Last Updated : 17 Feb, 2015 09:45 AM

 

Published : 17 Feb 2015 09:45 AM
Last Updated : 17 Feb 2015 09:45 AM

பாஜக: கசப்பும் இனிப்பும்

அதிகாரத்தில் இருப்பவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள் மீது விதவிதமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இழுத்தடிக்கப்படுவது நடைமுறையில் உள்ள அரசியல் நிகழ்வுதான். எனினும், பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜக, தனது ‘நற்பெயருக்குக் களங்கம்’ விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துவருவதுதான் நடுநிலையாளர்களைக் கவலையுறச் செய்திருக்கிறது.

தனக்குச் சாதகமாக நடந்துகொள்பவர்கள் எந்தச் சிக்கலில் இருந்தாலும் அவர்களை மீட்டெடுப்பதிலும் பாஜக தயக்கம் காட்டுவதில்லை. வித்தியாசம் என்னவென்றால், முன்பெல்லாம் அரசியல் பழிவாங்கல்கள் சற்று மறைமுகமாகவே நடக்கும். பாஜக அரசில் பகிரங்கமாகவே எடுக்கப்படுகின்றன.

2002-ல் நடந்த குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட வர்களுக்காக நினைவிடம் அமைப்பதற்காக, வசூல் செய்த நன்கொடையில் முறைகேடு செய்ததாக சமூக சேவகர் தீஸ்டா செடல்வாட் மற்றும் அவரது கணவர் ஜாவித் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த குஜராத் போலீஸ், அவர்களைக் கைதுசெய்வதில் அதி தீவிரம் காட்டிவருகிறது. குஜராத் கலவரச் சம்பவத்தை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றவர் தீஸ்டா.

நினைவிட நிதியில் முறைகேடு?

2002-ல் அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி குடியிருப்பில் நடந்த ‘கலவர’த்தில் கொல்லப்பட்ட 69 பேருக்காக நினைவிடம் அமைப்பதற்காகத் தனது ‘சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ்’ எனும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் வசூல் செய்த ரூ. 1.51 கோடியில், ரூ. 14.2 லட்சத்தைத் தங்கள் சொந்த வங்கிக் கணக்கில் தீஸ்டாவும் அவரது கணவரும் மாற்றிக்கொண்டதாக அவர்கள் மீது 2013-ல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. குல்பர்க் சொசைட்டியின் உறுப்பினர்கள் 12 பேர் அளித்த புகாரின் பேரில், பதிவுசெய்யப்பட்ட வழக்கு இது.

முக்கியமாக, மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக அந்தப் பணம் செலவழிக்கப் பட்டதாக குஜராத் போலீஸார் கூறியிருக்கிறார்கள். இது, தீஸ்டா மீதான பிம்பத்தைச் சிதைக்கும் நடவடிக்கை என்றே சமூக ஆர்வலர்கள் கவலை யுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றம், இதைச் சுட்டிக்காட்டி, “ஏழைகளுக்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் இப்படிக் கேளிக்கை விஷயங்களுக்காகச் செலவழிப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று கண்டித்திருக்கிறது. ஆனால், அதே குல்பர்க் சொசைட்டியின் தலைவரும் செயலாளரும் இது பொய் வழக்கு என்று கூறியிருப்பதை குஜராத் போலீஸ் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். மும்பையில் வசிக்கும் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது குஜராத் போலீஸ்.

‘குற்றமற்றவர்கள்!’

அதே சமயம், குஜராத் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட 70 பேர், ‘போதிய ஆதாரமில்லாத’ காரணத்தால் விடுவிக்கப்பட்டிருக்கும் செய்தியும் வெளியாகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளும், 109 வாய்மொழி சாட்சிகளும் ஒத்துழைக்காததால், சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், சொராபுதீன் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான பிரஜாபதி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி பி.சி. பாண்டே, பிப்ரவரி 4-ல் விடுவிக்கப்பட்டார். அவருக்கு எதிரான ஆவணங்களை வழங்க குஜராத் அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாளே, இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் டி.ஜி. வன்ஸாரா, பி.பி. பாண்டே ஆகிய இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

சொராபுதீன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றமற்றவர் என்று டிசம்பர் 30-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலத்த சர்ச்சைக்குள்ளானது. ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை இது மிகப் பெரும் உற்சாகச் செய்தி. அமித் ஷா விடுவிக்கப்பட்டது தனக்கு அதீத மகிழ்ச்சியைத் தருவதாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு நேரடி தொடர்பு இருக்கிறதா என்பதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தபோது ‘நிம்மதி அடைந்ததாக’ மோடி குறிப்பிட்டார். ஆனால், தங்களுக்கு எதிராகச் செயல்படும் யாரையும் நிம்மதியாக விடுவதற்கு பாஜக தயாராக இல்லை. வேறு விதத்தில் சொன்னால், பாஜகவின் உணவகத்தில் பல்வேறு வகையான பண்டங்கள் பரிமாறப்படுகின்றன. யாருக்கு எந்தச் சுவை என்பதைத் தீர்மானிப்பதில்தான் இருக்கிறது அந்தக் கட்சித் தலைமையின் சூட்சுமம்.

- வெ. சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x