Last Updated : 10 Mar, 2015 08:58 AM

 

Published : 10 Mar 2015 08:58 AM
Last Updated : 10 Mar 2015 08:58 AM

வினோத் மேத்தா: இதழியல் நாயகர்



இந்திய இதழியலின் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவருக்கான அஞ்சலி!





ரிச்சர்ட் பாக் எழுதிய ‘ஜோனத்தன் லிவிங்ஸ்டன் சீகல்’ உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் திரும்பத் திரும்பப் படிக்கப்படுவதற்குக் காரணம், எல்லைகளை விரிவுபடுத்துவது சாத்தியம் என்பதை அது அற்புதமாகக் கூறுவதுதான். சாதிக்க விரும்பும் பலருக்கும் உத்வேகமூட்டும் கதைகளில் ஒன்றாக இது இருப்பதற்குக் காரணம், மனித மனத்தில் இருக்கும் அந்த அயராத வேட்கைதான்: எல்லைகளை விரிவுபடுத்துதல். வழக்கமான எல்லைகளைத் தாண்டிப் பயணம்செய்தல்.

ஜோனத்தனைப் போலப் பலர் பல துறைகளில் இருக்கிறார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் அவர்களுக்கு முன், அவர்களுக்குப் பின் என வரலாற்றை எழுதும் வகையில் பங்களித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ‘தி அவுட்லுக்’ ஆங்கில வார இதழின் ஆசிரியர் வினோத் மேத்தா.

அது ‘டெபோனர்’ காலம்!

எல்லைகளை மறுவரையறை செய்தல் என்பது வினோத் மேத்தாவின் சாகசங்களில் ஒன்று அல்ல; அது அவரது இயல்பு. விளம்பரத் துறையிலிருந்து 1974-ல் ‘டெபோனர்’ பத்திரிகையின் ஆசிரியராக அவர் இதழியல் துறைக்கு வந்தார். பாலியல் சார்ந்த உள்ளடக்கம், படங்கள் ஆகியவற்றுக்காகப் பேர்போன அந்த இதழிலும் ஆழமான இதழியலுக்கான இடத்தை உருவாக்கினார். வெகுஜனத் தளத்திலும் ஆழமான வாசிப்பைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார்.

டெபோனரின் எல்லைகளை விரிவுபடுத்திய அவரால், அதன் பொதுப் பிம்பத்தை மாற்ற முடிய வில்லை. அடல் பிஹாரி வாஜ்பாயைப் பேட்டி கண்டார். மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்தப் பேட்டியை வாஜ்பாயும் பாராட்டினார். ஆனால், “உங்கள் பத்திரிகையைத் தலையணைக்கு அடியில் ஒளித்துவைத்துக்கொண்டுதான் படிக்க வேண்டியிருக் கிறது” என்று தனக்கே உரிய கிண்டலுடன் வாஜ்பாய் கூறியபோது, தன்னால் இதழின் உள்ளடக்கத்தை மாற்றிய அளவுக்கு அதன் பொதுப் படிமத்தை மாற்ற முடியவில்லை என்பதை வினோத் உணர்ந்தார். உடனே, அந்த வேலையை விட்டு விலகினார்.

நிலைகொள்ளாத கால்கள்

அதன் பிறகு, இந்தியாவின் முதல் வாராந்தர செய்தித்தாளான ‘தி சண்டே அப்சர்வர்’ இதழைத் தொடங்கினார். அங்கிருந்து ‘இண்டியன் போஸ்ட்’, ‘தி இன்டிபென்டெண்ட்’ ஆகிய இதழ்களுக்குச் சென்றார். 90-களின் தொடக்கத்தில் டெல்லியில் ‘தி பயனியர்’ நாளிதழின் ‘எடிட்டர் இன் சீஃப்’ஆக நியமனம்பெற்றார். பணியேற்ற ஒவ்வொரு இதழிலும் பல புதிய அம்சங்களைக் கொண்டுவந்தார். நாளிதழோ வார இதழோ இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்னும் வரம்புகளையெல்லாம் தகர்த்தார். ‘தி பயனியர்’ தன் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் புத்துணர்வு பெற்றது. பல நாளிதழ்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை ‘தி பயனியர்’ ஏற்படுத்தியது.

