Published : 13 Apr 2015 08:45 AM
Last Updated : 13 Apr 2015 08:45 AM

யாருடன் போரிடுகிறோம் நாம்?

‘கென்யாவில் போர் நடக்கிறது’! கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டாவே தெளிவாகச் சொல்லிவிட்டார். அரசு உயரதிகாரிகளும் இதையேதான் எதிரொலித் திருக்கிறார்கள். அரசின் கருத்தை எதிர்க் கட்சிகளும் ஆதரிக்கின்றன. சித்தாந்தத்தின் பேரில் கொல்பவர்களாகவும் கொல்லப்படு பவர்களாகவும் இருக்கும் முகமற்ற பயங் கரவாதிகள் இந்தப் போரில் கென்யாவின் எதிரிகளாக அடையாளம் காணப்பட்டிருக் கிறார்கள். இந்தத் தாக்குதல்களுக்கு அரசுத் தரப்பின் எதிர்வினை நகைப்புக்குரியதாக இருப்பதுதான் வேதனை.

அண்டை நாடான சோமாலியாவிலிருந்து வரும் பயங்கரவாதிகள்தான் கென்யாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருக்கிறார்கள் என்பதும், பயங்கரவாதத் துக்குக் காரணமானவர்களுடன் போரிட்டு அவர்களது பலத்தைக் குறைப்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியவைதான். இரு நாடுகளின் எல்லைகளிலும் தடுப்புச் சுவரை எழுப்பலாம் என்றும் கென்ய முகாம்களில் தங்கவைக்கப் பட்டிருக்கும் சோமாலிய அகதிகளைத் திருப்பி அனுப்பிவிடலாம் என்றும் சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், உள்நாட்டிலேயே பயங்கரவாதம் வளர்ந்துவருகிறது எனும் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் சமகாலத்தின் மிகப் பெரிய சோகம்.

கொடூரச் செயல்களில் ஈடுபடும் இந்தக் கோழைகளின் தொடர் நடவடிக்கைகளுக்கு, நமது பல தவறுகள் காரணமாக இருக்கின்றன என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறோம். பாதுகாப்பு அமைப்புகளில் அரசியல் கலப்பதும் ஒரு காரணம். இப்படியான சூழலில், நாம் போரிடுவது எந்த எதிரியிடம்?

காவல் துறையில் ஆயிரக் கணக்கானோரைப் பணியில் சேர்ப்பதும் அவர்களுக்குத் தேவை யான துப்பாக்கிகள், போர்த் தளவாடங்கள், வாகனங்கள் வாங்குவதற்கு பொதுநிதியிலிருந்து பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை. அதேசமயம், துல்லியமான உளவு நடவடிக்கைகளை உறுதிசெய்யும் வகையில் இந்த முதலீடுகள் பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், ஒரு துப்பாக்கி ரவைகூட வீணாகாத வண்ணம் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியும். ஒவ்வொரு முறை பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பின்னரும், அதுகுறித்து முன்கூட்டியே தகவல் உளவு அமைப்புகளுக்குக் கிடைத்தனவா, அந்தத் தகவல் முதலில் யாருக்குச் சென்றது, நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா என்று பாதுகாப்பு அமைப்புகள் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக்கொள்வதும் நடக்கிறது. பல அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோன பின்னரும் இது தொடர்வதுதான் வேதனை.

கென்ய மக்கள் மற்றும் அவர்களின் உடமைகளின் பாதுகாப்புக்குப் பொறுப் பேற்றிருக்கும் அதிகாரிகளிடம் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து, பொறுப்பான பதில்களைப் பெற அதிபர் முயல வேண்டும். காரிஸா நகரப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் நடந்த கொடூரத் தாக்குதலின்போது, சம்பவ இடத்துக்கு ரெக்கே பாதுகாப்பு படை 8 மணி நேரம் தாமதமாகச் சென்றது ஏன்? இந்தத் தாமதத்தால் எத்தனை உயிர்கள் அநியாயமாகப் பலியாயின! காரிஸா நகருக்கு விரைவதற்கான விமானத்தைப் பிடிக்க போக்குவரத்து நெரிசல் மிகுந்த திக்கா சாலையில் செல்ல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது யார்? ஏற்கெனவே பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்குப் பலியாகிக்கொண்டிருந்த மாணவர்களைக் காப்பாற்றச் சென்ற பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியினர் சாலை வழியாகவே செல்ல முடிவெடுத்தது யார்?

அதிபர் அவர்களே, எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுக்கும், குறிப்பாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் சூழலில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு, சம்பந்தப்பட்டவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். காரிஸா சம்பவத்தில் தவறுகள் நேர்ந்துவிட்டன என்று ஒப்புக்கொண் டால் மட்டும் போதாது. அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் இறுதிச் சடங்குக் கான செலவுகளை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது. படுகொலை செய்யப்பட்ட மாணவர் களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கடிதம் எழுதுவது மட்டும் போதாது. வெஸ்ட்கேட் தாக்குதல் சம்பவம், பெக்கெட்டோனி, மண்டேராவில் நடந்த தாக்குதல்கள், சமீபத்திய காரிஸா தாக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து நாம் முக்கியமான பாடங் களைக் கற்றுக்கொண்டுவிட்டோம் என்று சொன் னால் மட்டும் போதாது அதிபர் அவர்களே!

உண்மையில் யாருடன் நாம் போரிட்டு வருகிறோம்? முகமற்ற பயங்கரவாதிகளுடனா? அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான உளவுத் துறை தகவல்களை அலட்சியப்படுத்திய அதிகாரிகளுடனா? அல்லது லஞ்சம் வாங்கிக்கொண்டு எல்லையில் ஊடுருவல் நடப்பதை அனுமதிக்கும் அதிகாரிகளுடனா? அல்லது மீட்பு நடவடிக்கையில் உரிய நேரத்தில் உத்தரவிடாமல், பயங்கரவாதிகளின் பிடியில் பரிதவித்துக்கொண்டிருந்த மாணவர்களின் அலறலை அலட்சியம் செய்த அதிகாரிகளுடனா? அல்லது கிடைக்கும் லஞ்சப் பணத்தில் யாருக்கு வேண்டுமானாலும் குடியுரிமை வழங்கும் குடியுரிமை அதிகாரிகளுடனா?

உண்மையில் நமது எதிரி யார் அதிபர் அவர்களே?

கென்யா ஊடகத்தில் வெளியான தலையங்கம்

| தமிழில்: வெ. சந்திரமோகன் |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x