Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

சனியும் வியாழனும் முட்டிக்கொள்ளுமா?

வானத்தைப் பார்த்தபடியே ஒருவர் தனது ஆயுளைக் கழித்துவிடலாம். அவ்வளவு அதிசயங்களை அது நமக்கு அள்ளித்தருகிறது. அதன் இன்னொரு அதிசயமாக, வருகின்ற டிசம்பர் 21 மாலை சனிக் கோளும் வியாழன் கோளும் ஒன்றையொன்று கட்டி அணைத்தபடி நெருங்கி இருப்பது போன்ற அரிய வானக் காட்சி தென்படவிருக்கிறது. சூரியன் மறைந்து அந்தி சாயும் வேளையில் தென்மேற்குத் திசையில் சனிக் கோளுக்குக் கைகொடுத்து நட்புடன் சந்திப்பதுபோல வியாழன் கோள் நெருங்கி இரண்டும் ஒரே ஒளிப் புள்ளியாக ஒளிரும். ஜூலை 16, 1623-க்குப் பிறகு, கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் கடந்த பின்னர் சனியும் வியாழனும் இவ்வளவு நெருக்கமாக நிலைகொண்டு அற்புத வானக் காட்சியை நமக்குத் தரவுள்ளன.

உண்மையிலேயே இரண்டு கோள்களும் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொள்ளாது. வியாழன் புவிக்குச் சற்று அருகே உள்ள கோள். அதைவிட சனி தொலைவிலுள்ள கோள். டிசம்பர் 21 அன்று இந்த இரண்டு கோள்களுக்கு இடையே சுமார் 60 கோடி கிமீ தொலைவு இருக்கும். ஆயினும் பூமியிலிருந்து காணும்போது இரண்டும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு நிற்பது போலக் காட்சி தரும்.

சூரியனைச் சுற்றிக் கோள்கள் வலம்வரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தற்செயலாகப் பூமியும் வேறு இரண்டு கோள்களும் சற்றேறக்குறைய நேர்க்கோட்டில் அமையும். அந்த நிலையில், பூமியிலிருந்து காணும்போது அந்த இரண்டு கோள்களும் வானத்தில் ஒன்றையொன்று இடித்துக்கொண்டு நெருங்கி நிற்பதுபோலக் காட்சிதரும். இதைத்தான் 'கோள் சந்திப்பு நிகழ்வு' (conjunction) என்கிறார்கள். நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே நெருக்க நிகழ்வு நடைபெறுவதைத்தான் நாம் 'கிரகணம்' என்கிறோம்.

பாரம்பரிய இந்திய வானவியலில் இரண்டு கோள்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும் நிகழ்வை 'யுத்தம்' என்றும், நிலவு வேறு கோள்களை நெருங்கிச் செல்வதை 'ஸமாகம்' என்றும், கோள்களைச் சூரியன் மறைப்பதை 'அஸ்தமயம்' என்றும் கூறுவார்கள்.

வானில் சூரியன் ஊர்ந்து செல்வதுபோலக் காட்சி தரும் பாதையைச் சூரிய வீதி என்பார்கள். இந்தச் சம தளத்திலிருந்து வெறும் ஐந்து டிகிரி சாய்வாகப் பூமியைச் சுற்றும் நிலவும் இதே சூரிய வீதியில் பயணிப்பதுபோலத் தென்படும். மேலும், சூரியனைச் சுற்றிக் கோள்கள் வலம் வரும் நீள்வட்டப் பாதைகளும் ஒருசில டிகிரி வித்தியாசத்தில் ஒரே தளத்தில் அமைந்துள்ளன. எனவே, பூமியிலிருந்து காணும்போது வானில் நிலவும் எல்லாக் கோள்களும் சூரிய வீதியில் பவனி வருவதுபோலக் காட்சி தரும். அவ்வாறு பயணம் செய்யும்போது அவ்வப்போது இரண்டு கோள்கள் ஒன்றையொன்று நெருங்கிச் சந்திப்பு நிகழும். சனி சூரியனைச் சுற்றிவர 29.4 ஆண்டுகளும் வியாழன் 11.86 ஆண்டுகளும் எடுக்கும். எனவே, 19.85 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனியும் வியாழனும் வான் கோளத்தில் சூரிய வீதியில் நெருங்கி ஒன்றையொன்று சந்திப்பது போலக் காட்சி ஏற்படும். கடந்த முறை மே 28, 2000-ல் இப்படி நிகழ்ந்தது. ஆனால், அப்போது இரண்டு கோள்களும் சூரியனுக்கு அருகே இருந்ததால் கண்ணுக்குத் தென்படவில்லை. 19.85 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சந்திப்பில் சிறிதளவு இடைவெளி இருக்கும். ஆனால், கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தற்போதைய சந்திப்பில் வெறும் கண்ணுக்கு இடைவெளி புலப்படாது என்பதுதான் இதன் சிறப்பு.

