Published : 13 Aug 2015 08:58 AM
Last Updated : 13 Aug 2015 08:58 AM

சாப்பிடும்போது போன் எதற்கு?- கூகுளின் புது சி.இ.ஓ. சுந்தர் பிச்சை நேர்காணல்

கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி, சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. கூகுள் க்ரோம், கூகுள் டிரைவ், ஜி-மெயில் ஆப்ஸ், கூகுள் மேப்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பில் முக்கியப் பங்குவகித்த சுந்தர் பிச்சை கூகுளின் தலைமைப் பீடத்தில் உட்கார்ந்ததன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். “எப்போதுமே ஒரு தரப்பினருக்கு மட்டுமான தொழில்நுட்பத்தை உருவாக்குவதல்ல கூகுளின் வேலை. கடைக்கோடியில் வசிக்கும் கிராமத்துச் சிறுவனுக்கும் சரி, ஹார்வர்டு பேராசிரியருக்கும் சரி, ஒரே மாதிரிதான் கூகுள் தேடுபொறி வேலை செய்யும். இதைத்தான் கூகுள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சமநிலையைச் சாத்தியப்படுத்தும் சக்தியாகவே கூகுளை நான் பார்க்கிறேன்” என்கிறார். ஒட்டுமொத்த உலகமும் ஸ்மார்ட் போன் சூழ் உலகமாக மாறிவரும் சூழலில் - சுந்தர் பிச்சையின் யுகத்தில் கூகுளின் வணிக இலக்குகளிலும் ஸ்மார்ட் போன்களுக்கு முக்கிய இடம் உண்டு - தொழில்நுட்பம், மனித வாழ்க்கை இரண்டுக்கும் இடையேயான எல்லைகள் எது என்பதைப் பற்றி மிகுந்த சுவாரஸ்யமாகப் பேசுகிறார் சுந்தர் பிச்சை.

நாம் ஸ்மார்ட் போன் சூழ் வாழ்க்கையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோமா, அதாவது மொபைல் போன்களின் மோகம் பெருகியுள்ளனவா?

எனக்கு அப்படித் தோன்றவில்லை. நிச்சயமாக மனிதர்கள் வாழ்க்கையில் போன்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. அதனால், மக்கள் அதிக அளவில் பயனடைகிறார்கள். அதே போல இடைஞ்சலும் அதிகரித்துள்ளது. ஆனால், இது ஆரம்ப காலக்கட்டத்தின் பலவீனம்தான். மிஞ்சிமிஞ்சிப்போனால் கடந்த ஐந்து, ஆறு வருடங்களாகத்தானே மொபைல்போனைப் பயன்படுத்துகிறோம். சொல்லப்போனால், மக்கள் தினசரி ஆறு மணி நேரம்வரை தொலைக்காட்சி பார்க்கின்றனர். அந்த மோகம் போன்களின் பக்கம் திரும்பியுள்ளது, அவ்வளவே!

பயனாளரை மையப்படுத்திய சாதனங்கள் என நீங்கள் அடிக்கடி சொல்வதன் அர்த்தம் என்ன?

எதை உருவாக்கினாலும் அதன் இலக்கு பயனாளர் களின் சிக்கலுக்குத் தீர்வளித்து, வாழ்வை மேம்படுத்தி, மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்பதே. இன்னும் சரியாகச் சொல்வதானால், கணவன் அல்லது மனைவியின் அழைப்பையும் பிறருடைய அழைப்பையும் வேறுபடுத்திக் காட்டும் அளவுக்குத் தொழில்நுட்பம் நுணுக்கமாக வடிவமைக்கப்பட வேண்டும் என முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

போன் நமது வாழ்வை எளிமையாக்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும், இரவு உணவு சாப்பிடும்போதுகூட மின்னஞ்சலைப் பார்க்கும் பழக்கம்வந்துவிட்டதே… எந்நேரமும் போனில் மூழ்கிக்கிடப்பதை மாற்ற கூகுள் ஏதேனும் முயற்சித்துள்ளதா?

