Published : 21 Jan 2020 08:16 AM
Last Updated : 21 Jan 2020 08:16 AM

வாசிப்புக்காக நம் அன்றாடத்தை எப்படி வகுத்துக்கொள்வது?

இளங்கோ கிருஷ்ணன்

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்று: “எப்படி இத்தனை புத்தகங்களைப் படிக்கிறீர்கள்?” நேரம் இல்லை என்பது நாம் சொல்லும் ஒரு சாக்குதான். உண்மையில், நேரத்தை நாம்தான் உருவாக்க வேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மெதுவாகப் படித்தாலும் ஒரு மணி நேரத்தில் முப்பது பக்கங்கள் படிக்கலாம். சில சூப்பர் ரீடிங் டெக்னிக்குகளைக் கற்றுக்கொண்டால், ஒரு மணி நேரத்தில் 60-80 பக்கங்கள் வரை வாசிக்கலாம். சிலர் ஒரு மணி நேரத்தில் சராசரியாக நூறு பக்கங்கள் வரை வாசிப்பார்கள். அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால், முயன்றால் ஒரு மணி நேரத்தில் 60-80 பக்கங்கள் வாசிக்க எல்லோராலும் முடியும். தினசரி மூன்று மணி நேரம் எனக் கணக்கிட்டால் நாள் ஒன்றுக்குச் சராசரியாக, 180-240 பக்கங்கள். இதில், 150 பக்கங்களாவது நடைமுறை சாத்தியம் என்றே சொல்வேன்.

வாங்கியவுடன் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். ஒரு நூலை வாங்கி பத்து நாட்களுக்குள் தொடவில்லை என்றாலோ, அதை எப்போது படிப்பது எனத் திட்டமிடவில்லை என்றாலோ அதை வாசிக்காமல்போவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, வாங்கியதும் வாசிக்க முயல வேண்டும். நான் பெரும்பாலும் வாங்கியதுமே வாசிக்க முயல்வேன். இல்லாவிடில், ஒரு திட்டமிட்ட நேரத்துக்குள் வாசித்துவிடுவேன்.

துறைவாரியாக, பகுப்புவாரியாக வாசிப்பது வாசிப்பைத் துரிதமாகவும் அதிகமாகவும் நிகழ்த்துவதற்கான ஒரு வழி. புரிதலுக்கும் இது உதவும். உதாரணமாக, ரஷ்ய இலக்கியங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ச்சியாக வாசிக்கலாம். அறிவியல், மானுடவியல், வரலாறு தொடர்பான நூல்கள் என ஒவ்வொன்றையும் வரிசையாக ஒவ்வொரு காலகட்டத்திலும் வாசிக்கலாம். பெரிய நூல்களைக் காலையிலும் இரவிலும் வாசிப்பது நல்லது. ஆயிரம் பக்க நாவல் ஒன்றைத் தினசரி காலை காபியுடனோ, இரவு படுக்கைக்கு முன் ஒரு மணி நேரம் என்றோ வாசிக்கலாம். மதிய உணவு இடைவேளையில் ஒரு சிறுகதை அல்லது கவிதை என்று திட்டமிடுங்கள்.

சிக்கலான, புரியாத, கடும் நூல்களை விடுமுறை நாட்களில் வாசிக்க முற்படுவது அதன் சவாலை எதிர்கொள்ளச் சரியான வழி. வாசித்த பின் அதை நண்பர்களிடம் சொல்லிப் பார்ப்பது, அது பற்றி சிறு குறிப்புகள் எழுதுவது போன்றவை மேலும் புரிந்துகொள்ள உதவும். தொடர்ந்து அதை வாசிப்பதற்கான உற்சாகத்தையும் தரும். பழைய இலக்கியங்களை, பாடல்களை, செய்யுள்களைத் தினமும் ஒரு பாடல் என்று வாசிக்கலாம். தினமும் ஒரு அகப்பாடல் படிப்பது என் வழக்கம். அதிகாலை எழுந்து படிப்பதை விடவும் காலை நடையில் படித்ததை அசைபோடுவது நல்லது. ஆனால், எழுத்து சார்ந்து திட்டமிட்டிருக்கும் நூல்களை அதிகாலையில் எழுந்து படிப்பது, நீங்கள் எழுத நினைப்பதை விரைந்து எழுதி முடிக்க உதவும் என்பதையும் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

வாசிப்பு ஓர் ஒழுங்கா என்று கேட்டால் நிச்சயம் அது ஓர் ஒழுங்குதான். ஆனால், அது எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பாடு அல்ல; அதை ஒவ்வொருவரும் அவரவர்கேற்ப வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x