அடுத்து நவம்பர் 5, 2040-லும், ஏப்ரல் 10, 2060-லும் சனிக்கும் வியாழனுக்கும் இடையே கோள் சந்திப்பு நிகழ்வு ஏற்படும் என்றாலும் அப்போதெல்லாம் முறையே 1 014' மற்றும் 1009' டிகிரி கோண இடைவெளி இருக்கும். எனவே, இரண்டு கோள்களும் நெருங்கி இடித்துக்கொள்வது போன்ற அற்புதத் தோற்றம் ஏற்படாது. மறுபடியும் மார்ச் 15, 2080-ல்தான் இப்போதுபோல இரண்டுக்கும் இடையே கோண இடைவெளி வெறும் 0.1 டிகிரி என அமைந்து நெருங்கி மோதுவது போன்ற காட்சி தென்படும்.

சனியும் வியாழனும் மட்டுமல்ல மற்ற கோள்களுக்கு இடையேயும் கோள் சந்திப்பு நிகழ்வு ஏற்படும். வரும் ஜூலை 13, 2021 அன்று வெள்ளிக் கோளுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே கோள் நெருக்க நிகழ்வு ஏற்படும். ஏப்ரல் 5, 2022 அன்று சனிக்கும் செவ்வாய்க்கும் இடையேயும், ஏப்ரல் 30, 2022 அன்று வெள்ளிக்கும் வியாழனுக்கும் இடையேயும், மே 29, 2022 அன்று செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையேயும் கோள் நெருக்க நிகழ்வு நிகழும். இன்னும் 5,521 ஆண்டுகள் கடந்த பின்னர் ஜூன் 17, 7541 அன்று வியாழன் கோள் சனிக் கோளுக்கு நேர் எதிரில் நிலைகொண்டு சற்று நேரத்துக்கு சனியை முழுமையாக மறைக்கும் அரிய நிகழ்வும் ஏற்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை டிசம்பர் 21 மாலை சுமார் 6.30 மணிக்குச் சூரியன் மறைந்து போதிய இருட்டு பரவிய நிலையில் தென்மேற்கு திசையில் வியாழன் கோளும் சனிக் கோளும் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொண்டு நிற்பது போன்ற காட்சி தென்படும். இன்று முதலே சூரியன் மறைந்த பின்னர் தென்மேற்கு வானில் இரண்டு கோள்களும் தென்படும். அடுத்தடுத்த நாட்கள் கூர்ந்து கவனித்துவந்தால் இவற்றுக்கிடையே உள்ள தொலைவு குறைந்துவருவதைக் காணலாம். டிசம்பர் 21 அன்று இரண்டும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு இருப்பதுபோலத் தோற்றம் தரும். அன்று வெறும் கண்களால் காணும்போது இடித்துக்கொண்டு இருப்பது போன்று தோன்றும். இருநோக்கி (பைனாகுலர்) வழியே காணும்போது அவற்றுக்கு இடையே நூலிழை அளவுக்கு இடைவெளி உள்ளதைக் காணலாம். அதன் பின்னர் அடுத்தடுத்த நாட்கள் இரண்டுக்கும் இடையே இடைவெளி அதிகரிப்பதைக் காணலாம். வானம் என்பது நமக்குக் கட்டணமின்றித் திறந்துவிடப்பட்ட அருங்காட்சியகம். அந்த அருங்காட்சியகத்தில் தெரியும் இதுபோன்ற காட்சிகளைப் பொதுமக்கள், மாணவர்கள், சிறுவர்கள் யாரும் தவறவிட வேண்டாம்.

- த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி.

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x