Published : 11 Nov 2019 06:57 am

Updated : 11 Nov 2019 06:57 am

 

Published : 11 Nov 2019 06:57 AM
Last Updated : 11 Nov 2019 06:57 AM

அயோத்தி: கடந்து வந்த பாதை

ayodhya

கே.வெங்கடரமணன், உமர் ரஷீத்

தீர்ப்பு வெளியாகிவிட்டது. அயோத்தியில் பாபர் மசூதி - ராம ஜன்மபூமி இடத்தில் கோயிலைக் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அனுமதி தந்துவிட்டது; உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் எழுபது ஆண்டு கால நெடிய வழக்கும் பல சம்பவங்களும் இருக்கின்றன. 1885-ல் மகந்த் ரகுவீர் தாஸ் என்பவர் மசூதி அருகில் கோயில் கட்ட அனுமதி கோரி ஃபைசாபாத் நீதிமன்றத்தை அணுகுகிறார். அவருடைய மனு நிராகரிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும் வழக்கு 1950-ல் மீண்டும் வேறு உருவில் உயிர் பெறுகிறது. கடைசியாக, மொத்த இடத்தில் 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு இப்போது முடிந்திருக்கிறது.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ல் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் வரை நடந்த வழக்குகள், ஏற்பட்ட பிரச்சினைகள், பிறகு நடந்தவை ஆகியவற்றை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம். ராம் லல்லா என்று அழைக்கப்படும் ஜன்மஸ்தானுக்கு உரிய கடவுள் ஒரு தரப்பாகவும், இடிக்கப்பட்ட மசூதிக்கு வெளியில் இருந்த வழிபாட்டிடத்தை இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து பராமரித்துவந்த நிர்மோகி அகடா இன்னொரு தரப்பாகவும், முஸ்லிம் தரப்புகள் மூன்றாவது தரப்பாகவும் வழக்கில் கருதப்பட்டு, அந்த இடம் ஒவ்வொரு தரப்புக்கும் மூன்றில் ஒரு பங்கு என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்தால் பிரித்துத் தரப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தர்க்கரீதியாக இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

பிரச்சினையின் மூலம் எது?

அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில்தான் முகலாயப் பேரரசர் பாபர் காலத்தில் மசூதி கட்டப்பட்டது என்பது இந்துக்களின் வாதம். ‘ராமர் பிறந்த இடம் அது என்பதால்தான் அங்கு கோயில் கட்டப்பட்டது. அந்தக் கோயிலை இடித்தவர்கள் அந்த இடத்துக்கு நேராக மசூதியின் நடுக் கோபுரம் வருமாறு கட்டிவிட்டார்கள். எனவே, அந்த இடத்தைத் தங்களுக்கு மீட்டுத்தர வேண்டும்’ என்று இந்துக்கள் தரப்பில் கோரப்பட்டது.

‘பாபரின் சேனைத் தலைவரான மீர் பக்கி 1528-ல் அந்த மசூதியைக் கட்டினார். பாபர் ஆட்சிக்காலத்தில் அவருடைய சேனாபதியால் கட்டப்பட்டதால் அதை பாபர் மசூதி என்று அழைக்கிறோம். அந்த இடம் வெறும் தரையில்தான் கட்டப்பட்டது. எந்தக் கட்டுமானத்தையும் இடித்துவிட்டு அதன் மீது மசூதியைக் கட்டவில்லை. எனவே, இந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தமானது’ என்பது முஸ்லிம்களின் வாதம்.

முதலில் நீதிமன்றம் சென்றது யார்?

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மகந்த் ரகுவர் தாஸ் என்பவர்தான் 1885-ல் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகினார். மசூதிக்கு வெளியே சபுத்ரா என்று அழைக்கப்படும் உயரமான மேடையில் 17 அடி அகலம், 21 அடி நீளத்துக்கு சிறிய கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரினார். ஃபைசாபாத் சார் நீதிபதி அவருடைய மனுவை நிராகரித்தார். மேல் முறையீட்டு மனுவை மாவட்ட நீதிபதியும் ஏற்கவில்லை. அதற்குப் பிறகு அது தொடர்பாக நீண்ட காலத்துக்கு யாரும் நீதிமன்றங்களுக்குச் செல்லவில்லை. அந்த இடம் தொடர்ந்து முஸ்லிம்கள் வசமே இருந்தது.

1949 டிசம்பர் 22 இரவு அடுத்த நாள் அதிகாலைக்குள் ஏராளமான இந்துக்கள் அந்த இடத்துக்குள் நுழைந்து, மசூதியின் நடுக்கோபுரத்துக்கு நேர் கீழே ராமருடைய விக்கிரகத்தை நிறுவிவிட்டனர். ஆறு நாட்களுக்குப் பிறகு நகர மாஜிஸ்திரேட், அந்த இடத்தை நிர்வகிக்கத் தனி அதிகாரியை நியமித்தார்.