தொழில்நுட்பத்துக்குச் சிறிதும் தொடர்பற்ற கேள்வி இது. சாப்பிடும்போது எதற்காகக் குழந்தைகள் மொபைலைப் பயன்படுத்த வேண்டும், எனக்குப் புரியவில்லை. குழந்தைகள் வளர்ப்பில் உள்ள சிக்கல் இது.

நான் கேட்டது குழந்தைகளைப் பற்றி அல்ல… பெற்றோர்களைப் பற்றி?

பெற்றோர்களும் இரவு உணவின்போது தொலைக்காட்சி பார்க்கிறார்களே!

ஒரு சந்திப்பு நடைபெறும்போது எத்தனை நபர்கள் போன்களைத் துழாவுகிறார்கள் என்பதை வைத்துக் கூட்டம் நடத்துபவரின் முக்கியத்துவத்தைச் சொல்லிவிடலாம் என்பார்கள். கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரியான நீங்கள், கூட்டங்கள் நடத்தும்போது பங்கேற்பாளர்கள் போனைத் துழாவக் கண்டதுண்டா?

போன்கள் வரத்துக்கு முன்பு அமெரிக்கக் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் கூட்டங்களின்போது லேப்டாப்பைத் துழாவுவது வழக்கம். அப்படி முக்கியக் கூட்டங்களுக்கு இடையில் லேப்டாப்பும் கையுமாக இருப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். இது பயன்படுத்தும் விதத்தைப் பொருத்ததே. நான் பகல் நேரங்களில் மின்னஞ்சல் அனுப்பவே மாட்டேன். நான் சதாவதானியும் அல்ல. கூட்டத்தில் சுறுசுறுப்பாகக் கலந்துகொள்ளும் அதே வேளையில், மின்னஞ்சலும் அனுப்பும் திறமை எனக்குக் கிடையாது. ஆனால், சிலர் இரண்டையும் சாதுரியமாகக் கையாள்கிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நீங்கள் முதல் ஆண்ட்ராய்டு வாட்ச் அறிமுகப்படுத்தியபோது, ‘நீங்கள் இரவு உணவருந்தும்போதுகூட போனைப் பயன்படுத்தாமலேயே இந்த வாட்ச் மூலம் மின்னஞ்சல் பார்க்கலாம்’ என விளம்பரம் கொடுத்தீர்களே?

உங்களுக்குத் தேவைப்படும்போது தகவல்கள் கிடைக்கச் செய்வதுதான் என் நோக்கம்; இடைஞ்சல் தருவது அல்ல. உதாரணத்துக்கு, நீங்கள் வாகனம் ஓட்டும்போது போனைப் பயன்படுத்துவது அபாயகரமானது. அதற்காகத்தான் ஆண்ட்ராய்டு ஆட்டோ உருவாக்கினோம். இதன்மூலம் உங்கள் போனைத் தொடாமலேயே அழைப்புக்குப் பதிலளிக்கலாம். தேடும் தகவல்களைப் பெறலாம். இப்படி உங்களுக்குத் தேவையான பொருளைச் சரியான நேரத்தில் கொடுக்க நாங்கள் முயல்கிறோம். இன்றைய பயனாளர்களுக்குப் பல சுமைகள் உள்ளன. அந்தச் சுமைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

எல்லாவற்றுக்கும் தொழில்நுட்பத்தை மக்கள் சார்ந்திருக்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமா? பித்துப்பிடித்தார்போல எந்நேரமும் மக்கள் மின்னஞ்சலைத் திறந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். விருப்பப்பட்டுப் பார்ப்பது வேறு, அலுவலக உயர் அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்திருக்குமோ எனப் பதற்றத்தோடு பார்க்கும் காலம் வந்துவிட்டதே?

ஜி-மெயில் வழங்கும் ‘ப்ரயாரிட்டி இன்பாக்ஸ்’ஆப்ஷனைக் கிளிக் செய்வதன் மூலம் முக்கிய மின்னஞ்சல்களை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாமே! மோசமான பயன்பாடும் இருக்கத்தான் செய்கின்றன, மறுப்பதற் கில்லை. எதுவாக இருந்தாலும், மனிதர்களின் அறிவுத் திறன், விருப்பம், பயன்பாடு என அத்தனையும் மனதில்கொண்டுதான் தரத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

கூகுள் காலண்டர் போன்ற அம்சங்கள் இருப்பதால் யாரும், எதையும் நினைவில்வைக்க முயற்சிப்பதில்லை. இப்படி எதையும் பொருட்படுத்தாத மக்களை உருவாக்க நினைக்கிறீர்களா?