புதிய விஷயங்கள்… புதிய கோணங்கள்

வெவ்வேறு இதழ்களில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும், எந்த இதழிலும் அவர் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ‘அதிக முறை பதவி இழந்த எடிட்டர்’ என்று அவரே தன்னைப் பற்றிக் கூறியதுண்டு. ‘தி அவுட்லுக்’ இதழில் அவரது அலைதல் முடிவுக்கு வந்தது. 1995 முதல், இறக்கும்வரை அந்தப் பதவியில் இருந்த அவர், செய்தி இதழ்களில் ஒரு புதிய சகாப்தத்தையும் தவிர்க்கவே முடியாத முன்னு தாரணத்தையும் உருவாக்கினார். புதிய விஷயங்கள், புதிய கோணங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். அணுகுமுறைகளில் புதுமை, திறந்த மனதுடன் எதையும் அணுகுவது ஆகியவை ‘தி அவுட்லுக்’ இதழின் முத்திரைகள்.

எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் பிற இதழ் களிலிருந்து மாறுபட்டு இருக்கும், அதே நேரத்தில் மாறுதலுக்கான செயற்கையான மெனக்கெடல் எதுவும் அதில் இருக்காது. கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோடியைப் பலரும் பல விதமாக அலசினார்கள். ஆனால், ‘தி அவுட்லுக்’கில் வந்த அலசல் தனித்து நின்றது. மோடியின் குரல், தொனி, உடல்மொழி, அவரது நடை, உடை, பாவனைகள் ஆகியவற்றை உளவியல்ரீதியாக அலசிய அந்தக் கட்டுரை, எப்படிப்பட்ட ஆளுமை இந்தியப் பிரதமராக முன்னிறுத்தப்படுகிறார் என்பதை விளக்கியது.

‘தி அவுட்லுக்’கின் அலசல்களில் கூர்மையும் விரிவும் ஆழமும் இருக்கும். விஷயத் தேர்விலும் அவை முன்வைக்கப்படும் விதத்திலும் நகைச்சுவை உணர்வும் இழையோடும். இவை எல்லாமே வினோத்தின் முத்திரைகள் என்பது ‘தி அவுட்லுக்’கின் கடைசிப் பக்கத்தில் அவர் எழுதிவந்த பத்தியைப் படிப்பவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். மாற்றுக் கருத்துக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் இதழின் கடிதப் பக்கங்களில் வெளிப்படும். ‘எனக்கு ஏன் அவுட்லுக்கைப் பிடிக்காது’ என்னும் தலைப்பிலும் பிரபலஸ்தர்களின் கட்டுரைகளை வெளியிடும் அளவுக்கு ஜனநாயகப் பண்பு கொண்ட இதழியலை வளர்த்தெடுத்தவர் வினோத் மேத்தா.

நீரா ராடியா உரையாடல்கள்

வித்தியாசம், புதுமை ஆகியவற்றோடு திருப்தி அடைந்துவிடுபவர் அல்ல வினோத் மேத்தா. துணிச்சலும் அவரது இதழியலின் முக்கியமான அம்சம். அலைக்கற்றை விவகாரத்தில் நீரா ராடியாவின் உரையாடல்களை வெளியிட்டதில் அது வெளிப்பட்டது. இந்திய அரசுடன் போரிடும் நக்ஸலைட்டுகளின் தரப்பு நியாயங்களைச் சொல்லும் 32 பக்க முகப்புக் கட்டுரையை வெளியிட்டபோது அந்தத் துணிச்சல் பளிச்சிட்டது. அதிகாரத்துக்கு எதிராகத் தயங்காமலும் சோர்வுறாமலும் போர் தொடுத்தவர் வினோத் மேத்தா. எவ்வளவு கடுமையாக அவர் அரசியல்வாதிகளை எதிர்த்தாலும், தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக எழுதுவதை முற்றாகத் தவிர்த்த அவருக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளிலும் நண்பர்கள் இருந்தார்கள்.

