Published : 24 Aug 2015 09:00 AM
Last Updated : 24 Aug 2015 09:00 AM

மெல்லத் தமிழன் இனி 2 - சர்க்கரை ஆலைகளைத் தூக்கி நிறுத்தும் மதுவிலக்கு!

அரசின் செலவுகளைக் குறைப்பது, மானியங்கள், இலவசங்களைக் கட்டுப்படுத்துவது, வரிவிதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வது ஆகிய மாற்று உத்திகளைப் பார்த்தோம். அதுபோல அரசின் பிற துறைகளில் மேற்கொள்ள வேண்டிய வரிசீர்திருத்தங்கள், தொழில் வளர்ச்சி, புதிய முதலீடுகள் உள்ளிட்ட மாற்று உத்திகளை வரும் நாட்களில் விரிவாகப் பார்ப்போம். வேறு சில புதிய பரிமாணங்களில் மதுவிலக்கை அணுகுவது ஆக்கபூர்வமாக அமையும்.

மதுவிலக்கு கொண்டுவந்தால் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சர்க்கரை ஆலைகள் மீண்டும் லாபத்தில் இயங்கத் தொடங்கும். கரும்பு விவசாயிகள் ஏற்றம் பெறுவார்கள். கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும். கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் குறையும்.

காற்றில் மாசு அளவு குறையும். சுற்றுச்சூழல் மேம்படும். அந்நியச் செலாவணி இருப்பு அதிகரிக்கும். இது எப்படிச் சாத்தியம் என்று கேட்கலாம். அரசு மனது வைத்தால் அத்தனையும் முடியும். முதலில் மதுவிலக்குடன் தொடர்புடைய சர்க்கரை ஆலைகள் பிரச்சினையைப் பார்ப்போம்.

இந்தியாவின் சர்க்கரைத் தேவையைவிட சர்க்கரை உற்பத்தி மிகையாக உள்ளது. தேவையைவிட உற்பத்தி அதிகமாக இருப்பதால் சர்க்கரை விலை சரிந்துவிட்டது. உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. உள்நாட்டில் நிலைமை இவ்வளவு சிக்கலாக இருக்கும்போதே, இங்கிருக்கும் குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லெட், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் பிரேசிலிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்தன. காரணம், நம் சந்தை விலையைவிட இறக்குமதி சர்க்கரையின் விலை சுமார் 15% குறைவு. இதுவும் சர்க்கரை ஆலைகளின் தலையில் இடியாக இறங்கியது (நல்ல வேளையாக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு சர்க்கரைக்கு 40% இறக்குமதி வரி விதித்து ஆலைகளை ஓரளவு காப்பாற்றியது).

கிட்டத்தட்ட தமிழகத்திலும் நிலைமை இதுதான். இங்கே 13 கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை ஆலைகள், 27 தனியார் ஆலைகள் இருக்கின்றன. 5.5 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 15 லட்சம் டன் சர்க்கரை உற்பத்திசெய்யப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு டன் கரும்புக்கு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலை ரூ.2,200. இந்த விலை முன்பு சட்டரீதியான குறைந்தபட்ச விலை என்றழைக்கப்பட்டது. தற்போது இது நியாயமான மற்றும் லாபகரமான விலை என்றழைக்கப்படுகிறது. இதன்படி கட்டாயமாகக் குறைந்தபட்ச விலையாக இதனை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். இதுதவிர, தமிழக அரசின் மாநில பரிந்துரை கமிட்டி நிர்ணயித்துள்ள விலையான ஒரு டன்னுக்கு ரூ.450-ம் சேர்த்து மொத்தம் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,650-யை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.

ஆனால், மிகை உற்பத்தி, அதைத் தொடர்ந்த சர்க்கரை விலைச் சரிவு காரணமாக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.20,000 கோடியைக் கொடுக்க இயலாமல் தவிக்கின்றன. ஆலைகள், விவசாயிகள் என இருதரப்பினருமே நெருக்கடியில் இருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில், தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு உள்ள முக்கியமான ஆதாரங்களில் ஒன்று மது. ஏனென்றால், தமிழகத்தில் கரும்பு ஆலைகளின் சர்க்கரைக் கழிவான மொலாசஸிலிருந்தே மது உற்பத்தி நடக்கிறது. இந்த மொலாசஸிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆல்கஹால் மூலம் கரும்பு ஆலைகளுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கிறது. இந்த நிலையில், மதுவிலக்கு கொண்டுவந்தால் கரும்பு ஆலைகளின் நிலை என்னவாகும் என்ற கேள்வி அர்த்தமற்றது அல்ல. ஆனால், பயப்படத் தேவையில்லை. சாராய ஆலைகளின் தயவு இல்லாமலேயே சர்க்கரையின் விலையை நிமிரச் செய்ய உத்திகள் இருக்கின்றன.

அந்தத் தீர்வுகள் என்ன?

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

தெளிவோம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x