Published : 19 Sep 2019 08:03 am

Updated : 19 Sep 2019 08:03 am

 

Published : 19 Sep 2019 08:03 AM
Last Updated : 19 Sep 2019 08:03 AM

இப்படிக்கு இவர்கள்: ஆங்கிலம் - இந்தியில் பெரியார் - காலத்தின் கட்டாயம்

the-imperative-of-the-term

ஆங்கிலம் - இந்தியில் பெரியார் : காலத்தின் கட்டாயம்

செ.இளவேனில் எழுதி செப்டம்பர் 17 அன்று வெளிவந்த ‘ஆய்வுலகின் பார்வையில் பெரியார்’ கட்டுரையைப் படித்தேன். தமிழகத்துக்கு வெளியே ஆய்வுலகின் பார்வைகளைத் தொகுத்து வழங்குவதாகக் கட்டுரையாளர் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள ராமச்சந்திர குஹா, சுனில் கில்னானி ஆகியோர் பெரியாரின் எழுத்துக்களை நேரடியாக ஆய்வுசெய்தவர்களல்லர். ஆனால், தமிழ் ஆய்வுலகம் பெரியாரை ஆங்கிலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை ஆகியோரது நூல்கள் பெரியாரையும், பெரியாரின் எழுத்துக்களையும் ஆய்வு நோக்கில் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியதில் முக்கியமானவை.

1970-களிலேயே நம்பி ஆரூரான், இ.சா.விஸ்வநாதன் ஆகியோர் பெரியாரும் திராவிட இயக்கம் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளனர். 1990-களில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன், எஸ்.ஆனந்தி ஆகியோரால் பல கட்டுரைகள் பெரியார் குறித்து முன்னணி ஆய்விதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இந்நூல்களும் கட்டுரைகளும் வரலாற்றறிஞர்கள் பலராலும் தரவு நூல்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜி.அலோய்ஷியஸ், பெரியார் பற்றி பல கட்டுரைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதியுள்ளதுடன் அவரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கி.வீரமணியின் வழிகாட்டுதலில் பெரியாரின் எழுத்துக்களை ஆங்கிலத்திலும் சில இந்திய மொழிகளிலும் வெளியிடும் திட்டமும் நிறைவேறிவருகின்றது. ஆய்வுலக அரசியல் காரணங்களினால் பெரியாரின் கருத்துக்களும், எழுத்துக்களும் மறைக்கப்பட்டிருந்தாலும், அவை ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் குறிப்பாக இந்தியிலும் மொழிபெயர்த்து, ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடுவது இன்றைய காலத்தின் கட்டாயமே.

- ம.விஜயபாஸ்கர், பொருளியல் ஆய்வாளர்.

காந்திய எழுத்து

ஆசை எழுதிய ‘சுதந்திர தினத்தன்று என்ன செய்துகொண்டிருந்தார் காந்தி?’ என்ற கட்டுரையைப் படித்தேன். தினமணியில் தி.சா.ராஜுவின் நடுப்பக்கக் கட்டுரைகளின் பாரிய செல்வாக்கு எங்கோ ஒரு மூலையில் என்னில் இன்றும் தங்கியுள்ளது. அப்படியான ஒன்றை ‘காந்தி 150’ தொடர் கட்டுரைகள் எனக்கு இப்போது அளிக்கின்றன. காந்திய எழுத்துக்கள் இங்கு பல இருந்தபோதிலும் ‘இந்து தமிழ்’ காந்தியின் கட்டுரைகள் தி.சா.ராஜுவின் நினைவை மீட்டெடுக்க உதவின. காந்தியைத் தொடர்ந்து பேசுவோம் - முத்தச்சனை இன்றைய சமகால வாசிப்பில் மீள்பரிசீலனை செய்வோம்.

- கொள்ளு நதீம், ஆம்பூர்.

பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்

செப்டம்பர்-18 அன்று வெளியான இந்தியாவின் வளர்ச்சி வீதம் குறித்த கட்டுரை வாசித்தேன். பலதரப்பட்ட அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் நாட்டின் வளர்ச்சி வீதம் குறித்த அறிக்கைகளில் உள்ள வித்தியாசங்கள், பணமதிப்பு நீக்கம் & திட்டமிடாத பொருட்கள் மற்றும் சேவை வரி அமல்படுத்தலுக்குப் பிறகான நாட்டின் வளர்ச்சி வீதம் கடந்த மூன்று ஆண்டுகளாகவே படிப்படியாகக் குறைந்துவருகிறது.

உலகமயமாக்கலுக்குப் பின் இந்தியா சந்தித்திருக்கும் மிகப் பெரிய பொருளாதார சறுக்கல் இதுவாகும். கடந்த பல ஆண்டுகளாகவே அரசின் தரவுகள் மீதான நம்பகத்தன்மை மக்கள் நம்பும்படியாக இல்லை. இனிவரும் நாட்களிலாவது அரசு வெறும் வெற்று அறிக்கைகள் தயார்செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வேலைவாய்ப்பைப் பெருக்கிடும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சும் திட்டங்களைப் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையுடன் செயல்படுத்த முனைப்புக் காட்ட வேண்டும்.

- கார்த்திகேயன்.வி.பி., அய்யம்பேட்டை.

’இந்து தமிழ் திசை’யின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

அடுத்த தலைமுறையினரை வாசிப்பின் நேசர்களாக மாற்றிட உறுதியெடுத்துக்கொண்ட உடனேயே நேரத்தின் அருமை, இன்றைய தலைமுறையினர் அதைப் பயன்படுத்தும் முறை பற்றிய ஜென்னி ஓடலின் ‘டிக்-டாக் யுகத்தில் கடிகாரத்தின் வேகத்தைக் குறைக்க முடியுமா?’ என்கிற கட்டுரையை வெளியிட்டு, எடுத்த உறுதிமொழிக்குச் செயல்வடிவம் கொடுத்துவிட்டீர்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளாக ‘இந்து தமிழ்’ தன் வாசகர்களின் அறிவை வளர்த்திட, கருத்துக்களைப் பகிர்ந்திட எடுத்த எண்ணற்ற முயற்சிகள் சொல்லி மாளாது. அதன் தொடர்ச்சியாக இன்னமும் பல பகுதிகள் வெளிவரும் என்ற அறிவிப்புடன் ‘நம் பத்திரிகை, மாணவர் சமுதாயம் வாசிப்பின் சுகமறிந்து, வாசிப்பை நோக்கி நடை பயில முக்கியத்துவம் கொடுக்கும்’ என்ற செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது. சமுதாய அக்கறையுடன் தங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

- கே.ராமநாதன், மதுரை.

இப்படிக்கு இவர்கள்ஆங்கிலம்இந்திபெரியார்காலத்தின் கட்டாயம்காந்திய எழுத்துகாந்திபொருளாதார வளர்ச்சிஇந்து தமிழ் திசைஇந்து தமிழ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author