Published : 24 Aug 2015 08:31 AM
Last Updated : 24 Aug 2015 08:31 AM

அனைத்து மொழிகளும் ஆட்சிமொழிகளாவது சாத்தியமே!- பி.ஏ. கிருஷ்ணனின் கட்டுரைக்கு எதிர்வினை

பி.ஏ. கிருஷ்ணனின் ‘இந்தியும் இந்தியாவும்’ கட்டுரை, சமீபகாலமாக இந்தியாவில் மொழி உரிமைப் போராளிகள் முன்வைக்கும் கருத்துகள் / செயல்பாடுகளை முழுமையாகப் பூசி மறைக்கிறது. இந்தி எதிர்ப்புப் புயல் இப்போது தமிழ்நாட்டில் மட்டும் மையம்கொண்டிருக்கவில்லை. அது எப்போதோ கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள் என இந்தி பேசாத மாநிலங்களெங்கும் பரவியிருக்கிறது. கடந்த சுதந்திர தினத்தன்று ட்விட்டரில் நடந்த #StopHindiImposition பரப்புரை ட்விட்டர் டிரென்டிங்கில் இந்தியாவின் முதல் 10 இடங்களில் வரமுடிந்தது என்றால், அது இந்தியா முழுக்கவும் பரவியிருப்பதால்தான்.

அந்த ட்விட்டர் பரப்புரையைத் தொடங்கிய பலர், சில ஆண்டுகளாக இந்தியாவில் ஜனநாயகரீதியிலான மொழிக்கொள்கைக்காக சமூக ஊடகங்களுக்கு உள்ளும் புறமும் போராடியும் பரப்புரை செய்தும் வருபவர்கள். இவர் களில் யாரும் மொழி வெறியர்கள் அல்லர். தங்களுடைய சொந்த நகரமான பெங்களூரிலும் மும்பையிலும் கொல் கத்தாவிலும் கன்னடத்தையும் மராத்தியையும் வங்கத்தையும் விரட்டிவிட்டு, இந்தி வந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனவர்கள் இவர்கள். 20-30 வயசுக் காரர்கள். பன்னாட்டுத் தாய்மொழிகள் நாளில்கூட இந்தியில்தான் மற்ற மொழியினருக்கு வாழ்த்து சொல்வேன் என்று அடம்பிடிக்கும் இந்தி வெறி அரசுகள் இருக்கும்வரையில், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் இருக்கவே செய்யும். 22 மொழிகளை ஆட்சிமொழியாக்குவது என்கிற கருத்தை கிருஷ்ணன் எள்ளி நகையாடியிருக்கிறார். அது அசாத்தியம் என்கிறார். அவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதில் குழப்பம் இருக்கிறது. அரசியல் சாசனத்தின் எட்டாம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள 22 மொழிகளை மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறும்போது அதற்கு என்ன அர்த்தம்?

இதில் என்ன சிக்கல்?

இந்தியாவின் மத்திய அரசு, மாநில அரசுகள், பொது அமைப்புகள், தனியார் துறைகளில் ஆங்கிலத்தை அல்லது இந்தியைப் பயன்படுத்தக் கூடாது என்று அதற்கு அர்த்தமல்ல. மாறாக, மத்திய அரசும் பொது அமைப்புகளும் ஒவ்வொரு மாநிலத்திலும் அல்லது மொழிச் சமூகத்தினரிடமும் அவரவர் மொழிகளில் தொடர்புகொள்ள வேண்டும் என்பதே அதற்கு அர்த்தம். மத்திய அரசு நிறுவனங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டில் தமிழுக்கும், அதேபோல கர்நாடகத்தில் கன்னடத்துக்கும் பஞ்சாபில் பஞ்சாபிக்கும் அதிகாரபூர்வமான உரிமை இருக்க வேண்டும் என்றுதான் அதற்குப் பொருள். இதில் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது? ஏனென்றால், ஜனநாயக உரிமை, கலாச்சார உரிமை, தகவல் உரிமை, வேலை உரிமை, நுகர்வோர் உரிமை எனப் பல உரிமைகள் சேர்ந்ததுதான் மொழி உரிமை.

ஏன் கிஸான் புஸான்?

பாஜகவோ, காங்கிரஸோ தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மொழியைப் பயன்படுத்த முடியும் என்றால், அவர்களால் அதை நிர்வாகத்தில் மட்டும் கொண்டுவர முடியாதா? வருமான வரித்துறை, வரி கேட்டு மிரட்டும் விளம்பரங்களை மட்டும் மாநில மொழிகளில் வெளியிடும்போது, வேலை விளம்பரங்களை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் வெளியிட வேண்டுமா? கூகுளில் தமிழ் இடைமுகம் இருக்கும்போது, மத்திய அரசின் வேளாண் துறை இணையதளத்தில் தமிழ் இருக்க முடியாதா? தனியார் நிறுவனங்கள் பன்மொழி அழைப்பகங்களை (கால் சென்டர்கள்) நடத்தி சேவை அளிக்கும்போது, மத்திய அரசிடம் நாங்கள் ஏன் தமிழில் சேவை கேட்கக் கூடாது? தமிழ்ப் பயனர்கள் விரும்புகிறார்கள் என்பதால், ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய ஃபேஸ்புக் எனும் ‘பிராண்டு’ பெயரையே முகநூல் என்று மாற்றி ஏற்றுக்கொள்ளும்போது, எங்கள் ஏழை விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டம் மட்டும் ஏன் கிஸான் புஸான் என்று இருக்க வேண்டும் என்று கேட்பது அநியாயமா?

