Published : 12 Aug 2015 10:15 AM
Last Updated : 12 Aug 2015 10:15 AM

இடஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா?

க. பாலு- பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்

ஒவ்வொரு சமூகத்துக்கும் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு உரிமை உள்ளது. அதற்காக சாதி அமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. அரசியல் லாபத்துக்காக சாதிகள் பயன்படுத்து கின்றன. சமூக முன்னேற்றத்துக்காக ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. ஒரு சமூகத்தினரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பொருளாதாரம், கல்வி நிலையை அரசு தெரிவிக்க முன்வருவதில்லை. அப்படித் தெரிவித் தால், பின்தங்கியுள்ள சமூகம்பற்றித் தெரியும். தமிழகத்தில் சமூகம், கல்வி, பொருளாதாரரீதியில் வன்னியர் சமூகம் பின்தங்கியுள்ளது. அமித் ஷா சாதியோடு வாழ்வதும், சாதியச் சிந்தனை களோடு வாழ்வதும் சமூக முன்னேற்றத் துக்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுதான் உண்மை.

தொல்.திருமாவளவன்- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

சாதி ஒழிக என்பது அம்பேத்கர் கருத்து. இந்துத்துவவாதியான அமித் ஷா வெளிப்படையாக சாதி வாழ்க, சாதிகளைக் கட்டிக்காக்க வேண்டும் என்று சொல்கிறார். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. சாதியை வைத்து அவர்கள் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். வடமாநிலங்களில், ஆதிக்கம் செலுத்தும் சாதியினரே இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடத்துகிறார்கள். இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தைத் தானே இது காட்டுகிறது? தேவேந்திரகுல வேளாளர்களுக்கான இடஒதுக்கீடு வேண்டாம் என்றும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து எடுத்துவிடுங்கள் என்றும் அந்த சாதியைச் சேர்ந்த ஒரு சிலர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது பெரும்பான்மை தேவேந்திரகுல வேளாளர்களின் கருத்தா? அமித் ஷாவின் பேச்சு மதவாத சக்திகளால் தமிழகத்துக்கு ஆபத்து வந்துள்ளது என்பதையே உணர்த்துகிறது.

ஈ.ஆர்.ஈஸ்வரன்- கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர்

அமித் ஷா ஒரு நேர்மையான அரசியல்வாதி. தமிழக அரசியல் தலைவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள். சாதி இயற்கையாக உருவானது. சாதியை யாரும் அழிக்க முடியாது. சாதியற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்பது தேவையற்றது. அமித் ஷா மற்ற தலைவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அவரைப் போல, ஏனைய தலைவர்களும் அனைத்துச் சாதி அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் 10% பேர் மட்டுமே முன்னேறி உள்ளனர். அதனால் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

ந.சேதுராமன்- அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர்

பாஜக நியாயமான அரசியல் செய்கிறது. அமித் ஷாவின் கருத்தை வரவேற்கிறேன். சாதி மற்றும் இடஒதுக்கீட்டின் மூலமே உண்மையான சமூக நீதி கிடைக்கும். சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் முறையான இடஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் அனைத்துச் சாதியினரும் சரியான அளவில் முன்னேற முடியும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

ஜான்பாண்டியன்- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்

இந்த மாநாட்டை நடத்திய வருக்கும், ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேவேந்திரகுல வேளாளர் களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எடுக்க வேண்டும் என்பது மாநாடு நடத்தியவரின் தனிப்பட்ட கருத்து. தேவேந்திரகுல வேளாளர்களின் ஒட்டுமொத்தக் கருத்து அல்ல. அமித் ஷாவின் பேச்சால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. எங்கள் மக்களுக்குச் சம அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீட்டுச் சலுகைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். நாட்டில் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.

- தொகுப்பு: சி.கண்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x