Published : 18 Apr 2015 08:30 am

Updated : 18 Apr 2015 08:30 am

 

Published : 18 Apr 2015 08:30 AM
Last Updated : 18 Apr 2015 08:30 AM

இயற்கையை அழித்து வளர்ச்சியா?

வளர்ச்சியைப் பொறுத்தவரை பொருளாதார ஆதாயத்தில் மட்டுமே குறியாக இருந்துவிடக் கூடாது.

கடந்த ஆகஸ்ட் 2014-லும், ஜனவரி 2015-லும் நடந்த தேசிய காட்டுயிர் வாரியக் கலந்தாய்வுக் கூட்டங்களில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயம் பற்றி ஆலோசிக் கப்பட்டது. காட்டுயிர் சரணாலயங்களிலும் தேசியப் பூங்கா பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள சுமார் 2,300 ஹெக்டேர்கள் இயற்கையான வாழிடப் பகுதிகள், வளர்ச்சிப் பணிகளுக்காக எடுத்துக்கொள்வது குறித்த ஆலோசனைதான் அது. அதேபோல், சென்ற ஆண்டு நடந்த வன ஆலோசனை செயற்குழுக் கூட்டங்களில், சுமார் 3,300 ஹெக்டேர்கள் பரப்பு வனப்பகுதியை 28 வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக்கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் யாவும் சாலை, ரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்ற நீள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகவே. இத்திட்டங்களில் பல பெரும்பாலும் ஒப்புதலும் பெற்றுவிடும்.


சுரங்கப் பணிகளாலும், விவசாய நோக்கங்களாலும், நீர்த்தேக்கங்களின் கீழ் அமிழ்ந்துபோவதாலும் வனப்பகுதிகள் தொடர்ந்து காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இவ்வேளையில், பல்லாயிரம் கி.மீ. நீளத்தில் இயற்கையான வாழிடங்களை ஊடுருவி அமைக்கப்படும், நெடிய சாலை, கால்வாய், ரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்றவற்றால் நமது வனங்கள் மேலும் அபாயத்துக்குள்ளாகின்றன.

சுற்றுச்சூழல் அமைச்சகமோ இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவாக அதன் வரையறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்திக்கொண்டே இருக் கிறது. உதாரணமாக, இந்த அமைச்சகம், இது போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் மத்திய நிறுவனத்துக்கு மரங்களை வெட்ட கொள்கையளவில் அனுமதி அளித்துள்ளது. இது போன்ற திட்டங்களுக்குக் கோட்ட வன அலுவலரின் அனுமதி மட்டுமே போதும். இரண்டாம் கட்ட ஒப்புதல்கள் எதையும் பெறத் தேவையில்லை.

துண்டாடப்படும் வனம்

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கும், துரிதமாக இடம்விட்டு இடம் செல்லவும், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சேவைகளுக்கும் சாலைகளும், மின்கம்பித் தொடர்களும் துணைபுரியும் என்பதென்னவோ உண்மைதான். அதே வேளையில், அவை இயற்கையான வாழிடங்களுக்கும், கிராமப்புறத்தில் வாழும் பொதுமக்களுக்கும், பழங்குடியினருக்கும் பல்வேறு வகையில் ஊறு விளைவிக்கின்றன. வாழிடங்களைத் துண்டாடுகின்றன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலைகள் அகலமாகிக்கொண்டே போவதும் வாகனப் பெருக்கமும் காட்டுயிர்கள் இடப்பெயர்வுக்குத் தடையாக உள்ளன. இதனால், பெரும்பாலான காட்டுயிர்கள் சாலைகளைக் கடந்து செல்வதைத் தவிர்க்கின்றன. சாலை விரிவாக்கத் திட்டங்களும், நான்கு வழிச் சாலைகளும் பல காட்டுயிர் களின் இயற்கையான வழித் தடங்களை வெகுவாகப் பாதிக்கின்றன.

1 கி.மீ.= 10 கொலை

இது மட்டுமல்ல, காடுகளை ஊடுருவிப் போடப் பட்டிருக்கும் சாலைகளில் சீறி வரும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி லட்சக் கணக்கான காட்டுயிர்கள் உயிரிழக்கின்றன. சின்னஞ்சிறு பூச்சிகள், பல அரிய தவளை மற்றும் ஊர்வன இனங்கள், பறவைகள், பெரிய காட்டுயிர்களான மான், சிறுத்தை, புலி ஏன் யானைகள்கூடச் சாலையில் அடிபட்டு உயிரிழந்து கொண்டிருப்பதை இந்தியாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலமாக அறிய முடிகிறது. இந்த ஆய்வு முடிவுகளின்படி இந்தியாவில் நாள் ஒன்றுக்கு, ஒரு கி.மீ. தூரத்தில், சுமார் 10 உயிரினங்கள் மடிந்துபோவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும்.

மின்னோட்டமுள்ள கம்பிகளால் எண்ணற்ற காட்டுயிர்கள் தினமும் கொல்லப்படுகின்றன. மின்கம்பிகளினூடே பறந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக பூநாரை, கானல் மயில் போன்ற பெரிய பறவையினங்கள் உயிரிழக்கின்றன. மின்வேலிகளால் யானைகளும் காட்டெருதுகளும்கூட மடிகின்றன. ரயிலில் அடிபட்டும் பல உயிரினங்கள் தினமும் உயிரிழக்கின்றன. நீள்கட்டமைப்புத் திட்டங்களெல்லாம் காட்டுயிர்ப் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளாமல் செயல்படுத்தப்படுவதையே தினமும் நிகழும் காட்டுயிர் உயிரிழப்பு காட்டுகிறது. இந்த நீள்கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் பாதிப்பு அவற்றுக்காக ஒதுக்கப் பட்ட இடத்தை விடவும் பன்மடங்கு அதிகம் என்பதே சோகமான உண்மை.

