Published : 15 Oct 2020 07:25 AM
Last Updated : 15 Oct 2020 07:25 AM

கொழுப்பு கொண்டுவரும் ஆபத்து!

ஆர்.பி.சண்முகம்

மனித உடலின் மிகப் பெரிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரலுக்குப் பலவித தாக்குதல்களையும் தாங்கும் சக்தி உண்டு. அப்படிப்பட்ட உறுப்பையே தாக்கி அழிக்கும் வல்லமை அளவற்ற மதுப் பழக்கத்துக்கு உண்டு. இது எல்லோரும் அறிந்தது. ஆனால், இப்போது புதிதாக ஒரு அதிர்ச்சியை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகக் கொழுப்புச் சத்து உடலில் சேர்ந்தால் கல்லீரல் பழுதுபடும் என்பதுதான் அது. இது மது அருந்தி கல்லீரல் கெடுவதற்கு ஒப்பானது!

கல்லீரலின் வேலை

மனித உடலில் இதயம், மூளை போன்றவை எவ்வளவு முக்கியமோ கல்லீரலும் சம அளவில் முக்கியம். நாம் உட்கொள்ளும் உணவு அனைத்தும் குடலிலிருந்து உறிஞ்சப்பெற்று நேராகக் கல்லீரலைச் சென்றடையும். கல்லீரல் உணவிலுள்ள எல்லாச் சத்துகளையும் பிரித்தெடுத்து உடலின் வெவ்வேறு திசுக்களுக்குத் தேவையான சத்துகளை வழங்குகிறது.

மேலும், கல்லீரலானது ஆல்புமின் என்ற முக்கியமான புரதச் சத்தை உற்பத்திசெய்கிறது. பித்தநீரைச் சுரக்கச் செய்து, நாம் உட்கொள்ளும் கொழுப்பு உணவு வகைகளைச் செரிக்க உதவுகிறது. ரத்தக் கசிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள ரத்தம் உறையும் பொருட்களைக் கல்லீரல் உற்பத்திசெய்கிறது. மேலும், நோய் எதிர்ப்புக்கான பலவகை செல்களையும் உற்பத்திசெய்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட கல்லீரல் பழுதானால் என்னவாகும்?

கல்லீரல் பழுதானால்

அதிகம் வறுத்த உணவுகள், வெண்ணெய், நெய், எண்ணெய்கள், சிவப்பு மாமிச வகைகள், அதிக சர்க்கரை உணவுகள், அதிகமான பழங்கள் எல்லாம் உடலில் கொழுப்புச் சத்தாக மாறி சேமித்து வைக்கப்படும். இவை செலவிடப்படாமல் இருந்தால் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இதய நோய், ஏன் புற்றுநோயும்கூட உண்டாக வழிவகுக்கும். கார்போஹைட்ரேட் உணவுகள் கொழுப்பாகத்தான் உடலில் மாற்றி சேகரித்து வைக்கப்படும். தேவைப்படும்போது இது சர்க்கரையாக மாற்றப்பட்டு, தசைநார்களுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுக்கிறது. இத்தகைய மாற்றங்களை இன்சுலின் என்ற ஹார்மோன் உண்டுபண்ணுகிறது. கல்லீரல் பழுதுபட்டால் இன்சுலின் அதனுடைய வேலையைச் சரிவரச் செய்ய இயலாது. கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து நீண்ட நாள் தங்கிவிட்டால் கல்லீரல் அதனுடைய வேலையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கும். கொழுப்பிலுள்ள ஒருவகை அமிலம் (Fatty Acid) கல்லீரல் திசுக்களை நேரடியாகத் தாக்கிச் சிதைக்கும்.

கல்லீரல் கொழுப்பு அதிகமாக அதிகமாகத் திசுக்களின் எண்ணிக்கையும் வேலைத்திறனும் குறையும். திசுக்களைப் புதுப்பித்து உற்பத்திசெய்யும் திறனும் குறையும். எதிர்ப்புசக்தியுடைய வெள்ளை அணுக்கள் அதிக அளவில் சேர்ந்துவிடும். இந்நிலைக்கு அழற்சி அல்லது மதுவில்லா கல்லீரல் கொழுப்பு அழற்சி நோய் என்று பெயர். அழற்சி தொடர்ந்து இருக்குமானால் கல்லீரல் திசுக்களைச் சுற்றி நார்கள் போன்ற திசு (ஃபைப்ரோசிஸ்) வளர ஆரம்பிக்கும். மிருதுவான கல்லீரல் கடினமாக அல்லது கெட்டியாக மாறும். வேலைத்திறன் மேலும் குறையும். இந்நிலையில்தான் நோயின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். பசி குறையும், பலகீனம் ஏற்படும், உடல் இளைக்கும், செரிமானம் குறையும்.

இத்தகைய நிலை வரை மருத்துவச் சிகிச்சை செய்து மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டுவர முடியும். சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் கல்லீரலில் கொழுப்பு தொடர்ச்சியாக இருக்குமேயானால், மேற்கொண்டு நார் திசுக்கள் அதிகம் உண்டாகி நல்ல திசுக்களை அழித்துவிடும். அப்படி நடக்கும்போது கல்லீரல் சுயதன்மையை இழந்து மிகவும் இறுகிவிடும். இந்த சிர்ரோசிஸ் நிலைக்கு வந்துவிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படுவதோடு, குறுகிய காலத்தில் உயிரிழக்கவும் நேரிடும்.

சிகிச்சை என்ன?

மருந்துகள் மூலமாகக் கொழுப்பைக் குறைப்பதற்கு வழி ஏதுமில்லை. சர்க்கரை நோய்க்கான மருந்துகள், கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைட்ஸ் போன்ற கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள், வைட்டமின் இ மருந்துகள் போன்றவை ஓரளவு பயனுள்ளவையாகக் கருதப்படுகிறது. கல்லீரலில் படர்ந்திருக்கும் நார்த் திசுக்களைக் குறைப்பதற்கான புதிய மருந்துகள் இப்போது ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளன. ஆக, கொழுப்புணவைத் தவிர்த்தல், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்தல், தினசரி உடற்பயிற்சி செய்தல், மது அருந்துவதைத் தவிர்த்தல் அல்லது அளவோடு அருந்துதல் போன்ற முறைகளால் மட்டும்தான் கல்லீரல் கொழுப்பைக் குறைக்கலாம்.

- ஆர்.பி.சண்முகம், இரைப்பை, குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர்.

தொடர்புக்கு: drshanmugam@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x