Published : 02 Oct 2020 07:29 am

Updated : 02 Oct 2020 07:29 am

 

Published : 02 Oct 2020 07:29 AM
Last Updated : 02 Oct 2020 07:29 AM

பெருந்தொற்றுக் காலத்தில் காந்தி

gandhi-in-pandemic

ஆர்.வெற்றிகார்த்திக்

பம்பாயில் 1896-ல் இறக்குமதியான பிளேக் தொற்று இந்தியாவில் 10 லட்சம் உயிர்களைக் கொள்ளை கொண்டது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் – அதாவது, 1894-ல் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், இந்தியர்களின் உரிமையை மீட்க உருவாக்கப்பட்ட நட்டால் காங்கிரஸின் செயலாளராகத் தன்னுடைய 26 வயதில் பொறுப்பேற்ற காந்தி 1896-ல் இந்தியா வந்திறங்கினார்.

இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று, தென்னாப்பிரிக்க இந்தியர் நிலையை அவர் தெரியப்படுத்தினார். முதன்முறையாக சென்னை வந்த காந்தி பத்தாயிரம் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து விநியோகித்தார். அடுத்ததாக ராஜ்கோட் நகர பிளேக் கமிட்டியில் உறுப்பினராக இணைந்தார். வேகமாகப் பரவிய பிளேக்கை மட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஆய்வுசெய்து, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உயர் வகுப்பினர் வசித்த வீடுகளில் வீட்டுப் புறக்கடை, முன்வாயிலில் இருந்த கால்வாய்கள் கழிப்பிடங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. அங்குள்ள மனிதர்களோ இந்தச் சுகாதாரச் சீர்கேட்டைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. காந்திக்கு அந்த முடைநாற்றம் பொறுக்க முடியாத அளவில் இருந்தது. ஆனால், பரம ஏழைகளான தாழ்த்தப்பட்டவர்களின் வசிப்பிடங்கள் ஓரளவுக்குச் சுத்தமாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் காந்தி, இரண்டு வாளிகள் முறையைக் கடைப்பிடிக்கச் சொன்னார்; ஒரு வாளியில் சிறுநீரையும், மற்றொரு வாளியில் மலத்தையும் சேமித்து அப்புறப்படுத்தக் கோரினார். காந்தியின் அறைகூவல்களுக்கு எளிய மக்கள் செவிசாய்த்தனர். ஆக, அவர்களுடைய வீடுகளில் சுகாதாரச் சூழல் நல்லபடியாக முன்னேற்றமடைந்தது.

பிளேக்கின் தாக்கம்

1904-ல் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் உள்ள கூலித் தொழிலாளர் குடியிருப்பில் பிளேக் பெருந்தொற்று வெடித்தது. சுகாதாரச் சீர்கேடும், மிதமிஞ்சிய ஜன நெருக்கடியும் (1,500 நபர்கள் தங்கும் இடத்தில் 3,190 பேர்), போதிய விழிப்புணர்வின்மையும் அந்தக் குடியிருப்பை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்தன.

1904-ன் தொடக்கத்தில் ஜோகன்னஸ்பர்க்கில் 17 நாட்கள் தொடர்ச்சியாக அசாதாரணமான மழை பொழிந்தது; நகரமே தண்ணீரால் சூழ, கூலிக் குடியிருப்பின் நிலையோ மிகவும் பரிதாபமாகக் காட்சியளித்தது.

ஜோஹன்னஸ்பர்க்குக்கு அருகில் இருந்த சுரங்கத்தில் பணிபுரிந்த கறுப்பினத் தொழிலாளர்களிடையே பிளேக் முதலில் பரவியது. அங்கு சில இந்தியர்களும் பணியில் இருந்தனர். மார்ச்10-ல் பிளேக்கால் பாதிக்கப்பட்டு ஒரு கறுப்பினத்தவர் மரணமடைந்தார். நகர சுகாதாரக் குழுவினர் தமது மெத்தனப் போக்கால் பிளேக் பரவலைக் கணடறிய தவறிவிட்டனர். அதன் தாக்கம் பெரிய அளவில் மார்ச் 18 அன்று வெளிப்பட்டது.

இறக்கும் தறுவாயில் 15 இந்தியர்கள், ரிக்‌ஷாக்களில் கூலிக் குடியிருப்புக்குக் கொண்டுவரப்பட்டனர். அதில் ஒருவர் இறந்த செய்தி காந்தியின் காதுகளுக்கு எட்டியது. நிலைமையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காந்தி தெரியப்படுத்துகிறார். அரசாங்கத்தின் உதவி கிட்டாத நிலையில் தனது உயிரைப் பற்றித் துளியும் பயம் இல்லாமல் செயலில் இறங்கினார் காந்தி. அவருடைய ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் பணிபுரிந்த மதன்ஜித், மருத்துவர் காட்பிரே ஆகியோருடன் இணைந்து காந்தி 14 நோயாளிகளுக்கு முதலுதவி அளித்தார். மேலும், தன்னுடைய குமாஸ்தாக்கள் நால்வரையும் அழைத்து செவிலியப் பணியில் ஈடுபடுத்தினார். பிளேக் கிருமி தொற்றும் பட்சத்தில் மரணம் நிச்சயம் என்ற நிலையில் காந்தி தன் சகாக்களுடன் பெருந்தொற்றுடனான யுத்தத்துக்குத் தயாரானார்.

