Published : 27 Dec 2019 08:18 am

Updated : 27 Dec 2019 08:18 am

 

Published : 27 Dec 2019 08:18 AM
Last Updated : 27 Dec 2019 08:18 AM

குழந்தையை சிசிடிவியால் வளர்க்க முடியுமா?

cctv-camera

நவீனா

பணிக்குச் செல்லும் பெண்களின் முன் நிற்கும் சவால்களில் மிகப் பெரியது குழந்தை வளர்ப்பு. பெரும்பாலும் கூட்டுக்குடும்பம் என்பதே வழக்கொழிந்துபோய்விட்ட நிலையில் தாத்தா, பாட்டி, பெற்றோர் என யாருடைய அரவணைப்பும் இல்லாமல் நிறைய குழந்தைகள் பணிப்பெண்களால்தான் வளர்க்கப்படுகிறார்கள். பணிப்பெண்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டால், வேலைக்குச் செல்லும் தாய், குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாட வேண்டிய நிலை உருவாகிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான தருணங்களில் குழந்தைகளைப் பணியில் இருந்தபடியே கண்காணிக்கவும், அவர்களோடு உரையாடவும் அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியைப் பெருநகரங்களில் வாழும் பல தாய்மார்கள் நாட ஆரம்பித்திருக்கின்றனர். ‘நண்பன்’ படத்தில் காணொலித் தொலைபேசி அழைப்பின் மூலம் பிரசவம் பார்ப்பதைப் போல, சிசிடிவி கேமரா மூலம் குழந்தை வளர்ப்பதே அந்தத் தொழில்நுட்பம். அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் தாயான ஆஷ்லி தனது எட்டு வயதுப் பெண் குழந்தை அலிசா வீட்டில் தனியாக இருக்கும்போது, அவளைக் கண்காணிப்பதற்காக ‘கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனை’ (Black Friday Sale) ஒன்றில் சிசிடிவி கேமராவையும் ஸ்பீக்கரையும் விலைக்கு வாங்கிப் பொருத்துகிறார். அதைப் பொருத்தும்போது குழந்தை இன்னும் பாதுகாப்பாக இருக்கும் எனத் தாயான அவர் நினைத்திருக்கக்கூடும். வீடுகளிலும் தெருக்களிலும் கடைகளிலும் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராவைப் பொருத்தும் எவரும் அதைப் பாதுகாப்பின் பொருட்டு பொருத்துவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இணையத்துடன் தொடர்பில் இருந்த அந்த ஒளிப்பதிவுக் கருவியை, பொருத்தப்பட்ட நான்கு நாட்களில், குழந்தைகளிடம் பாலியல் நாட்டம் கொண்ட ஒருவன் ஹேக் செய்து, திகில் படப் பாடலொன்றை ஒலிபரப்பியதோடு, அந்தக் குழந்தையிடம் தான் கிறிஸ்துமஸ் தாத்தா என்றும், தன்னுடைய தோழியாக அந்தக் குழந்தை இருக்க வேண்டும் என்றும் ஒலிப்பெருக்கி மூலம் பேசுகிறான். இதைக் கேட்ட குழந்தை வீறிட்டு அழுததும், மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்த தாயும் தனது அலுவகத்திலேயே அலறித் துடிக்கிறார். சிசிடிவி கேமராக்கள் மட்டுமல்லாமல் இணையத்துடன் தொடர்பில் இருக்கும் எந்தவொரு கேமராவையும் எளிதில் ஹேக் செய்துவிட முடியும் என்பதால், நாள் முழுவதும் கையில் வைத்திருக்கும் செல்போன் கேமராக்கள்கூட வேறு எவராலும் நமக்குத் தெரியாமலே இயக்கப்பட்டு, நம்மைப் படம் பிடிக்கக்கூடிய நிலை பெண்களுக்கு இன்னும் அபாயகரமானதுதான்.

இன்றைய இணைய தலைமுறை, எல்லா வேலைகளிலும் மனிதர்களுக்கு மாற்றாக இயந்திரங்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதை விரும்பித் தேர்ந்தெடுத்தாலும், குழந்தை வளர்ப்பில் அது எந்த வகையிலும் சரியான தேர்வாக அமைந்துவிட முடியாது. அதிலும் இருமடங்கு பாதுகாப்பாகப் பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கும் பாதுகாப்பற்ற சமூகச் சூழலில், அவர்களுக்கு இணையச் செயலிகள் மூலம் தாலாட்டுப் பாடி தூங்க வைத்துவிடலாம் எனத் தாய்மார்கள் நினைப்பது முற்றிலும் அபத்தமானது.

“அது வெறும் குரல்தான். ஒலிபெருக்கியில் உன்னுடன் பேசிய அந்த மனிதன் நேரில் வர முடியாது. அம்மா உன்னோடுதான் எப்போதும் இருக்கிறேன். பயப்படாதே. அவனால் உனக்கு எந்தத் தீங்கும் நேராது” என்கிறாள் அந்தத் தாய். “நான் சொல்வதை நம்பவைக்க முடியாத அளவுக்குப் பயத்தில் உறைந்துபோயிருக்கும் என் குழந்தையை நான் என்ன சொல்லித் தேற்றுவேன்?” என்று ஊடகங்களில் ஒலிக்கும் அலிசாவின் தாய் ஆஷ்லியின் குரலில் இருக்கும் ஆதங்கம் சிசிடிவி கேமராக்களால் எப்போதும் உணரப்படப்போவதில்லை.

- நவீனா, ‘லிலித்தும் ஆதாமும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writernaveena@gmail.com

CCTV cameraகுழந்தைசிசிடிவி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author