1950 ஜனவரியில் கோபால் சிங் விஷாரத் என்ற உள்ளூர் பக்தர், ராமர் பிறந்த இடத்தில் வழிபட தனக்குள்ள உரிமையை வலியுறுத்தியதோடு, அந்த உரிமையில் மாவட்ட நிர்வாகமோ முஸ்லிம்களோ தலையிடக் கூடாது என்று தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த இடத்திலிருந்து வழிபாட்டுச் சிலைகளை அகற்றக் கூடாது என்று இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த உத்தரவு இன்று வரை மாற்றமின்றி நீடிக்கிறது. இதேபோன்ற வழக்கை ராமசந்திர பரமஹம்ஸ் என்பவர் 1950-ல் தொடுத்தார். 1990-ல் அந்த மனு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அயோத்தியைச் சேர்ந்த ‘ராமானந்த வைராகிகள்’ (பைராகிகள் என்றும் சொல்வதுண்டு) இறைத் தொண்டுக்காக ஏற்படுத்தியதுதான் நிர்மோகி அகடா. ராமரை வழிபடும் இடத்தை நிர்வகிக்க நியமித்துள்ள அதிகாரியை அரசு திரும்பப் பெற வேண்டும், அந்த வழிபாட்டிடத்தைத் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி 1959-ல் நிர்மோகி அகடா சார்பில் மூன்றாவது வழக்கு தொடரப்பட்டது.

1961 டிசம்பரில் முஸ்லிம்கள் மீண்டும் இந்த வழக்குக்குள் வருகின்றனர். 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடம் முஸ்லிம் வக்புக்கு (அறக்கட்டளை) சொந்தமாக இருக்கிறது. மசூதி மற்றும் அதன் அருகில் உள்ள கல்லறை ஆகியவற்றைத் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தர பிரதேச மத்திய சன்னி வக்பு வாரியம் மனு தாக்கல்செய்கிறது.

விசுவ இந்து பரிஷத் முன்னெடுத்து, பாரதிய ஜனதா ஆதரித்த ராம ஜன்மபூமி இயக்கம் 1980-களின் பிற்பகுதியில் வேகமெடுத்த பிறகு, வழிபடும் ராமரே நேரடியாக மனு தாக்கல்செய்வதாக ஐந்தாவது வழக்கு போடப்பட்டது. ஒருகட்டத்தில் மூலவரான ராம் லல்லா, ராமர் பிறந்த இடமான ஜன்மஸ்தான், இவ்விரண்டையும் வணங்கும் பக்தர்கள் என்று மூன்று தரப்புமே இந்த வழக்கில் வாதிகளாகினர்.

கடந்த கால நிகழ்வுகள்

மிகவும் ரகசியமாக வழிபாட்டு உருவங்கள் மசூதிக்குள் 1949-ல் கொண்டுவந்து வைக்கப்பட்டதற்குப் பிறகு இந்த வழக்கு நிலை மாறியது. அதைப் போல பிறகும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. 1986 பிப்ரவரி 1-ல் ராமர் கோயிலின் பூட்டுகளைத் திறந்து இந்துக்கள் வந்து வழிபட அனுமதிக்குமாறு உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமர் கோயில் இயக்கத்துக்கே இதுதான் மிகப் பெரிய உந்துவிசையாக அமைந்தது. அதற்குப் பிறகு விசுவ இந்து பரிஷத்தும் பாஜகவும் நாடெங்கிலும் இந்துக்களை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அணிசேர்க்கத் தொடங்கின.

பிறகு, கோயிலை நோக்கி ஊர்வலமாகச் செல்ல தேதியும் குறித்தன. கோயிலைக் கட்டுவதற்கு வரும் கர சேவகர்களை வரவேற்க ஆங்காங்கே உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. கோயில் கட்டுவதற்கு அனைவரும் அவரவர் ஊர்களிலிருந்து ராம் என்று எழுதப்பட்ட செங்கல்களை பூஜைகளில் வைத்து தலைமேல் பக்தி சிரத்தையாக எடுத்துவரத் தொடங்கினர். இது வெறும் நிகழ்வாக இல்லாமல் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்பட்டது. அயோத்திக்குள் வெளியார் வராமலிருக்க காவல் துறை அமைத்த அரண்களும் தடுப்புகளும் கரசேவகர்களால் உடைத்து எறியப்பட்டன.

ஆயிரக்கணக்கான கரசேவகர்களைத் தடுக்க முடியாத காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் ஏராளமானோர் இறந்தனர், காயமடைந்தனர். 1990-ல் நடந்த இச்சம்பவத்துக்குப் பிறகு மத்தியில் வி.பி. சிங் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை பாரதிய ஜனதா விலக்கிக்கொண்டது.

அந்த அரசு கவிழ்ந்தது. இதற்கிடையே, ராம ஜன்மபூமி தொடர்பாகத் தாக்கல்செய்யப்படும் எல்லா மனுக்களையும் தன்னுடைய நீதிமன்றத்துக்கு மாற்றிக்கொண்ட அலாகாபாத் உயர் நீதிமன்றம், அந்த மனுக்களை விசாரிக்க மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வை நியமித்தது.

