Published : 05 Mar 2020 08:23 AM
Last Updated : 05 Mar 2020 08:23 AM

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் உயருமா?

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் உயருமா?

பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகள் வரைக்கும் ஊட்டச் சத்துள்ள உணவு, சுகாதாரக் கல்வி, விளையாட்டுப் பயிற்சி ஆகியவை அங்கன்வாடி மையங்களில் அளிக்கப்படுகின்றன. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த மையங்களால் 15.80 கோடி குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறுகின்றனர். தேசிய அளவில் 13.6 லட்சம் அங்கன்வாடிப் பணியாளர்கள் வேலைசெய்கின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளுக்கான செலவை மத்திய, மாநில அரசுகள் 90:10 என்ற விகிதத்தில் செலவைப் பகிர்ந்துகொண்டன. இப்போது மத்திய அரசு இதை 60:40 என்ற விகிதத்தில் குறைத்துவிட்டது. இந்நிலையில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு கர்நாடக அரசு மாதந்தோறும் ரூ.10,000 ஊதியம் வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. தற்போது அங்கு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் ரூ.8,000, உதவியாளர்களுக்கு ரூ.4,000 கௌரவ ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை உயர்த்தித் தர வேண்டும் என்று அவர்கள் நீண்ட காலமாகக் கோரிவருகின்றனர். ஆனால், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.4,500 உதவியாளர்களுக்கு ரூ.2,250 வழங்கலாம் என்கிறது மத்திய அரசு. திட்டச் செலவில் மத்திய அரசின் பங்களிப்பு குறைந்துள்ளதால் ஊதியம் வழங்கும் நிதிச் சுமை மாநிலங்கள் மீது ஏற்றப்படுகிறது.

8,000 வகை மூலிகைகள் நாடு

மூலிகைகளுக்கான சந்தை மதிப்பு 2050-ல் ரூ.350 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. வளரும் நாடுகள் பலவற்றில் 70% முதல் 95% வரையிலான மக்கள், மருந்துக்குப் பெரும்பாலும் மூலிகைகளையே நம்பியிருக்கின்றனர். உலகம் முழுக்க 70,000 மூலிகைத் தாவரங்கள் பயன்படுத்தப்படுவதை 2006-ல் ஆய்வுசெய்து பதிவுசெய்துள்ளனர். இந்தியாவில் 8,000 வகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன. 13 மாநிலங்களில் மொத்தம் 10,935 ஹெக்டேர்களில் மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவது, வனங்களில் காணப்படும் வறட்சி, திடீர் தீ ஆகியவற்றுடன் உலகளாவிய பருவநிலை மாறுதல்களாலும் ஏராளமான மூலிகைகள் அழியக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கிராமங்களுக்கு அருகிலும் மலையடிவாரங்களிலும் கிடைத்துக்கொண்டிருந்த பல தாவரங்கள் இப்போது காடுகளில் கண்காணாத இடங்களிலும் மலை உச்சிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. மருந்து தயாரிப்பதற்கு மட்டுமல்ல; பிராணிகள், விலங்கினங்கள், பறவைகள், ஊர்வனவற்றுக்கும் சுற்றுச்சூழலின் சமநிலைக்கும் மூலிகைச் செடிகள் அவசியம். உயிரி பன்மைத்துவ அழிவும், பாரம்பரிய மருத்துவம் அறிந்த தலைமுறையின் மறைவும் மூலிகைச் செடிகளின் இருப்பை ஆபத்துக்கு உள்ளாக்கிவருகின்றன.

டிஜிட்டல் பேமென்ட்: இரண்டாம் இடத்தில் சென்னை!

மளிகைக்கடை, உணவகங்கள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் என்று எல்லா இடங்களிலுமே ‘டிஜிட்டல் பேமென்ட்’ பரவலாகிவிட்டது. சென்னையைப் பொறுத்தவரையில், சரக்கு மற்றும் சேவைகளைப் பெறுவதற்காக டிஜிட்டலில் பணம் செலுத்துவதில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருப்பது பெங்களூரு. சென்னையைக் காட்டிலும் மும்பை, டெல்லி, கொல்கொத்தா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் குறைவாகவே மின்வழி செலுத்துகைகள் நடக்கின்றன. தமிழ்நாட்டின் மற்றொரு மாநகரமான கோயம்புத்தூர், இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அதைப் போல இந்த முறையை அதிகமாகப் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதலிரண்டு இடங்களில் மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x