என்று பாரபட்சமாகச் செயல் படுவதில்லை. மருந்து, மாத்திரை களுக்கும் சாதனங் களுக்கும் அதிகம் செலவு செய்யக்கூடியவர் களுக்கு அதற்கேற்ப பரிந்துரை செய்யப்படுகிறது.

சிறப்புக் கவனிப்பு, மோசமான விளைவு

பணக்கார அல்லது பிரமுக நோயாளிகளுக்கு அதிக கவனிப்பு மூலம் தீங்கும் இழைக்கப்படுகிறது. எந்த ஒன்றும் நிச்சயமாகத் தெரிந்தாலும், ‘சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதி செய்துகொண்டுவிட வேண்டும்’ என்று அவர்களுக்கு ஏகப்பட்ட சோதனைகளைப் பரிந்துரைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்குத் தொல்லைகளும் மன உளைச்சல்களும்தான் அதிகம் ஏற்படுகிறது.

எல்லோரையும் போலவே அவரையும் சமமாக பாவித்திருந்தால் இந்த அனாவசிய சோதனைகள் தவிர்த்திருக்கப்படும். 2007-ல் பென்சில்வேனியாவில் பிரமுகர்களான நோயாளிகளுக்காகத் தனிப்பிரிவு கட்டப்பட்டது. அப்போது மருத்துவர்கள், இதைப் போன்று பிற மருத்துவமனைகளில் கட்டப்பட்ட பிறகு செவிலியர்களின் சேவையின் தரம் குறைந்ததையும் நோயாளிகளின் பராமரிப்பு சரிந்ததையும் சுட்டிக்காட்டி அச்சம் தெரிவித்தனர். எல்லா நோயாளிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம் என்று மருத்துவர்கள் கூறினாலும் உண்மை அதுவல்ல என்பதற்கு நானே சாட்சி. சிவப்புப் போர்வை நோயாளிகள் மீது கூடுதல் அக்கறை செலுத்தியிருக்கிறேன் என்பதைக் குற்ற உணர்வுடன் ஒப்புக்கொள்கிறேன்.

எல்லோரும்தானே முக்கியம்

ஒரு முறை உள்ளூர் வர்த்தகப் பிரமுகர் ஒருவர் என்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அவர் தேறிவிட்டார், சிகிச்சையும் முடிந்துவிட்டது. அவரை வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அந்த நல்ல செய்தியை அவரிடம் சொல்லலாம் என்று அறைக்குள் நுழைந்தேன். அறையில் புதிய பூக்களின் மணம் என்னைத் தொட்டது. பூச்சாடியில் நிறைய மலர்கள் சொருகப்பட்டிருந்தன. யாராவது நண்பர்கள், உறவினர்கள் அவருக்கு வாங்கியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே, நான் சொல்ல வேண்டிய தகவலைத் தெரிவித்தேன்.

அவர் முகம் சுளித்தார். அவருடைய மனைவி என்னருகில் வந்து, “எங்கள் வீட்டைவிட இங்கே நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்; இன்றிரவு எங்களை இங்கே தங்க அனுமதியுங்களேன்” என்றார். அவர் மேலும் ஓரிரவு தங்குவதற்கு மருத்துவ ரீதியான காரணம் ஏதுமில்லாவிட்டாலும் நான் புன் சிரிப்புடன் சம்மதித்துவிட்டு வெளியே வந்தேன். இதே சலுகையை வெள்ளைப் போர்வை நோயாளி யாராவது கேட்டிருந்தால் அனுமதித்திருப்பேனா?

என்னுடைய நோயாளிகளில் ஒருவரை நான் முக்கியமானவர் என்று கருதினால் மற்றவர்கள் முக்கியமற்றவர்களா?

(கட்டுரையாளர் பிரிகாம் என்ற இடத்தில் மகளிர், குழந்தைகளுக்கான மருத்துவமனையில் பணிபுரிகிறார்)

தமிழில்: சாரி © ‘தி நியூயார்க் டைம்ஸ்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x