அர்ப்பணிப்பு மிக்க சேவை

எப்போதும் கண்டிராத, கேட்டிராத நோயாளிகளின் மரண வேதனையை - அவஸ்தையை அன்றைய தற்காலிக மருத்துவமனையில் இருந்தவர்கள் உணர்ந்ததாக காந்தி கூறிப்பிடுகிறார். நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் ஒருவர் பின் ஒருவராக மாண்டார்கள். காந்தியின் அறைகூவலுக்கு செவிசாய்த்த இந்தியச் சமுதாயம் பெரிய கூட்டம் போட்டு ஒரே நாளில் 1,000 பவுண்ட்கள் சேகரித்துக் கொடுத்தனர். சிலர் தம்முடைய வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் தானம் செய்தனர். இன்னும் சிலர் பிறரிடம் கடன் வாங்கிப் பொருளுதவி ஈட்டினர். நோயாளிகளுக்கு சேவை செய்ய 30 இந்தியத் தன்னார்வலர்கள் முன்வந்தனர்.

“அது ஒரு பயங்கரமான இரவு; தூக்கமில்லாத இரவு; தன்னலமில்லாத சேவையுடன் மனதை ஒருங்கிணைத்த இரவு; அதற்கு முன் பல நோயாளிகளுக்கு முதலுதவி அளித்தபோதும் முதல்முறையாக பிளேக் பாதித்தவர்களுடன் கழித்த இரவு; பல உயிர்கள் அடுத்தடுத்து செத்து விழுந்ததை அருகில் இருந்து பார்த்த இரவு. நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது, அவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகள் செய்துகொடுப்பது, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது; மேலும், அவர்களை உற்சாகப்படுத்துவது – இவைதான் நங்கள் செய்த வேலைகள். பணியாற்றிய இளைஞர்களின் அசைக்க முடியாத வைராக்கியமும் அச்சமின்மையும் என்னை அளவிட முடியாத பேரானந்தத்தில் ஆழ்த்தின” என்று காந்தி மார்ச் 18-ம் தேதி இரவைப் பற்றி தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிடுகிறார். காந்தியுடன் சேவை செய்த 27 வயது செவிலியர் எமிலி புபோனிக் பிளேக்கால் மார்ச் 31, 1904-ல் உயிர்நீத்தார். இவருடைய கல்லறை 1904-ல் நோயாளிகளைத் தனிமைப்படுத்த உருவாக்கப்பட்ட ரைட்ஃபோன்டைன் (Rietfontein) பிளேக் மருத்துவமனையில் உள்ளது. 1905-ல் ராண்ட் பிளேக் கமிட்டி அறிக்கையின்படி, 1904 மார்ச் 18 முதல் ஜூலை 9 வரை ஜோஹன்னஸ்பர்க்கில் 161 நபர்கள் பிளேக் தொற்றுக்கு ஆளானார்கள். அதில் இந்தியர்கள் மட்டுமே 71%. 113 பேர் நிமோனிக் பிளேக்கால் பாதிக்கப்பட்டனர். அதில் 111 பேர் இறந்துள்ளனர். பிழைத்த இருவரும் இந்தியர்கள். அவ்விருவருக்கும் காந்தி மண் சிகிச்சை அளித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட இந்தியர்களை உற்சாகப்படுத்த காந்தி கிளிப்ஸ்ப்ரூட் முகாமுக்கு தினமும் ஜோஹன்னஸ்பர்கிலிருந்து சைக்கிள் மூலமாக 20 கி.மீ. சென்றுள்ளார். நகர சபையானது இந்தியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தினாலும், உரிமைப் போராட்டங்களுக்கு மத்தியில் காந்தி இந்தியர்களை எச்சரிக்கவும் தவறவில்லை. 4 ஜூன் 1903-ல் தமிழ், ஆங்கிலம், குஜராத்தி, இந்தி என நான்கு மொழியில் ஆரம்பிக்கப்பட்ட ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் தொடர்ச்சியாக பிளேக் குறித்து விழிப்புணர்வுக் கட்டுரைகளை காந்தி எழுதினார். பிளேக் போன்ற பெருந்தொற்றுக் காலங்களில் பாமர மக்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையே ஒரு பாலமாக – மற்ற செய்திதாள்களுக்கு முன்னுதாரணமாக ‘இந்தியன் ஒப்பீனியன்’ திகழ்ந்தது.

பிளேக் வெடித்த பின், நகரின் பிற பகுதிகளில் பரவாமல் இருக்க போர்க் கால நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்தது. காந்தி பலமுறை கமிஷன் முன்பு புகார் அளித்தபோது அலட்சியமாக இருந்த நிர்வாகம், அங்குள்ள ஐரோப்பியர்கள் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்று பம்பரமாய்ச் சுழன்றது. காந்தி அப்போதும் அவர்களது பணியை முழு மனதுடன் பாராட்டியதோடு, அவர்களுடன் இணைந்து பணியாற்ற இந்திய இளைஞர்களை ஆயத்தம் செய்து பெருந்தொற்றிலிருந்து ஜோஹன்னஸ்பர்க் நகரைக் காப்பாற்றியதில் முன்னின்று செயல்பட்டார். உண்மையில், அவர் தனது கருத்தியல்ரீதியான எதிர்த் தரப்புக்கும் நன்மையே செய்தார்.

– ஆர்.வெற்றிகார்த்திக், காந்திய ஆய்வாளர். தொடர்புக்கு: vetrickarthick.r@gmail.com

Gandhi in pandemicபெருந்தொற்றுக் காலத்தில் காந்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x