

இந்தியாவையே கவலைக்கிடமாக்கிக்கொண்டிருக்கும் நிலத்தடி நீர்வீழ்ச்சி இப்போது பஞ்சாப் மாநிலத்தைத் திணறச்செய்துகொண்டிருக்கிறது.
நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 300 மீட்டரிலிருந்து 500 மீட்டர் வரை குறைந்ததுடன் நீரில் உப்பும் அமிலத்தன்மையும் அதிகரித்துவிட்டது. குடிநீரும்கூட கெட ஆரம்பித்துவிட்டதால், மிக மோசமான சூழலை எதிர்கொண்டுவருகிறார்கள் பஞ்சாப்வாசிகள். கோதுமை, அரிசிக்கு மட்டுமே அரசு கொள்முதல் விலை அறிவித்து அவற்றை மட்டும் வாங்குவதால், மாற்றுப் பயிர்களைப் பயிரிட விவசாயிகள் விரும்புவதில்லை. பஞ்சாபில் மட்டும் ஒரு சதுர கிமீக்கு 34 ஆழ்துளைக்கிணறுகள் இருக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைவதால், இப்போது ‘சப்-மெர்சிபுள்’ பம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். பஞ்சாபின் மொத்தமுள்ள 138 வட்டாரங்களில் 109 வட்டாரங்களில் முழு அளவுக்குத் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டுவிட்டது. சந்தையில் உருளைக்கிழங்கு விலை உயர்ந்ததைப் பார்த்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பஞ்சாபில் ஏராளமான விவசாயிகள் உருளைச் சாகுபடி செய்தனர். அதேசமயம், மகாராஷ்டிராவைப் போல பிற மாநிலங்களிலும் உருளைச் சாகுபடி பரப்பு ஒரே நேரத்தில் அதிகமானது. விளைவு, சந்தைக்கு உருளை வரத்து பல மடங்கு அதிகரித்ததால், சாகுபடிச் செலவை ஈடுகட்டக்கூட முடியாதபடிக்கு ஒரு கிலோ 2 ரூபாய்க்கு உருளை மலிவாக விற்றது. இதனாலேயே விவசாயிகள் மாற்றுப் பயிருக்கு மாற மறுக்கிறார்கள்.
நிலத்தடி நீரை மிதமிஞ்சி பயன்படுத்தியதற்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரம்தான் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நெல்லுக்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும் என்று தெரிந்தும் தண்ணீரும் மின்சாரமும் இலவசம் என்பதால் விடாமல் தொடர்கின்றனர். இதை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதும், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பயிருக்கு மாறுவதும், மழைநீர் சேகரிப்பைத் துரித்தப்படுத்துவதும், ஆறுகளையும் வாய்க்கால்களையும் பாதுகாத்து அதை உபயோகத்துக்குக் கொண்டுவருவதும், ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதும் என உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. தமிழ்நாடு போன்ற விவசாயத்தைப் பெரிதும் நம்பியுள்ள மாநிலங்களுக்கு பஞ்சாப் விடுத்திருக்கும் எச்சரிக்கை மணி இது.
பாஜகவின் திரிணமூல் இழுப்புப் படலம்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்க அரசியலில் சலசலப்பு கிளம்பியபடியே இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸிலிருந்து இதுவரை 5 எம்எல்ஏக்களும் 50 கவுன்சிலர்களும் பாஜகவுக்குக் கட்சி தாவியிருக்கின்றனர். இப்படிக் கட்சி தாவியவர்களில் கணிசமானோர் குற்றப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். சாரதா ஊழல் வழக்கில் சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருப்பவரும் திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஷான்குதேவ் பாண்டாவை பாஜகவில் சேர்த்துக்கொண்டது, பலரையும் புருவம் உயர்த்தவைத்திருக்கிறது. இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸிலிருந்து குற்றப் பின்னணியுடன் வருவோரைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று கிடுக்குப்பிடி போட்டிருக்கிறது பாஜக. இதற்கிடையே உற்சாகமாகக் கட்சிக்கு ஆள்பிடித்து வந்த மேற்கு வங்க பாஜக தலைவர் முகுல் ராயைக் கட்சி மேலிடம் திருப்பி அனுப்ப, கட்சி மாறலாம் என்று வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.