அத்வானி ரத யாத்திரை

அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தவும் மக்களிடையே ஆதரவு திரட்டவும் பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி குஜராத்தின் சோமநாதர் கோயிலிலிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழியாக அயோத்தி செல்ல ரத யாத்திரை நடத்தினார். ரத யாத்திரை சென்ற வழிகளில் மோதல்களும் வன்செயல்களும் நடந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் அயோத்தியில் திரண்டனர். அப்போது உத்தர பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையில் பாஜக அரசு ஆண்டது.

கரசேவகர்கள் தடுக்கப்படாமல் சர்ச்சைக்குரிய இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 1992 டிசம்பர் 6-ம் நாள் கரசேவகர்களால் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து உத்தர பிரதேச அரசு கலைக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கையகப்படுத்தப்படுவதாக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இனி இந்தப் பிரச்சினை தொடர்பாக வழக்கு விசாரணைகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பிறகு, அயோத்தி நிலம் கையகப்படுத்தல் சட்டம், 1993-ல் நிறைவேற்றப்பட்டது.

1994-ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பின் மூலம் அயோத்தி வழக்குகளை மீண்டும் விசாரிக்க வழிவகுத்தது. கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு உரிமையாளர் அல்ல, காப்பாளர் மட்டுமே என்று அரசின் ஆணையைத் திருத்தியது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கூறுகிறபடி நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அது அரசுக்கு அறிவுறுத்தியது.

அயோத்தி மக்களின் விருப்பம் என்ன?

அயோத்தியும் அதையொட்டியுள்ள ஃபைசாபாதும் இரட்டை நகரங்கள் என்று அறியப்படுபவை. இந்த வழக்கில் ஒரு இறுதி முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே அவர்களில் பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருந்தது. அவரவர் சார்ந்த மதம், சித்தாந்தத்துக்கு ஏற்பவே மக்களிடம் கருத்துகள் உள்ளன.

மாநிலத் தலைநகரத்திலிருந்து 125 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்தும் வளர்ச்சியில்லாமல் தேங்கிக் கிடப்பதை அனைவரும் சுட்டிக்காட்டுகின்றனர். மதுரா, காசி, கயை போல தீர்த்த யாத்திரைத் தலமாக வளர்ந்திருக்க வேண்டிய நகரம் அயோத்தி. ஆனால், எப்போதும் காவலும் சோதனையுமாக நகரம் மாறிவிட்டதால் வெளியூர்க்காரர்கள் வரக்கூடத் தயங்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இது மாறும் என்ற நம்பிக்கை உள்ளூர்க்காரர்களுக்கு இருக்கிறது.

ரத யாத்திரைக்குப் பிறகு வட மாநில மக்கள் மத அடிப்படையில் அணிதிரள்வது வழக்கமாகிவிட்டது. அது அயோத்தியில் உச்சத்தைத் தொட்டது. இதனால், அன்றாடத் தொழிலும் வர்த்தகமும் பாதிக்கப்பட்டதுடன் வகுப்பு ஒற்றுமையும் பாழானது. இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண பலரும் முயன்றனர். சந்திர சேகர், பி.வி.நரசிம்ம ராவ் பிரதமர்களாக இருந்த காலத்தில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத்துக்கு வெளியே பேசி சமரசம் செய்துகொள்ளலாம் என்பதை எவருமே ஏற்க மறுத்தனர். உச்ச நீதிமன்றமே கடைசியாக ஏற்படுத்திய சமரசக் குழுவால்கூட இதைத் தீர்க்க முடியவில்லை.

இந்துக்கள், முஸ்லிம்கள் தரப்பில் ஒன்றல்ல பல அமைப்புகள் இந்த வழக்கில் மனுதாரர்களாகத் தங்களை இணைத்துக்கொண்டன. மனுதாரர்களாக நேரடியாக இடம் பெறாதவர்களும் களத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாக இறங்கினர். எனவே, சமரசம் செய்வது சாத்தியமற்றது என்பது தெரிந்துவிட்டது. ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஜமீர் உத்தின் ஷா, “சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்கள் கோயில் கட்டக் கொடுத்துவிடுங்கள்.

அதனால், அவர்களுக்கு நம் மீது நல்லெண்ணம் ஏற்படும், மத ஒற்றுமையும் வலுப்படும்” என்று கூறினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முஸ்லிம்களுக்குச் சாதகமாகவே அமைந்தாலும் இந்துக்களின் மன உணர்வுகளுக்கு எதிராக அங்கு மசூதி கட்டிக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அவருடைய யோசனைகளை நிராகரித்தது. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பதை மாற்றவோ திருத்தவோ எந்த வகையிலும் கைமாற்றிக்கொடுக்கவோ முடியாது என்று அது கூறிவிட்டது.

தி இந்து, தமிழில்: சாரி

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பிரச்சினையஅயோத்திவந்த பாதைநீதிமன்றம்கால நிகழ்வுகள்அத்வானிரத யாத்திரைஅயோத்தி மக்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author