எவ்வளவு சிறப்பான சாதனமாக இருந்தாலும், சில வரை யறைகள் வேண்டும். என் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க ‘ஃபிட்னஸ் ஆப்ஸ்’ உதவ முடியாது. அதேநேரம், என் குழந்தையின் பிறந்த நாளை நான் மறக்க நேரிட்டால், என்னைப் பார்த்து அலற ஒரு போன் வேண்டும் என நான் நினைக்கிறேன்.

எதற்காக போனைக் கையில் எடுத்தோம் என்பதே தெரியாமல் போனைச் சட்டெனக் காதில் வைத்ததுண்டா?

பல முறை! தேவையே இன்றிப் பழக்கதோஷத்தில் போனை எடுப்பதுண்டு. காரணமே இல்லாமல் அதை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதும் உண்டு.

வீட்டைச் சுற்றிச் சுற்றி நடந்தபடி போன் பேசக் கூடாது என நான்முடிவெடுத்துள்ளேன். இதுபோல போன் பயன்படுத்தாத நேரம் என நீங்கள் திட்டமிட்டது உண்டா?

கூகுள் ஐ / ஒ தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு. தலைமை உரை நிகழ்த்துவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, எங்கள் குழுவினர் போன்களை எல்லாம் ஒரு கூடையில் போட்டுவிட்டு எல்லோரும் மகிழ்ச்சியாக இரவு உணவு சாப்பிட்டோம்.

பின்னணியில் கரைந்துபோகும் தொழில்நுட்பத்தைத் தயாரிக்கிறோம் என நீங்களும் கூகுள் துணை நிறுவனர் லாரி பேஜும் சொல்வதன் பொருள் என்ன?

தொழில்நுட்பத்தைப் பயனாளிகளிடம் கொண்டு சேர்ப்பதல்ல எங்கள் நோக்கம். அதை ஒரு அழகிய அனுபவமாக மாற்றுவதே! ‘க்ரோம்’ உருவாக்கியபோது கூடுமான வரை எந்தச் சிரமமும் இன்றிப் பயனாளிகள் லகுவாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தச் செயல்பட்டோம்.

நீங்கள் தேடும் தகவலைச் சரியாகக் கொண்டுவந்துசேர்க்க ‘கூகுள் சர்ச்’ மிகக்கடினமான தொழில்நுட்பத்தைப் பிரயோகிக் கிறது. ஆனால், உங்களுக்குத் தேவை தகவல் மட்டுமே. ஆகையால், கரடு முரடான தொழில்நுட்பம் பின்னணியில் மறைந்துபோகத்தான் விரும்புவீர்கள்.

ஆனால், சில நேரங்களில் அனுபவமே இல்லாமல் போகும் நிலை உண்டாகின்றனவே?

ஒரு நல்ல சாதனத்தை உருவாக்கும்போது இப்படி நிகழத்தான் செய்யும். ஏற்கெனவே சொன்ன மாதிரி, என் வாழ்வின் முக்கியத் தருணத்தை நான் இழக்க நேரிடும் போது என் போன் என்னைப் பார்த்து அலற வேண்டும் என நான் நினைப்பேன். ஒரு வேளை, நான் முக்கிய வேலையில் ஈடுபட்டிருக்கும்போது போனில் வேறு தகவல் வந்தால் புறக்கணிப்பேன், அவ்வளவுதான்! என்னைப் பொறுத்தவரை பயனாளர்களின் தேவையைச் சரியாகப் பூர்த்திசெய்ய வேண்டும். அது ஒரு தொடர் முயற்சி. அந்தப் பயணத்தில் நாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பம் வழிமறிக்காமல் கண் காணாமல் மறைந்துபோவதும் அவசியமாகிறது.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x