Published : 18 May 2015 08:26 AM
Last Updated : 18 May 2015 08:26 AM

நம் கல்வி... நம் உரிமை!- காந்தியக் கல்வி சொல்வதென்ன?

கல்வியைப் பற்றி காந்தி இப்படிச் சொன்னார்: “இன்று கல்வி கற்பது என்பதே ஆங்கிலம் கற்பதுதான் எனும் சூழல்தான் நிலவுகிறது. உண்மையான சிக்கல் என்னவென்றால், நம் மக்களுக்குக் கல்வி என்றால் என்னவென்றே புரியவில்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்குகளை மதிப்பீடு செய்வதுபோலவோ, நிலத்தை மதிப்பீடு செய்வதைப் போலவோ நாம் கல்வியையும் மதிப்பீடு செய்கிறோம். மாணவர்கள் மேலும் பணம் பண்ண என்ன வேண்டுமோ அதை வழங்குவதே கல்வி என்கிறோம் நாம்.”

இந்தியாவின் சிக்கல்களைக் கச்சிதமாகவே கணித்தார் காந்தி. “போலிகளை ஓர் இனமாக உருவாக்கும் எந்த நாடும் ஒரு தேசியமாகப் பரிணமிக்க முடியாது” என்றார். ஆங்கிலேயக் கல்வி முறை மிகச் சரியாக இதைத்தான் செய்வதாக காந்தி கருதினார். மண்ணிலிருந்து அந்நியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான குமாஸ்தாக்களை உருவாக்கி அளிக்கும் கல்விமுறை என்றே எண்ணினார். “பாடப் புத்தகங்கள் மூலமே அனைத்தையும் கற்பித்துவிடலாம் எனில், ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பற்றுப் போய்விடும். பாடப் புத்தகங்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர், அவரது மாணவர்களிடத்தில் சுயசிந்தனையை விதைக்க முடியாது” என்றார்.

காந்தி வெறுமனே கடும் விமர்சனங்களை மட்டும் முன் வைக்கவில்லை. அதற்கு மாற்றாக சில ஆக்கபூர்வமான வழிமுறைகளையும் பரிசீலனை செய்கிறார்.

கல்வியைப் பற்றி வெவ்வேறு தருணங்களில் காந்தி பேசியதை, எழுதியதையெல்லாம் தொகுத்து, பரதன் குமரப்பா ‘பேசிக் எஜுகேஷன்’ (Basic Education), ‘டுவார்ட்ஸ் நியூ எஜுகேஷன்’(Towards New Education) ஆகிய இரண்டு சிறு புத்தகங்களாக 1950-களில் தொகுத்து வெளியிட்டார்.

காந்தி சில முக்கியமான வழிகாட்டுதல்களை அளிக்கிறார். ஒரு நல்ல கல்வியென்பது ஒரு குழந்தை அல்லது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மா உட்பட அனைத்துத் தளங்களிலும் அவர்களிடத்தில் உறைந்துள்ள ஆகச் சிறந்த பண்புகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று அவர் கருதினார். கல்வி என்பது அடித்தட்டு விவசாயியிக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார். “பள்ளி என்பது வீட்டுச் சூழலின் விஸ்தரிப்பாகவே இருக்க வேண்டும். மிகச் சிறந்த விளைவுகளை ஏற்படுத்த பள்ளியிலும் வீட்டிலும் குழந்தைகளுக்குக் கிடைக்கும் மனப்பதிவுகளில் ஓர் ஒத்திசைவு அவசியம் வேண்டும். வேற்று மொழிகளில் பயிலும்போது இந்த ஒத்திசைவு உடைபடுகிறது. இப்படி உடைப்பவர்கள், அவர்களின் நோக்கம் நேர்மையானதாக இருந்தாலும்கூட, அவர்கள் மக்களின் எதிரிகளே” என்று தாய்மொழி வழிக் கல்வியின் தேவையை காந்தி வலியுறுத்துகிறார்.

சுயசார்பு, கைத்தொழில்…

கல்வியோடு இணைத்து ஏதேனும் ஒரு சிறு கைத்தொழிலைக் கற்றுக்கொள்வதை காந்தி முன்வைக்க வில்லை. மாறாக, கல்வி முறையே தொழில் சார்ந்து, அதை மையமாகக் கொண்டு இருக்க வேண்டும் என்று தெளிவாகவே முன்வைக்கிறார். காந்திக்கு சுயசார்பு மற்றும் தன்னிறைவின் மேல் அபார நாட்டமுண்டு. இந்தியாவைப் பற்றிய அவரது அனைத்துக் கனவுகளின் அடித்தளத்திலும் இவை ஓடிக்கொண்டே இருக்கும். இந்தியக் கிராமங்கள் அனைத்தையும் தன்னிறைவடைந்த சிறுசிறு குடியரசுகளாகவே அவர் கண்டார். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, நீராதாரம் ஆகியவற்றை அவர்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும்; அதன்மூலம் நிறைவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார்.

