Last Updated : 27 Oct, 2015 08:14 AM

 

Published : 27 Oct 2015 08:14 AM
Last Updated : 27 Oct 2015 08:14 AM

உலகம் இன்று: தென்னாப்பிரிக்காவை உலுக்கும் மாணவர் போராட்டம்!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியைப் புரட்டி எடுத்ததை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தவர்களில் பலர், தென் னாப்பிரிக்காவில் நடந்துவரும் மாணவர் போராட்டத்தைத் தவறவிட்டிருக்கலாம். 1976-ல் ஜோகன்னர்ஸ் பெர்க்கின் சொவீட்டோ பகுதியில் நிறவெறிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குப் பின்னர், மிகப் பெரிய அளவில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் இது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பல பல்கலைக்கழகங்கள் மூடப் பட்டிருக்கின்றன. அந்நாட்டின் மூன்று தலைநகரங்க ளில் ஒன்றான பிரிட்டோரியாவில் கூடிய பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்களின் எண் ணிக்கை 10,000-ஐத் தாண்டியது. போலீஸாருடன் மோதல், கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு என்று தென் னாப்பிரிக்காவே திகைத்து நிற்கிறது. மாணவர்களின் கொந்தளிப்புக்குக் காரணம், கல்விக் கட்டண உயர்வு!

‘விட்ஸ்’ என்று அழைக்கப்படும் ‘விட்வாட்டர்ஸ்ராண்டு’ பல்கலைக்கழகத்தில்தான் போராட்டத்துக்கான பொறி கிளம்பியது. ஜோகன்னர்ஸ்பெர்க்கில் உள்ள இப்பல்கலைக்கழகத்தின் கல்விக் கட்டணம் இந்த ஆண்டு 10.5% உயர்த்தப்பட்டிருக்கிறது. பதிவுக் கட்டணமும் 6% உயர்ந்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா ஒன்றும் அத்தனை செழிப்பான நாடல்ல. சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே வாழ்பவர்கள் என்று பிப்ரவரி மாதம் வெளியான கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஏழை களில் பெரும்பாலானோர் கருப்பினத்தவர்கள் என் பதைச் சொல்லத் தேவையில்லை. இவர்களில் பெரும் பாலானோர் கல்லூரி வரை வருவதே சிரமம். கல்விக் கட்டணம், தங்குமிடம், உணவு என்று ஏகப்பட்ட செலவுகளைத் தாக்குப்பிடித்து கல்வியைத் தொடர்வது இன்னும் கடினமான விஷயம்.

இப்படியான சூழலில்தான், ‘விட்ஸ்’ பல்கலைக் கழகத்தின் கல்விக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசின் நிதி உதவி பெறும் பல்கலைக்கழகம்தான் இது. இந்தக் கட்டண உயர்வால், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாகக் கல்விக் கட்ட ணம் உயர்ந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ‘விட்ஸ்’ மாணவர்கள் அக் டோபர் 14-ல் போராட்டத்தில் குதித்தனர். இந்தக் கல்விக் கட்டண உயர்வுக்கு மிக முக்கியக் காரணம், பொதுக் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அளித்துவரும் நிதியுதவி கணிசமாகக் குறைக்கப் பட்டிருப்பதுதான் என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். இதேபோல் பாதிக்கப்பட்ட மற்ற பல்கலைக் கழகங்களின் மாணவர்களும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

கேப்டவுனில் உள்ள நாடாளுமன்றம், பிரிட்டோரி யாவின் முன்பும் குவிந்த மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மாணவர்களின் மிகப் பெரிய எழுச்சி அரசை அசைக்காமல் இல்லை. “அடுத்த ஆண்டு இதுபோல் கல்விக் கட்டணம் உயராது என்று அறிவிக்கிறேன்” என்று ‘பெருந்தன்மையாக’ அறிக்கை விடுத்திருக்கிறார் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸுமா. ஆனால், இப்போது அறிவிக் கப்பட்டிருக்கும் கல்விக் கட்டணத்தைக் குறைப்பது, இலவசக் கல்வி ஆகியவைதான் முக்கியம் என்று மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் முன் வைக்கப்படுகிறது. அத்துடன், ஜேக்கப் ஸுமாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகள் தோல்வியடைந்திருப்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மாணவர்கள் இன்னமும் திருப்தியடையாத நிலையில், செவ்வாய்க்கிழமை வரை பல பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும் என்கின்றன தென்னாப்பிரிக்க ஊடகங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x