Published : 06 Oct 2020 07:56 AM
Last Updated : 06 Oct 2020 07:56 AM

இனி அண்டங்களுக்குப் பறந்து செல்லுங்கள் சச்சி!

மிஷ்கின்

நான் 12-வது முடித்த சமயம் அது. இசையமைப்பாளர் கே.வுக்கு அப்போது 5 வயது. அவருடைய அப்பா பேராசிரியர் ரமேஷ்குமார் எனக்குப் பழக்கம். அவரை அடிக்கடி பார்க்கப் போவேன். ஒருமுறை பெரியவர் ஒருவரை அந்த வீட்டில் பார்த்தேன். ஒரு சக்ரவர்த்திபோல் உட்கார்ந்திருந்தார். அந்த வயதில் அவ்வளவு கம்பீரத்தோடும் அமைதியோடும் நான் எந்த மனிதரையும் பார்த்ததில்லை. அப்போது பேராசிரியரிடம் நான் கேட்கிறேன் “அவர் யார்?” என்று. “அவர்தான் கி.அ.சச்சிதானந்தம்” என்கிறார். “அவர் என்ன செய்கிறார்?” என்று கேட்டபோது “அவர் ஒரு நாடோடி” என்றார்.

நான் படித்த கோபாலபுரம் பள்ளிக்கு அருகில் அவர் வீடு இருக்கிறது என்பது தெரியவந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை சச்சிதானந்தம் வீட்டுக்குச் சென்றுவிட்டேன், இரவு 8 மணி இருக்கும். “என்ன படிச்சிருக்க?” என்று அவர் என்னைக் கேட்டார். “சமீபத்தில் டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ படிச்சேன்” என்று அவரிடம் கூறினேன். “அது போதும் உன் வாழ்க்கைக்கு” என்று சொல்லி ஆரம்பித்தார். அப்புறம், “நீ ஏன் தஸ்தயேவ்ஸ்கியோட ‘குற்றமும் தண்டனையும்’ படிக்கக் கூடாது?” என்று கேட்டார். “நான் ஏன் படிக்கணும் சார்?” என்று கேட்டேன். “ஒரு மனுசனோட குற்றவுணர்ச்சியைப் பத்திப் புரிஞ்சிக்கணும்னா நீ அந்தப் புத்தகத்தைப் படிச்சாதான் புரியும்” என்றார். அந்த 18 வயது வரைக்கும் எதையெதையோ படித்திருக்கிறேன். ‘தேடிப் படிக்கணும்’ என்று சொல்லிக்கொடுத்தவர் சச்சிதானந்தம்தான்.

ஒவ்வொரு ஞாயிறும் இரவு 8 மணிக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு அவரைப் பார்க்கப் போய்விடுவேன். வாரத்துக்கு இரண்டு நாட்கள் என்று இருந்தது, அதன் பின் மூன்று, நான்கு என்று ஆனது, கடைசியில் வாரத்தில் 5 நாட்கள் என்று ஆனது. 12 மணி, 1 மணி வரை அவர் பேசுவார், நான் கேட்பேன். எனக்கு வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் திறந்துவைத்தவர் அவர்தான். இலக்கியம், ஆன்மிகம் என்று என் உலகை விசாலப்படுத்தினார். என் 18 வயதிலிருந்து 26 வயது வரை அவரிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தேன். “ஒரு சீடர் தயாராக இருக்கும்போது குரு தோன்றுகிறார்” என்று சொல்வார்கள். அந்த மாதிரி அவர் ஒரு குருவாக எனக்கு எல்லா விஷயங்களிலும் இருந்தார். நான் இயக்குநராக ஆன பிறகும் அந்த உறவு தொடர்ந்தது. குரு-சிஷ்யன் என்ற உறவு கொஞ்சம் கொஞ்சமாக நட்பாக மாற ஆரம்பித்தது.

நான் உதவி இயக்குநராக ஆன பிறகு அவரைப் பார்ப்பது குறைந்தது. ஒரு மாதத்துக்கு அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை போய்ப் பார்ப்பேன். அப்போது அவருக்கும் எனக்கும் சிறிய பிரிவே ஏற்பட்டது. நான் வேறு மாதிரி துறையில் இயங்கினேன். அவருக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. அவருக்குப் பிடித்த ஒரே இயக்குநர் குரசோவாதான், எனக்குப் பிடித்த மாதிரி. அதுவும் ஒரே படம்தான், ‘செவன் சாமுராய்’ தொடர்பில்தான் பேசுவார். இதுவரையிலான என் உதவி இயக்குநர்கள் கிட்டத்தட்ட நூறு பேருக்கு அவரைத் தெரியும். அவர்களிடம், “டேய் சச்சியைப் போய்ப் பாருங்கடா. இயக்குநரானாலும் பாருங்க. அவர் ஒங்களுக்கு நிறைய வாழ்க்கையில சொல்லித்தருவார்” என்று சொல்வேன். இதயபூர்வமான இடத்தில் அவர் என்னிடம் இருந்தார்.