பரதன் குமரப்பா அவரது புத்தகத்தின் முன்னுரையில் “கிராமியப் பொருளாதாரத்தைச் சீராக்கி அதற்கு உரிய கல்வியை ஏற்படுத்துவதே நாட்டை அழிவிலிருந்து காக்க ஒரே வழி என்று அவர் நம்பினார். கிராமப்புறத் தொழில்கள் சார்ந்தே மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்” என்றார்.

பள்ளிக்கூட நிர்வாகங்களில் அரசு தலையிடுவதை காந்தி விரும்பவில்லை. மாணவர்கள் கற்ற தொழில்கள் மூலம் உருவாக்கும் பொருட்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என்பதே அவரது திட்டமாக இருந்தது. பள்ளிகள் அனைத்தும் இப்படித் தன்னிறைவு அடைய வேண்டும் என்று எண்ணினார்.

காந்தி உயர் கல்வியைப் பற்றி அரசாங்கம் அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை என்கிற முடிவுக்கு வந்தார். துறைசார்ந்த கல்லூரிகள் அமைய வேண்டும்; அந்தந்தத் துறைகளில் இயங்கிய நிறுவனங்களே, அந்தக் கல்லூரிகளை நடத்த ஆகும் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளோடு இணைக்கப் பட வேண்டும். புரவலர்களின் நிதியுதவி அக்கல்லூரிகளை நடத்தப் போதுமானது என்று நினைத்தார். கல்லூரிகளுக்கும் தற்சார்பை வலியுறுத்தினார். உதாரணமாக:

“வேளாண்மைக் கல்லூரிகள் அப்பெயருக்குத் தகுதியான வையாக இருக்க வேண்டுமெனில், தற்சார்பை அடைய வேண்டும். வேளாண்மைப் பட்டதாரிகள் சிலரோடு எனக்கு வருத்தமூட்டும் அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களது அறிவு மேலோட்டமானது. நேரடி அனுபவமற்றவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களது பயிற்சியைத் தற்சார்புடைய பண்ணைகளில் அமைத்துக்கொண்டு நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முன்வருவார்களேயானால், பட்டப் படிப்பு முடித்த பிறகு, அவர்களைப் பணியில் அமர்த்துபவர்களின் செலவில் பட்டறிவு பெற வேண்டிய அவசியம் நேராது” என்றார்.

ஒட்டுமொத்தமாக, காந்தி முன்வைத்த கல்விமுறையின் முக்கிய அம்சங்களைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.

1. கல்வி என்பது ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அது செயல்திறனை ஊக்குவிக்க வேண்டும்.

2. கைத்தொழில் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். வெறும் புத்தகங்களும் பாடங்களும் மட்டும் போதாது.

3. நல்ல கல்வியின் அடிநாதம் உயர்ந்த பண்புகள் கூடிய பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதே.

4. கல்வி தற்சார்புடையதாக இருத்தல் வேண்டும்.

5. கல்வி அகிம்சையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். சமூக ஒற்றுமையைப் பேணுவதாக இருக்க வேண்டும்.

6. தாய்மொழி வழிக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.

7. ஆரம்பக் கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் 7 வருடங்களுக்குக் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். அது இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

8. கல்விக்கான வரையறைகள் அனைத்தையும் இந்தியக் கிராமப்புற மக்களை மனதில் வைத்துக்கொண்டு தீர்மானம் செய்ய வேண்டும். கல்வி, மேட்டிமைவாதிகளின் சொத்தாக அவர்களை மட்டும் கணக்கில் கொண்டு தீர்மானிக்கப்படக் கூடாது.

காந்தியின் கல்விக் கொள்கைகள் மீது விமர்சனங்கள் எழாமல் இல்லை. வர்ணாசிரமக் கல்வி என்றும், குருகுலக் கல்வி என்றும் காங்கிரஸைச் சேர்ந்தவர்களே விமர்சித்தனர். காந்தி முன்வைக்கும் தீர்வுகள் விவாதத்துக்கு உரியவை என்றாலும், நவீனக் கல்விமுறை மீது காந்தி வைத்த விமர்சனங்கள் அன்றைய காலத்தைக் காட்டிலும் பன்மடங்கு வீரியத்துடன், மிகப் பெரிய சமூக - பொருளியல் சிக்கலாக இன்று வளர்ந்து நிற்கிறது. சாமானிய மக்களின் முதுகில் மிகப் பெரிய சுமையாக வணிகமயமான கல்வி மாறிவிட்டது. இன்றைய சூழலில் மாற்றுக் கல்வி குறித்தான தேடல்களில் காந்தி மிக முக்கியமான தரப்பாக விவாதிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- சுனில் கிருஷ்ணன், ஆயுர்வேத மருத்துவர்,

‘காந்தி இன்று’ (www.gandhitoday.in) இணையதளத்தின் ஆசிரியர்.

தொடர்புக்கு: forgandhitoday@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x