Published : 06 Sep 2019 07:26 AM
Last Updated : 06 Sep 2019 07:26 AM

நமக்கு ஒரு நாளும் புரியாத காவிரி

தங்க.ஜெயராமன்

காவிரியை மேலும் மேலும் புரிந்துகொள்கிறோம். அதை மேலும் திறமையாக நிர்வகிக்கிறோம். இவை நம் நம்பிக்கைகள். மனித அறிவு எப்போதும் ஏறுமுகத்தில் என்று நம்பத்தானே வேண்டும். இன்று காவிரியில் நடக்கும் பணிகள் சிலவற்றையும், அரசின் நாளைய திட்டங்கள் சிலவற்றையும் தெரிந்துகொண்டால், மக்களின் இந்த நம்பிக்கைகள் தேய்ந்துவிடும். குடிமராமத்து வேலைகளைத் தூண்டிய நல்லெண்ணத்தை நாம் ஏற்க வேண்டும். அந்த வேலைகளைச் செய்யும் முயற்சியிலும், மும்முரத்திலும் நிர்வாகத்துக்குத் தளர்ச்சியில்லை. வேலைகளும் நேர்த்தியானவை. காவிரி விஜயத்துக்கு நடைபாவாடை விரித்ததுபோல் ஆற்றின் தடம் அலங்காரம் பூண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சி ஒருபக்கம். இன்னொரு பக்கம், காவிரி பற்றிய புரிதலின் போதாமை என்ற கவலை.

அறிவுக் கலாச்சாரம்

இந்தப் போதாமை நம் அறிவின் திறனைப் பற்றியதல்ல. கலாச்சாரம் தொடர்பானது. இன்றைய கலாச்சாரம் காவிரியைப் புரிந்துகொள்ள நமக்கு வழிவிடாது. ஆங்கில இலக்கியத்தை இந்தியர்கள் புரிந்துகொள்ள முடியாது என்பது சில ஆங்கிலேயர்களின் கருத்து. இலக்கியங்கள் அந்தந்தக் கலாச்சாரத்தில் பிறந்து, அதையே உண்டு நிலைப்பதைக் காரணமாகக் கூறுவார்கள். இப்படியாக அதற்கும் நமக்கும் இடையே ஒரு கலாச்சாரக் குறுக்குச் சுவர். அதன் மறுபக்கம் கதாபாத்திரம் ஒன்று சிரித்தால், அது நாயகனின் சிரிப்பா வில்லனின் எக்களிப்பா என்று எப்படிக் காண்பது? காவிரியைப் பற்றிய நம் புரிதலும் இப்படித்தான். நம்முடையது காவிரிக்குப் பொருந்தாத வேற்று அறிவுக் கலாச்சாரம்.

தடுத்து வைத்துக்கொள்ள முடியாத அளவுக்குக் காவிரி நீர் வந்தால் அது உபரி. தேவைக்குக் குறைவாக வருமானால் அது பற்றாக்குறை. நம் உபரியாகவும், நம் பற்றாக்குறையாகவும்தான் காவிரியைப் புரிந்துகொள்ளலாம். காவிரியைக் காவிரியாக, அதனை அதுவாகவே புரிந்துகொள்ள நமக்கு இயலாது. நம்மை நாம் விட்டுவிட்டால்தான் அது முடியும். நம்மை, அதாவது நம் அறிவை எதைக் கொண்டு துறப்பது?

வடகிழக்குப் பருவ மழை இங்கே 119 டி.எம்.சி.க்குக் குறைவாகப் பெய்தால் காவிரி கூடுதலாகத் தண்ணீர் கொண்டுவர வேண்டும். காவிரி அதுவாகவே பெருகக் கூடாது; நமக்காகப் பெருக வேண்டும், நமக்காக அடங்க வேண்டும்.

காவிரிப் படுகை பாசனத்துக்காக மேட்டூரில் தண்ணீர் திறந்தார்கள். அது கல்லணைக்கு வந்த நாள் முதல் கொள்ளிடம் என்ற வடிகாலில் செல்வது 3,004 கன அடி. காவிரி, வெண்ணாறு என்ற பாசன ஆறுகளில் விடுவிப்பது 1,500 முதல் 2,600 கன அடி வரை. வடிகாலில் கூடுதலாகத் தண்ணீர் விடுவித்தால் அது பாசனத்துக்காகத் திறந்த காவிரியல்ல. ஆனாலும், காவிரி பாசனத்துக்காகத்தான் திறந்து ஓடுகிறது என்று நம்புவோம். இந்த அளவுக்குத்தான் காவிரி பற்றிய நம் புரிதல்.

ஆற்றுக்கும் தூர்

அண்டாவுக்குத் தூர் உண்டு. கேணிக்கு, குளத்துக்கு, ஏரிக்குத் தூர் உண்டு. அதன் வயிறு ஓடுகாலாக உள்ள ஆற்றுக்குத் தூர் ஏது? ஆற்றுக்குக் கரைகட்டிப் பார்த்ததுண்டு, அசலாற்றிப் பார்த்திருக்கிறேன். இப்போதுதான் மராமத்துப் பணிகளில் ஆற்றுக்குத் தூர் வாரும் அதிசயத்தைப் பார்க்கிறேன். வெறும் சொல்லின் பொருள் குறித்த பிரச்சினை இது என்று நீங்கள் தள்ளிவிடக் கூடாது. சொல்லின் பழைய பொருள் விரிந்து, ஆற்றின் வயிறும் ‘தூர்’ ஆனது என்றும் இதை எளிமைப்படுத்தாதீர்கள். ஆற்றுக்குத் தூர் ஒன்றை நாம் கற்பிதம் செய்துகொண்டதால், தூர் வாருவோம் என்று ஆற்றின் வயிற்றுப் பரப்பைச் சமப்படுத்துகிறோம். காவிரி நீர் ஒரு நாள் ஓடினாலும் சமப்படுத்திய வயிற்றுப் பரப்பைக் குழித்தும், எக்கலடித்தும் மேடும், மடுவுமாகச் செய்து நகர்ந்துவிடும் என்று நமக்குப் புரியவில்லை.