வினோத் மேத்தா தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் சுதந்திரத்தையும் திறமையையும் பெரிதும் மதித்தவர். ‘தி பயனியர்’ இதழில் ஒவ்வொரு துறைக்குமான பொறுப்பாளரை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்த அவர், அதன் பிறகு அவர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்துச் செயல்படவைத்தார் என்று அவரிடம் பணிபுரிந்தவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.

கிசுகிசுவும் நாளைய செய்தியும்

எழுத்திலும் பணியிலும் தீவிரம் காடிய அவர், வாழ்க்கையை அலட்டிக்கொள்ளும் ஆளுமை அல்ல. தனது பலவீனங்களை, குறைகள் எனப் பிறர் நினைக்கக்கூடிய விஷயங்களை, ரகசியங்களாகக் கருதப்படக்கூடிய தகவல்களை அவர் ஒருபோதும் மறைத்துக்கொண்டதில்லை. கிசுகிசுக்கள் மீது அடங்காத ஆர்வம் கொண்டிருந்த வினோத் மேத்தா, கிசுகிசுக்களுக்குள் ஒளிந்திருக்கும் நாளைய செய்தி களைத் தவறாமல் உள்வாங்கிக்கொள்வார்.

கிரிக்கெட்டின் மீது தீராத காதல் கொண்டவர். நாய்கள் மீது அளவற்ற பாசம் கொண்டவர். “இரண்டு கால் பிராணிகளைவிட நான்கு கால் பிராணிகள்தான் எனக்குப் பிடிக்கின்றன” என்று சொல்லும் அளவுக்கு நாய்களின் தோழர். அவரது எழுத்துக்களில் கூர்மையும் அங்கதமும் மட்டுமல்ல, அநாயாசமான ஒரு மிடுக்கும் இருக்கும். கர்வமற்ற தன்னம்பிக்கையும் சிறுமைப் படுத்தாத விமர்சனமும் அவர் எழுத்தில் இயல்பாகக் கூடியிருந்தன. பொது விவாதங்களில் அவரது தர்க்க முறைமையும் கருத்தை முன்வைக்கும் பாங்கும் யாரையும் கவர்ந்திழுக்கக்கூடியவை.

உண்மையை அறிய எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிப்பது, அதிகாரத்திடம் உண்மையைப் பேசுவது, வெகுஜன இதழியலில் விரிவையும் ஆழத்தையும் கூட்டுவது, சுவாரசியத்தைத் தக்க வைத்தபடி எழுத்தைக் கூர்மைப்படுத்துவது ஆகிய அம்சங்களில் வினோத் மேத்தா இதழியலுக்குப் புதிய வாசல்களைத் திறந்துவைத்துள்ளார். வாழ்க்கையை ரசித்து வாழ்ந்த அவர், தான் ஏற்றுக்கொண்ட பணி களையும் ரசித்தும் முழு ஈடுபாட்டுடனும் செய்தார். மரபான எல்லைகளை ஏற்க மறுத்துப் புதிய எல்லைகளை உருவாக்கிய வினோத் மேத்தா, இந்திய இதழியலில் அதற்காகவே பெரிதும் நினைவுகூரப்படுவார்.

பத்திரிகை வணிகரீதியாக வெற்றி அடைவதே அதன் சுதந்திரத்தை உறுதிசெய்யும் என்பது அவரது நம்பிக்கை. பொருளாதாரரீதியாக யாரையும் நம்பியிராத நிலையை அடைவதே சுதந்திரத்தை உறுதிசெய்யும் என்பது அவர் அணுகுமுறை. ‘தி அவுட்லுக்’ இதழ் இந்த அணுகுமுறைக்கு வாழும் உதாரணம். “தீவிர இதழியலைச் சற்றும் மலினப்படுத்தாமல் சுவாரசியமாகத் தர வேண்டும்” என்பதைத் தன் தொழில் கொள்கையாக அறிவித்த வினோத் மேத்தா, தனது கொள்கைகள், அணுகுமுறைகள், இதழியல் சாதனைகள் ஆகிய வற்றின் மூலம் இன்றைய இதழியலுக்கான சவால் களைத் தன் வாழ்வின் மூலம் வரையறுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்திய ஊடகம் என்னும் கோழியால் கூரையத் தாண்டியும் பறக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x