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு எந்த அளவு நீள்கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமோ அது போலவே இன்றியமையாதது ஒரு நாட்டின் வனங்கள். அழித்துவிட்டால் மீண்டும் உருவாக்க அவை ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடியினர் எனப் பல உயிர்கள் பொதிந்திருக்கும் ஓர் உயிர்ச்சூழல் அது.

நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்லவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு அறிவார்ந்த சமூகம், வளர்ச்சித் திட்டங்களைச் சிறந்த தொழில்நுட்ப உதவியுடன்தான் எதிர்கொள்ளும். அவ்வேளையில், அத்திட்டங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் அத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்பு களையும் விசாலப் பார்வையுடன் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அமைச்சகத்தின் ஆணையைப் போல் இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளைக் கோட்ட வன அலுவலர் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை இருக்கக் கூடாது.

அளவுக்கே முக்கியத்துவம்

பொருளாதார ஆதாயத்தில் மட்டுமே குறியாக இருந்துவிடக் கூடாது. நீள்கட்டமைப்புத் திட்டங் களால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளையும் நம்பகத்தன்மை யுடனும், வெளிப்படையான விதத்திலும் அளவிட்டு, அவற்றின் நீண்ட காலப் பாதிப்புகளைத் திறமையுடன் எதிர்கொள்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இது போன்ற திட்டங்கள் பெரும்பாலும் பணம் கொழிக்கும் ஒப்பந்தங்களையும் ஊழலையும்தான் உள்ளடக்கி யிருக்கும். இதனால் ‘அளவு’ என்ற விஷயத்துக்கே திட்டத்தில் முக்கியத்துவம் தரப்படும். (சாலையாக இருப்பின் அதிக நீளமான, அகலமான சாலையே அதிக ஆதாயம் தரும்.) ஆனால், வேலையின் தரம், பயன், பாதுகாப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.

உலகின் பல நாடுகளில் சாலை போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் பொறியாளர்கள், சூழலியலாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் என்று பல துறைகளைச் சார்ந்தவர் களுடன் கலந்தாலோசித்த பின்னரே அவை செயல்படுத்தப்படுகின்றன. சாலைச் சூழலியல் எனும் வளர்ந்துவரும் இந்தத் துறையில் பல்துறை வல்லுநர்கள் பயன்முறை ஆய்வுகளை (அப்ளைடு ரிசர்ச்) மேற்கொண்டு இத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தியும், இயற்கையான சூழல் பெருமளவில் பாதிப்படையா வண்ணம் தகுந்த மாற்று வழிகளையும், சரியான வடிவமைப்பையும் பரிந்துரைத்துவருகிறார்கள்.

என்ன செய்யலாம்?

இந்தியாவில் 2011-ல் அமைக்கப்பட்டிருந்த தேசியக் காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழு, சாலைகள் போன்ற நீள்குறுக்கீடுகள் தொடர்பாகப் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது. இந்தப் பதிப்பிலிருந்து ஒரு பகுதி டிசம்பர் 2014-ல் துணை நிலைக்குழு வெளியிட்ட ‘பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் சாலை’களுக்கான நெறிமுறையாக ஆக்கப்பட்டது. இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைத் தவிர்த்தலே. யானைகள் கடக்கும் பகுதிகளில் அகச்சிவப்புக் கதிர்களை வீசும் கருவிகளைப் பொருத்தி, அவை வருவதை அறிந்து, அந்தத் தகவலை ரயில் ஓட்டுநரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்ப அமைப்பை ரயில் தடங்களில் வைப்பதன் மூலம், அவை ரயிலில் அடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியும். மின்கம்பித் தொடர்களின் கட்டமைப்பில் சிறு மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது யானை போன்ற பெரிய உயிரினங்கள் கடக்கும் பகுதியில் உயரமாக வைப்பதாலும், பெரிய பறவைகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அமைப்பதாலும் அவை மின்கம்பிகளில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க முடியும்.

நீள் கட்டமைப்புகள் இயற்கையான சூழலின் மேல் கரிசனம் கொண்டு, அறிவியல்பூர்வமாகவும், சரியான வடிவமைப்புகளைக் கொண்டும் இருந்தால் பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவும், இயற்கையான வாழிடத்தையும் பாதுகாக்கும். இயற்கையை அழித்து விட்டு எந்த வளர்ச்சியையுமே சாதிக்க முடியாது என்பதைப் பொருளாதார வளர்ச்சியின் தாரக மந்திரங் களுள் ஒன்றாகக் கொள்ள வேண்டிய காலம் இது!

- டி.ஆர். சங்கர் ராமன்,

காட்டுயிர் விஞ்ஞானி, இயற்கை காப்புக் கழகம், மைசூரு.

‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ப. ஜெகநாதன்இயற்கைகாடுகள் அழிப்புவளர்ச்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

chief-minister

யார் முதல்வர்?

கருத்துப் பேழை
arakkonam-murders

அரசே, தன்னிலை உணர்!

கருத்துப் பேழை

More From this Author

x