Published : 15 Apr 2020 08:08 am

Updated : 15 Apr 2020 08:08 am

 

Published : 15 Apr 2020 08:08 AM
Last Updated : 15 Apr 2020 08:08 AM

கரோனா காலத்துக் கேள்விகளும் 24x7 கட்டுப்பாட்டு அறைச் சேவைகளும்

covid-19-virus-care

கரோனா காலத்தில் மக்களிடம் எழுந்திருக்கும் அச்ச உணர்வும் சந்தேகங்களும் கணக்கற்றவை. அவர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும் வழிகாட்டவும் ஆற்றுப்படுத்தவும் அர்ப்பணிப்புடன் ஒரு மருத்துவக் குழு இயங்கிவருகிறது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில், சென்னையில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. 38 மருத்துவர்கள், 40 மடிக்கணினிகள், 40-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளுடன் பரபரப்பாகச் செயலாற்றிவருகிறது. களவீரர்களுடன் பேசினேன்.

கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்வதற்கான எண்களைச் சொல்லுங்கள்?


சுபாஷ் காந்தி: 044–29510400, 044–29510500, 044–24300300, 044–46274446, 9444340496, 8754448477 ஆகிய எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம். 1800 120 555550 எனும் கட்டணமில்லா எண்ணிலும் பேசலாம். 9035766766 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் கேள்விகளை அனுப்பலாம். இதுதவிர, காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்காக சைகைகள் மூலம் விளக்கமளிக்க வீடியோ அழைப்புகளைப் பயன்படுத்துகிறோம்.

எந்த மாதிரியான கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள்?

நா.பூபேஷ்: கரோனா அறிகுறிகள் குறித்து நிறைய கேள்விகள் வருகின்றன. பரிசோதனையை எங்கு மேற்கொள்ளலாம், எந்த மருத்துவமனையை அணுகலாம் என்று கேட்பார்கள்.

எந்த விதத்தில் வழிகாட்டுகிறீர்கள்?

மு.சுவேதா: அறிகுறிகளைப் பொறுத்துதான். தேவைப்பட்டால் அவசர சிகிச்சை ஊர்தி அனுப்ப ஏற்பாடு செய்வோம். இதற்காக, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) அணிந்த சுகாதாரப் பணியாளர்கள் எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள். மருத்துவமனைகள் தொடர்பான வழிகாட்டுதல்களும் செய்கிறோம்.

பொதுவான மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு என்னென்ன உதவிகளைச் செய்கிறீர்கள்?

சுதாகர்: கர்ப்பிணிகளுக்கு அவசர சிகிச்சை ஊர்தி ஏற்பாடு செய்கிறோம். குழந்தைகளின் தடுப்பூசிக்காக அழைத்தால் அந்தந்தப் பகுதிகளின் மாவட்ட மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையம் வரை ஒருங்கிணைக்கிறோம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான மாத்திரைகள், இன்சுலின் கிடைக்கச் செய்கிறோம். அரியலூரில் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாத்திரைகள் தேவைப்பட்டன. வீட்டுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்தோம். தேவைப்படும் இடங்களுக்கு, நடமாடும் மருத்துவமனைகளை அனுப்புவோம். முக்கியமான விஷயம், இது கால் சென்டர் அல்ல; கட்டுப்பாட்டு மையம். எனவே, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவிகள் சென்றுசேர்கின்றனவா என்பதை உறுதிசெய்கிறோம்.

மருத்துவ உதவிகள் தாண்டி வேறு என்னென்ன தேவைகளுக்காக மக்கள் அழைக்கிறார்கள்?

து.நி.திலீபன்: உணவுக்காக அழைக்கிறார்கள். குறிப்பாக, வட மாநிலத் தொழிலாளர்கள். அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள் மூலம் அதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கிறோம். அம்மா உணவகப் பட்டியல்களைத் தயார் செய்திருக்கிறோம். சென்ற வாரம், கனடாவிலிருந்து வந்தவர் சென்னையில் சிக்கிக்கொண்டிருந்தார். அவர் எங்களைத் தொடர்புகொண்டதும் தூதரகம் மூலம் அவரை பெங்களூருவுக்கு அனுப்பிவைத்தோம்.

உளவியல்ரீதியான வழிகாட்டுதல்களை வழங்குகிறீர்களா?

மோ.பிரியங்கா: தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களில் பலரிடமிருந்து அழைப்புகள் வருகின்றன. இதற்காகவே உளவியல் நிபுணர்களும் இந்தக் குழுவில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களும் வார்டிலிருந்தே அழைத்துப் பேசுகிறார்கள்.

எப்படி இத்தனை பணிகளை ஒரே இடத்திலிருந்து ஒருங்கிணைக்கிறீர்கள்?

நந்தினி: ஓய்வுபெற்ற டீன்கள், மருத்துவர்கள் என்று பலரும் களமிறங்கியிருக்கிறார்கள். இந்திய மருத்துவ கவுன்சில் முதல் தேசிய பரவியல் நோய்த் தடுப்பு மையம் வரை எல்லாத் தரப்பிலிருந்தும் உதவிகள் கிடைக்கின்றன. வருவாய்த் துறை, காவல் துறை, சென்னை கார்ப்பரேஷன், எல்லா மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை, தன்னார்வலர்கள், பிஎஸ்என்எல் நிறுவனம், எல்காட், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்று பல துறைகள் துணைபுரிகின்றன. அந்தந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என்று உயரதிகாரிகளிடம் நேரடியாகப் பேச முடிகிறது. இதன் மூலம் எல்லாப் பணிகளையும் முறையாக ஒருங்கிணைக்க முடிகிறது. தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பு மிக வலிமையானது. மாவட்டம், தாலுகா, கிராமம் என எல்லா மட்டங்களிலும் சுகாதார அமைப்புகள் சிறப்பாக இயங்கிவருவது நமக்குப் பெரும் பலம்.

- வெ.சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in


24x7 கட்டுப்பாட்டு அறைCovid 19 virus careCoronavirus

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x