காவிரியின் வயிற்றுப் பரப்புக்கு ஒரு அமைப்பு உண்டு. நீரோட்டத்தின் அளவுக்கும் வேகத்துக்கும் தக்க அந்த அமைப்பு உயர்ந்தும் தணிந்தும் நெளிந்தும் நாழிக்கு நாழி உருமாறும். அந்த ஜீவனின் முரண்டுகளை நாம் அனுமதிக்க வேண்டும். ஓடும் காவிரியில் இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போகும்போது நம் காலுக்குத் தெரிந்த பள்ளம், நாம் அக்கரையிலிருந்து இக்கரைக்குத் திரும்பும்போது மணல் உருண்டு மறைந்துபோயிருக்கும். ஆனாலும், பாவிய தளம்போல ஆற்றின் ஓடுகாலை நிரந்தரமாக்க முயல்கிறோம்.

கவர்ச்சிக் கால்வாய்

பாலைவனத்தின் குறுக்கே நீரைக் கடத்தும் கால்வாய்போல் காவிரியை நினைக்கக் கூடாது. அந்த கவர்ச்சிக் கால்வாயைத்தான் மனக்கண்ணில் மாதிரிப் படமாக விரித்துக்கொண்டு காவிரிக்குத் தூர்வாருகிறார்கள். அந்த முன்மாதிரியைப் போல் காவிரிக்கரை வாய்க்கால்களுக்கு கான்கிரீட் கரையும், நீரோடுதளமும் அமைக்கத் திட்டமிடுகிறது அரசு.

காவிரி நீர் பயிருக்கான தண்ணீர் மட்டுமல்ல. ஆறானாலும் வாய்க்காலானாலும் தான் ஓடும் இடமெல்லாம் கரையிலும் தரையிலும் சுவறிச் சுவறிதானே மண்ணுக்குச் சாரமாகிறது காவிரி. குத்தும் செடியும் கொடி ஏறிய மரமுமாக காவிரிக் கரையில் பத்துத் தப்படிக்கு ஒரு தாவர உலகத்தையே பார்க்கலாம். காவிரியை ‘பரப்பு நீர் வரு காவிரி’ என்பார்கள் கவிகள். காவிரிப் படுகை என்பது காவிரி நீர் பரவிக் கிடக்கும் புவிப் பரப்பு.

இந்த ‘பரப்பு நீர்’ தரைக்கு மேல் இருக்கும். காய்ந்த ஓடுபோன்ற மேல் மண்ணுக்குக் கீழும் இருக்கும். கரையும் ஓடுகாலும் கான்கிரீட்டாக மாறினால் அது காவிரிப் படுகையின் சூழலியல் சீர்கேடாக அமைந்துவிடும். காவிரியை நாம் புரிந்துகொள்ளாததற்குச் சரியான அடையாளம் அதுவாகத்தான் இருக்கும்.

காவிரி நீர் பற்றாக்குறை எப்போதுமே உள்ளது. எனவே, டெல்டாவில் நீர் சிக்கனத்துக்கான திட்டங்கள் ஒரு பக்கம். காவிரி நீர் உபரி என்பது எப்போதாவது கிடைப்பது. அந்த உபரியை இறைத்து, மேல்மடையின் சேலம் மாவட்டத்தில் நூறு ஏரிகளை நிரப்பும் திட்டம் மறுபக்கம். உபரியை நம்பி புது ஆயக்கட்டுகளை உருவாக்கினால் உபரி இல்லாதபோது அந்த விவசாயிகள் என்ன செய்வார்கள்?
இன்று பழைய நஞ்சையான காவிரிக்கும் வெண்ணாற்றுக்கும் தலா 1,800 கன அடி, சென்னைக்கு குடிநீர் தரும் வீராணத்துக்கு 3,004 கன அடி காவிரி நீர் செல்வதுபோன்ற சமம் அல்லாத போட்டி ஒன்று உருவாகுமோ? “ஆயுளில் ஆறு முறை காவிரியில் உபரி வரலாம். அதற்கு மேல் வந்தால் உங்கள் யோகம்” என்று அந்த விவசாயிகளுக்கு இப்போதே சொல்லிவிட்டு அரசு ஒதுங்கிக்கொள்ளுமோ? அல்லது எப்போதுமே, எப்படியாவது உபரி உருவாகுமோ?

உங்கள் கிராமத்தில் கீழ்மடைக்காரருக்குச் செல்லும் காவிரி நீரை நீங்கள் தடுத்தால் அது குற்றம். எங்கள் ஆற்றுக்கு வர வேண்டிய தண்ணீரை அரசுத் துறை நிறுத்திவைத்தால் அது நிர்வாகக் காரணம். தமிழ்நாட்டுக்கு வரும் நீரை கர்நாடகம் மறுத்தால் அது நதி நீர் தாவா. நம் அரசே மேல் மடையில் காவிரி நீரை இறைத்துக்கொண்டால் அது கொள்கை முடிவு. காவிரியை நம் அரசு புரிந்துகொள்ளவில்லை என்றா சொன்னேன்?

- தங்க.ஜெயராமன், ‘காவிரிக் கரையில் அப்போது’ நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x