ஆக, தமிழ்நாட்டில் தமிழ், பஞ்சாபில் பஞ்சாபி, குஜராத்தில்... இதுதான் எங்கள் கோரிக்கை. நான் எனது அரசிடம் என் மொழியில் பேச வேண்டும், எனது அரசு என்னிடம் என் மொழியில் பேச வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை. இது உலகெங்கும் சர்வாதிகார நாடுகளைத் தவிர, மீதி எல்லா நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை. 1996 பன்னாட்டு மொழி உரிமை பறைசாற்றம்கூட இதனையே கூறுகிறது. இதை ஐ.நா. சபையும் வழிமொழிகிறது.

இந்தியும் அதில் ஒன்று

மொழி சமத்துவம் பேசுகிறவர்கள் அதை ஏன் தங்கள் மாநிலங்களிலிருந்து தொடங்கக் கூடாது என்று கேள்வி கேட்கிறார் கிருஷ்ணன். மொழி உரிமை அனைவருக்குமானது. தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகளுக்கும் கேரளத்தில் உள்ள தமிழர்களுக்கும் மொழி உரிமை வேண்டும். தமிழ்நாட்டில் இருளர்களுக்கும் படகர்களுக்கும் மொழி உரிமை வேண்டும் என்பதை மொழியுரிமையாளர்கள் மறப்பதில்லை. ‘இந்தி மாநில’ங்களில் உள்ள போஜ்புரிக்கும் மைதிலிக்கும் ராஜஸ்தானிக்கும்கூட நாங்கள் போராடுகிறோம். அரசியல் சாசனத்தின் எட்டாம் பிரிவில் இடம்பெறுவதற்காகப் போராடிவரும் மேலும் 35 மொழிகளுக்காகவும் நாங்கள் போராடுகிறோம். சொல்லப்போனால், எதிர்காலத்தில் நாங்கள் 100 மொழிகள் இந்தியாவின் ஆட்சிமொழியாக வேண்டும் என்று போராடும் காலம்கூட வரலாம். இந்தியும் அதில் ஒன்று. அது ஒரு ஆட்சிமொழியாக நீடிப்பதை எங்கள் இனமானம் தடுக்கவில்லை. எங்கள் பசிக்குச் சோறு போடுங்கள் என்றுதான் சொல்கிறோம். “22 மொழிகளும் ஆட்சிமொழியானால் யார் என்ன சொல்வார்கள் என்பது தெரியாமலேயே போய்விடும்” என்கிற கிருஷ்ணனின் வாதம் எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியது அல்ல. எல்லா நாடுகளிலும் ஜனநாயகம் நிலவ வேண்டும் என்று நான் விரும்பினால், எனக்கு 200 சொச்சம் நாடுகளிலும் வாக்குரிமை வேண்டும் என்று நான் கேட்கிறேன் என்று அர்த்தமா? இந்தக் கோரிக்கைகளைப் பேசுபவர்கள், சமூக வலைதளங்களில் மட்டும் உரையாடவில்லை; வீதிகளிலும் நீதிமன்றங்களிலும், தத்தம் மாநிலக் கட்சிகளிடமும் அரசுகளிடமும்கூடப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சென்னையில், செப்டம்பர் 19-20-ல் நடைபெறவுள்ள மொழி உரிமை மாநாட்டில் பங்கேற்க கிருஷ்ணன் வந்தால், பல்வேறு மாநிலப் போராளிகளின் முழு வீச்சையும் அவர் புரிந்துகொள்ள முடியும்.

“22 மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற, இந்திய அரசியல்சாசனத்தின் 17-ம் பிரிவை முழுமையாக மாற்றுவதற்கான சட்டத்திருத்தமே தேவை” என்கிறார்.

மொழி உரிமையை மறுப்பவர்களின் கடைசி ஆயுதம் பிரிவினைப் பூச்சாண்டி. கடந்த ஜனவரி 25-ல் சென்னை மெரினா கடற்கரையில், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் நடத்திய ஊர்வலத்தில் ஒரு தட்டியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: தமிழ் இஸ் ஓல்டர் தன் இந்தியா (Tamil is older than India). இங்கே தமிழ் என்ற சொல்லை எடுத்துவிட்டு வங்காளி, மலையாளம், ஒரியா, மைதிலி என்று எந்த வார்த்தையை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். இது பிரிவினைவாதம் அல்ல. இந்தியா எந்தெந்த பாகங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதோ அவற்றின் பிரதிநிதித்துவக் குரல் அது. கேட்பவர்கள் இந்தியாவில் மூன்றில் இரு பங்குக்கும் மேற்பட்ட மக்கள்தொகையை உடைய மொழிகளின் பிரதிநிதிகள். நவீன இந்தியா எனும் ஒன்றியத்தின் பலம் அதன் பிரதிநிதிகளின் பலத்தில்தான் இருக்கிறது!

- ஆழி செந்தில்நாதன், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், இதழாளர், தொழில்முனைவோர், தொடர்புக்கு: zsenthil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x