Last Updated : 13 Oct, 2015 09:15 AM

 

Published : 13 Oct 2015 09:15 AM
Last Updated : 13 Oct 2015 09:15 AM

நூல் அகம்: பருந்தும் இல்லை, புறாவும் இல்லை!

மும்பையில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷி முகம்மது கசூரி எழுதிய ‘நெய்தர் எ ஹாக் நார் எ டவ்’ புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திர குல்கர்னியின் மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக, எழுத்தாளர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கும் இத்தருணத்தில், எழுத்தாளர்கள் தொடர்பான விஷயங்களில் அரசியல் கட்சிகள் ஏற்படுத்த முயலும் முட்டுக்கட்டைகளில் ஒன்றாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது. சிவசேனையின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கும் இந்தப் புத்தகம், உண்மையில் எதைப் பற்றிப் பேசுகிறது?

தேரிக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த குர்ஷி முகம்மது கசூரி, பர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான ராணுவ ஆட்சியில், வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்தவர். பதவியேற்ற பிறகு, அதிபர் முஷாரஃபைச் சந்திக்க அவருடைய அலுவலகத்துக்குச் சென்றார். அப்போது “இந்தியாவுடனான உறவைப் பொறுத்த வரையில் நீங்கள் பருந்தா, புறாவா?” என்று நகைச் சுவையாகக் கேட்டார் முஷாஃரப். “நான் இரண்டும் இல்லை” என்று பதில் சொன்னார் கசூரி. அதையே தனது புதிய புத்தகத்துக்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்து விட்டார். பெங்குயின் நிறுவனம் இப்புத்தகத்தை இம்மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடுகிறது.

காஷ்மீரை மையமாகக் கொண்ட இந்திய, பாகிஸ்தான் உறவுகளை எல்லாக் கோணங்களிலும் அலசுகிறது புத்தகம். பாகிஸ்தான் - அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் - இந்தியா ஆகிய நாடுகளின் உறவுகள் எப்படிப் பல விஷயங்களில் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை விவரிக்கிறது. அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கையிருப்பில் வைத்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இரு நாடுகளுமே ஒன்றையொன்று அழித்து விடக்கூடிய வலிமை பெற்றவை என்று கவலைப் படுகிறார் கசூரி. இரு நாடுகளுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதற்குள்ள வாய்ப்புகளையும் குறிப்பிடுகிறார்.

இரு நாடுகளிலும் சேர்ந்து சுமார் 150 கோடி மக்கள் வசிப்பதால், அவர்களுடைய நலனைக் கருதியாவது இரு நாடுகளின் தலைவர்களும் சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்கிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமாதானம் ஏற்படவும் உறவு வலுப்படவும் 2002 முதல் 2007 வரையில் எடுக்கப்பட்ட சமரச முயற்சிகளை நூலில் விவரித்துள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள் நிலையில் நேரடியாகப் பேச்சு நடத்தியதல்லாமல், பிறர் கண்ணில் படாமல் மறைவாக நடந்த பேச்சுகள் குறித்தும் நினைவுகூர்கிறார். ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் தீர்வு ஏற்படுவதற்கான கட்டமைப்பு உருவாகியதை நூல் தெரிவிக்கிறது. எதிர்கால சமரசத் தீர்வுக்கும் இதுவே அடிப்படையாக இருக்கும் என்கிறார்.

பாகிஸ்தானின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மேற்கொண்ட சமரச முயற்சிகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பெருகியதையும் எல்லையில் மக்களுக்குகிடையில் நேரடித் தொடர்பு நிலவியதையும், வாஜ்பாய், முஷாரஃப் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளையும் புத்தகம் விவரிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமையை வலியுறுத்தும் இந்தப் புத்தக வெளியீட்டுக்குத்தான் சிவசேனை கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x