அவர் இறந்த நாள் காலை என் தம்பி என் அறைக் கதவைத் தட்டினான். அவன் முகத்தில் பெரிய சோகம் இருந்தது. “அண்ணே, சச்சி இறந்துபோயிட்டாரு” என்றான். எனக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. “அப்படியாடா?” என்றேன். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “பரவாயில்லடா, இறந்துட்டுப்போறாரு” என்றேன். “அவருக்கு இந்தத் தருணம் வந்துட்டுது. அவர் வாழ்க்கையில நெறைய நடந்துட்டார். நெறைய பயணம் செஞ்சிட்டார். அவருக்கு ஒரு பெரிய அமைதி தேவைப்படுது. அதான் இயற்கை அவரைக் கூப்பிட்டுக்கிச்சு. அவர் என்னை விட்டுப் பிரியவே இல்லைடா. அவரை ஒரு காட்டு தேவதையாத்தான் நான் பார்க்கிறேன். அவர் என் பக்கத்திலேயே இருந்து என்னை வழிநடத்திப்போய்க்கிட்டே இருப்பார்டா. அதனால நான் வருத்தப்படல” என்றேன். இந்தத் தன்மையை எனக்குக் கற்றுக்கொடுத்தது சச்சிதான்.

இந்த இயற்கையோடுதான் அவர் கலந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான், என் ட்விட்டர் பக்கத்தில், “இந்தப் பூமியில் நீங்கள் நடந்தது போதும். இனி அண்டங்களுக்குப் பறந்துசெல்லுங்கள் சச்சி” என்று பதிவிட்டிருந்தேன். ஒரு முறை சச்சியின் புத்தக வெளியீடு நெய்வேலியில் நடந்தது. ரொம்பவும் ஏழ்மையான பதிப்பாளர். நான் அந்த வெளியீட்டு விழாவுக்கு வருவேனா என்று அந்த பதிப்பாளர் சச்சியிடம் கேட்டிருக்கிறார். சச்சி தயங்கித் தயங்கி என்னிடம் கேட்டார். நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அவரையும் எனது உதவியாளர்களையும் அழைத்துக்கொண்டு மதியம் 3 மணிக்கு நெய்வேலி போய்விட்டோம். அங்கே சி.மோகனும் இருந்தார். வெளியீட்டு விழா மாலை 6 மணிக்கு. “எத்தனை பேர் வருவாங்க?” என்று சச்சியிடம் கேட்டேன். “ஒரு நானூறு பேர் வருவாங்க” என்றார். மூன்று பேர்தான் வந்திருந்தார்கள். நானூறு நாற்காலிகள் காலியாக இருந்தன. கடைசி நாற்காலியில் சி.மோகன் உட்கார்ந்திருந்தார். அப்போது மேடையில் நான் ஏறி, “உலகத்தில் இதைவிட மிகச் சிறந்த மேடை எனக்கு இருந்திருக்காது. சச்சியைப் பத்தி நான் பேசினா நானூறு பேருக்கும் புரியாது. அதனால, எனக்கு நானே பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் பேசினேன். நான் பேசி முடித்துவிட்டு உட்கார்ந்த பிறகு சி.மோகனைப் பேச அழைத்தார்கள். “நான் என்னென்ன பேசணும்னு நினைச்சனோ அதை மிஷ்கினும் பேசிட்டான். அதனால, நான் உட்கார்ந்துக்கிறேன்” என்று சி.மோகன் கூறிவிட்டார். இந்த மாதிரி என் வாழ்க்கையில் அலாதியான தருணம் அப்போது கிடைத்தது.

சச்சியைப் பற்றி ஒரு பத்தாயிரம் பக்கங்கள் என்னால் எழுத முடியும். சச்சியினால் வாழ்க்கையில் ஒளி பெற்றவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் ஒரு ஆயிரம் பேர் இருப்பார்கள். அதில் ஒரு 50 பேர் எழுத்தாளர்கள், விமர்சகர்கள் போன்றோருக்கு அவர் வீடு தஞ்சம் கொடுத்தது. அப்படி ஒரு ஒரு ஒளியாகத்தான், சூரியனாகத்தான் அவர் எல்லோருக்கும் இருந்தார். அவர் எனக்கு சூரியனாக மட்டுமல்லாமல் நிறைய தருணங்களில் நிலவாகவும் இருந்திருக்கிறார்.

- மிஷ்கின், திரைப்பட இயக்குநர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x