Published : 02 Jul 2015 10:26 AM
Last Updated : 02 Jul 2015 10:26 AM

நெருக்கடி நிலை- ஃபேஸ்புக் பதிவு: கம்யூனிஸ்ட் பிள்ளைகள்

இரவு 9 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. நடக்கும்போது புகைபிடிக்கும் பழக்கமில்லாத அப்பா அன்று இரவு புகை பிடித்துக்கொண்டே உறையூர் நாச்சியார்பாளையத்தில் இருந்த வீட்டுக்கு வந்தார். ஏதோ ஒரு பதற்றம் புகையாய்ப் போய்க் கொண்டிருந்தது. “கலைஞர் கருணாநிதியின் அரசைக் கலைத்துவிட்டனர். நான் இப்போதே போகட்டுமா, அல்லது காலையில் போகட்டுமா என்று அம்மாவிடமும் குழந்தைகள் எங்களிடமும் கேட்டார். நாங்கள் இப்போதே போங்கள் என்று ஒருமித்த குரலில் கூறினோம்.

அகில இந்திய வானொலியின் இரவுச் செய்தியைக் கேட்டு, அரசு கலைக்கப்பட்டதை உறுதி செய்துகொண்டோம். இரவுச் சாப்பாட்டைச் சரியாகக்கூடச் சாப்பிடாமல் தட்டிலேயே கைகழுவிவிட்டு எழுந்த அவர் இரண்டு சட்டைகள், இரண்டு வேட்டிகளை மடித்து ஒரு கருப்பு நிற ப்ரீஃப்கேஸில் எடுத்துக்கொண்டு இருளில் மறைந்துபோனார். ஆறு மாதங்களாக நாடு முழுவதிலும் அராஜக ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த நெருக்கடி நிலைப் பிரகடனத்தை உறுதியாக எதிர்த்து நின்று, பல்வேறு கட்சிகளின் அகில இந்தியத் தலைவர் களுக்குப் புகலிடம் கொடுத்த, தமிழகத்தை ஆண்ட கருணாநிதி அரசாங்கம் கலைக்கப்பட்ட பிறகு, எந்நேரமும் போலீஸ் அப்பாவைக் கைது செய்யலாம் என்ற நிலையில், நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று அடுத்த நாள் அதி காலை 3 மணிக்குத் தெளிவானது. ஏற்கெனவே உதிர்ந்து விழுந்துவிடும் நிலையிலிருந்த கதவு தட்டப்பட்டது. அம்மா எழுந்து சென்றார்.

“டிஎஸ்பி சேதுராமலிங்கம் வந்திருக்கிறேன். ராமச்சந்திரன் இருக்கிறாரா?” என்று கதவுக்கு வெளியிலிருந்தே கேட்டார்.

“கோத்தாரி சர்க்கரை ஆலை தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைக்காக நேற்றிரவே மலைக் கோட்டை எக்ஸ்பிரசில் சென்னை சென்று விட்டார்” என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார். சரி, நாங்கள் வருகிறோம் என்று சொல்லி அதிகாரியும் போலீஸ்காரர்களும் சென்றுவிட்டனர்.

கதவைத் தட்டும் முன் வீட்டை போலீஸார் சுற்றி வளைத்திருந்தனர் என்ற விவரம் காலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லும் போதுதான் தெரிந்தது.

அப்பாவுக்கு அதற்குப் பின் தலைமறைவு வாழ்க்கை.

ஒரு நாள் பெரும் கூட்டம் புடைசூழ இரண்டு போலீஸ் காரர்கள் வீட்டுக்கு வந்தனர். நானும் அக்காவும் மட்டும் வீட்டில். அவர்களில் ஒருவர் அக்காவைப் பார்த்து, ‘‘அப்பா எங்கே இருக்கிறாரம்மா?’’ என்று கேட்டார்.

“போலீஸாகிய நீங்கள்தானே அவரைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடித்தால் நீங்கள் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்களும் அவரைப் பார்த்துப் பல மாதங்களாகி விட்டன” என்றார் அக்கா.

“அவர் ஒரு மாதத்தில் சரணடையவில்லை என்றால், வீட்டை ஜப்தி செய்துவிடுவோம். அதற்கான நோட்டீஸ் இது என்று” என்று சட்டைப் பையிலிருந்து ஒரு பேப்பரை உருவினார் ஒரு காவலர். இதை எங்கே ஒட்டுவது என்று அவர் யோசித்தபோது, நான் இங்கே ஒட்டுங்கள் என்று ஒரு வாகான இடத்தைக் காண்பித்தேன். எதை வைத்து ஒட்டுவது என்று அவர்கள் யோசித்தபோது “கொஞ்சம் இருங்கள்” என்று சொன்ன நான், வீட்டுக்குள் ஓடிப்போய் மர நிறப் பசை இருக்கும் புட்டியைக் கொடுத் தேன். “கம்யூனிஸ்ட்டுகள் பிள்ளைகளை எப்படி வளர்த்திருக்கிறார்கள் பார்” என்று சொல்லியபடியே நோட்டீஸைஒட்டிவிட்டுச் சென்றனர். எனக்கு வயது 13. அக்காவுக்கு 16 வயது.

40 வருடங்களுக்குப் பின்னரும் பசையின் பிசுபிசுப்பு என் கைகளில்… அதன் மணம் என் நாசிகளில்!

விஜயஷங்கர் ராமச்சந்திரன், ஆசிரியர், ஃப்ரன்ட்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x